[X] Close

சென்னையில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு; வீட்டில் இருந்தாலும் பாலியல் தொல்லை: தீர்வு என்ன?


crime-against-women

  • முகமது சல்மான்
  • Posted: 04 Mar, 2018 23:01 pm
  • அ+ அ-

சென்னையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் வழிப்பறி, காதல், பாலியல் சீண்டலினால் பாதிக்கப்படுவது சென்னையில் அதிகரித்து வருகிறது.

ஒரு பெண் சகல அலங்காரத்துடன் தங்க நகைகளை அணிந்துகொண்டு இரவில் தனியாக பயமின்றி செல்லும் போதுதான் நமது நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றார் மகாத்மா காந்தி. ஆனால் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனுடன் வெளியில் சென்றாலே பறித்துச்செல்லும் நிகழ்வுகள் சென்னையில் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

செயின் பறிப்புகள் சமீபகாலமாக சென்னையில், புறநகர்களில் அதிகம் நடக்கத்  தொடங்கி உள்ளது. சாதரணமாக காலையில் வீட்டில் கோலம் போடும் பெண்களிடம் செயின் பறிப்பு, பால் வாங்க, வாக்கிங் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு என தொடங்கி தற்போது சாதாரணமாக கணவருடன் வெளியே செல்லும் பெண்களிடம்கூட தைரியமாக செயின் பறிக்கும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன.

சமீபத்தில் அரும்பாக்கத்திலும், குன்றத்தூரிலும் நடந்த நிகழ்வுகளில் பெண்கள் கீழே விழுந்து காயப்பட்டு நகைகளை பறிகொடுத்ததை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்ட பொதுமக்கள் அதிர்ந்து போயினர். பெரும்பாக்கத்தில் மென் பொறியாளர் லாவண்யா வழிப்பறி கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்டு நகை, செல்போன், வாகனத்தை பறி கொடுத்தார். அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகிப் போனது.

மேற்கண்ட சம்பவங்களில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டாலும் சில நாட்களில் அவர்கள் வெளியே வந்து மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள், கடந்த வாரம் திருவான்மியூர் கலாஷேத்ரா காலனி அருகே பெண் ராணுவ அதிகாரியிடம் செல்போனை பறித்துச்சென்ற இரண்டு வாலிபர்கள் சிக்கினர். அவர்கள் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

பெண்கள் எங்கும் தனியாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு செயின் பறிப்புகள் அதிகரித்து வருகின்ற அதே வேளையில் அதைவிட பல மடங்கு செல்போன் பறிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான சம்பவங்கள் சென்னை மற்றும் புறநகர்களில் நடக்கிறது. இதில் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களே ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.

இதிலும் கல்லூரிக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சாதாரணமாக மிரட்டி செல்போனை பறித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. போலீஸ் ஸ்டேஷனுக்கு போனால் செல்போன் காணவில்லை என்று புகார் கொடுங்க என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி விடுகிறார்கள். இதனால் புகார்கள் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே செல்வதில்லை.

ஈவ் டீசிங் என்பது சாதாரணமாக நகர வாழ்க்கையில் அதிகரித்து வருகின்றது. கும்பலாக மோட்டார் சைக்கிளில் வருவதும் பெண்களை வம்பிழுப்பதும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வாக சென்னை மாறி வருகிறது.

 சென்னையிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயிலில் பெண்கள் பாதுகாப்புடன் செல்வது கேள்விக்குறியாகி வருவதாக அதில் தினமும் பயணிக்கும் பயணிகள் தெரிவிக்கின்றனர். பல ரயில் நிலையங்கள் குற்றவாளிகள், சமூக விரோதிகள் கூடும் இடமாக உள்ளது பெண்கள் தனியே நிற்பதற்கு அஞ்சும் நிலையில் உள்ளது என்று கூறுகின்றனர்.

வெளியிடங்களில், பொதுவெளியில், பணிபுரியும் இடங்களில், பள்ளியில் பெண்களுக்கான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள், மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது நடக்கிறது. பெண்கள் மீதான ஆணாதிக்க பார்வையின் கோளாறும் காவல் நிலையங்களில் இத்தகைய குற்றங்களை கண்டுகொள்ளாமல் விடுவது, அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குரலை கேட்காமல் அலட்சியப்படுத்துவதும் இத்தகைய ஆட்களின் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது.

சமீபத்தில் 6 வயது சிறுமி ஹாசினியின் படுகொலை நமக்கு பல பாடங்களை உணர்த்தினாலும், காவல்துறையோ, பெற்றோரோ குழந்தைகளை அவர்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் பக்கம் நியாயத்தை கேட்க மறுப்பதும் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகிறது. பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாதிரியார் அவர் தலைமை ஆசிரியரும் கூட அவர் 11 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தனது தாயிடம் நீண்ட நாட்களுக்கு பின் அந்த சிறுமி கூற இரண்டு மூன்று ஸ்டேஷன்களில் ஏறி இறங்கியும் அந்த பெற்றோரின் புகாரை வாங்க போலீஸார் மறுத்து விட்டனர். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் சமீபத்தில் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் குழந்தைகளுக்கான போக்ஸோ சட்டமும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை கையாள்வது குறித்தும் வகுப்பெடுக்கப்பட்டதுதான்.

பின்னர் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன்னர் கூடி நடத்திய போராட்டத்தின் விளைவு உதவி ஆணையரே நேராக வந்து புகாரை பெற்று பாதிரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஜெயபாலன் என்கிற நபர் அந்த ஒரு குழந்தையிடம் மட்டும் தான் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பார் என்று யாராவது சொல்ல முடியுமா? ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்லாமல் தயங்குவதும், வெளியே சொன்னாலும் போலீஸார் அதை கண்டுகொள்ளாமல் விடுவதும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு ஊக்கத்தைத் தருகிறது.

இதே போல் வேளச்சேரியில் தன்னை காதலிக்க மறுத்த இந்துஜா என்ற இளம்பெண்ணை ஆகாஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் அவர் உயிரிழந்தார், அவரை காப்பாற்ற முயன்ற தாயார் ரேணுகா மற்றும் தங்கை நிவேதிதாவும் உயிரிழந்தனர்.

கடந்த வாரம் மடிப்பாக்கத்தில் ரத்தப் பரிசோதனை மையத்தில் பணியாற்றிய 32 வயது இளம்பெண் யமுனா அம்மையத்தின் முதலாளியின் பாலியல் சீண்டலுக்கு உடன்படாததால் எரித்துக் கொல்லப்பட்டார்.

ஒரு பெண்ணை தொடர்ந்து ஆறுமாதம் கட்டாயமாக பின் தொடர்ந்தால் அவர் தானாக தனது விருப்பத்துக்கு வந்துவிடுவார், காதலிக்க ஆரம்பித்துவிடுவார் என்பது ஆண்டாண்டு காலமாக சினிமா கதாநாயகர்கள் தியரி. நம்மிடையே வாழும் ஒவ்வொரு ஆண் மகனுக்குள்ளும் உள்ள இந்த கதாநாயகத்தனம் வெளிப்படும் போதுதான் கொலைச் சம்பவம் நடக்கிறது.

தங்களது காதலை மறுத்த நந்தினி, சுவாதி, வினோதினி, வித்யா, சோனியா , கரூர் சோனாலி, விழுப்புரம் வீணா, கடந்தவாரம் மதுரை திருமங்கலத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சித்ராதேவி என காதல் என்ற பெயரில் கொல்லப்படுவோர் பட்டியல் நீள்கிறது.

வெளியில் வந்தால் தான் இந்த பிரச்சினை என்றால் வீட்டில் இருந்தாலும் பிரச்சினைதான் என்பது நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்றதும், அவர் ஒத்துழைக்காததால் கொலை செய்ய முயன்ற நிகழ்வும் நடந்துள்ளது. அதை ஒட்டி பிஹார் வாலிபர் ஒருவரின் கைதும் எடுத்துக்காட்டுகிறது.

சென்னை அடையாரில் ஐ.நா அலுவலகம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

அவர் கூச்சல் போடவே தலையைச் சுவற்றில் மோதியும், கழுத்தில் பிளேடால் அறுத்தும், உடலில் கடித்து குதறியும் வாலிபர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இளம்பெண் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும் மாணவி அலறல் சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற வரவில்லை. பின்னர் காப்பாற்றப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவிக்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயன்ற பீஹாரை சேர்ந்த நிர்பய்குமாரை போலீஸார் பிடித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீஸாருக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டாலும் நடைமுறையில் காவல் நிலையங்களில் பெண்கள் குழந்தைகள் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தும் போக்கே உள்ளது. இது குறித்து குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் குறித்த பயிற்சி அளிக்கும் பேராசிரியர் ஆண்ட்ரூவிடம் ‘இந்து தமிழ் இணையதளம்’ சார்பில் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது:

குழந்தைகள் நல அதிகாரிகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இருக்க வேண்டும் என நடைமுறை இருந்தும் இதுபோன்ற குற்றங்களில் நியாயம் கிடைப்பதில்லையே?

தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் குழந்தைகள் நல அதிகாரிகள் எஸ்.ஐ. அந்தஸ்தில் உள்ளனர். பயிற்சிக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் குழந்தைகள், பெண்களுக்கெதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.

ஆனால் நடைமுறையில் அது இல்லையே?

அதற்கு காரணம் குழந்தைகள் நல அதிகாரியிடம் இந்த வழக்குகள் செல்வதற்கு முன்னர் மற்ற போலீஸார் இது போன்ற வழக்குகளை கவனிக்கின்றனர். இதனால் பின்னடைவு ஏற்படுகிறது.

குழந்தைகள் நல அதிகாரிகள் ஸ்டேஷனில் இருக்கும் போது அவர்களிடம் செல்ல வேண்டும் என்ற வழிகாட்டுதலை அரசுதானே வழங்க வேண்டும்?

உண்மை, இது குறித்து போர்டு ஒன்று அனைத்து காவல் நிலையங்களிலும் வைக்க கோரிக்கை வைத்துள்ளோம். சாதாரண குற்ற வழக்குகளை வழக்கமாக கவனிக்கும் போலீஸார் அதே பார்வையில் குழந்தைகள், பெண்களுக்கெதிரான குற்றங்களையும் பார்ப்பதன் எதிரொலி இது.

சமீபகாலமாக காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொல்லும் போக்கு அதிகரித்து வருகிறதே?

நமது கல்வி அமைப்புகள் எண்ணையும், எழுத்தையும் கற்றுத்தரும் கூடங்களாக மட்டுமே உள்ளன. வாழ்வியல் பயிற்சி என்கிறார்கள் அதுவும் வழக்கமான பாடம் போல் தான் போகிறது. சிறுவயதில் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்று குழந்தைகள் வளர்ந்தார்கள். இன்று ஆண்ட்ராய்டு யுகமாகி விட்டது. தோல்வியா வேண்டாம் என்கிற மனப்பான்மையுடன் வளரும் இளைஞன் காதலை நோ சொல்லும்போது அடுத்து கொல்லும் முடிவுக்கு செல்கிறான்.

நம்மில் எத்தனை பேர் பெண்களை அங்கீகரிக்கிறோம். நமக்கு அத்தகைய கல்வி அளிக்கப்படவில்லையே. இச்சைப்பொருளாக பார்க்கும் ஆணாதிக்க பார்வை தான் உள்ளது. இதன் விளைவுதான் நந்தினி, ஸ்வாதி தொடங்கி நேற்றைய யமுனா, சித்ரா தேவி வரை தொடர்கிறது. கல்வி முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அது மட்டுமே மாற்றத்தை கொண்டு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டும் திரைப்படக்காட்சிகள், கருத்துகளுக்கு எதிரான பிரச்சாரம் போன்றவைகளும், கல்வி முறையில் கொண்டுவரப்படும் மாற்றம் போன்றவை நல்ல சமுதாய மாற்றத்தைக் கொண்டு வரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close