[X] Close

பாதுகாப்பற்ற நகரமாகிறதா சென்னை?


chennai-crime-story

  • Team
  • Posted: 02 Mar, 2018 11:58 am
  • அ+ அ-

சென்னையில் அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்கள் அதிர்ச்சிதருகின்றன. சங்கிலிப் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் கொலை, தாக்குதல் எனும் அளவுக்குத் தீவிரமடைந்திருப்பது வட மாநில நகரங்கள்போல் சென்னையும் பாதுகாப்பற்ற நகரமாக மாறுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்கி யிருக்கிறது.

பிப்ரவரி 10 அன்று நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் தமிழகத்தையே உலுக்கின. தங்க நகைக்காக மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்குக் கொடூரமான முறையில் நடந்துகொண்டவர்கள் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்பது வேதனை.

பிப்ரவரி 13 அன்று நள்ளிரவில் தாழம்பூர் - பெரும்பாக்கம் பிரதான சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் மென்பொறியாளரைத் தாக்கி வழிப்பறி செய்திருக்கிறார்கள். ஆடம்பரச் செலவுகளுக்காக ஒரே நாளில் 14 பேரிடம் செல்போன்கள் பறித்த கல்லூரி மாணவர் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம்.

சென்னையில் வீடு புகுந்து திருடுவது போன்ற குற்றங்கள் குறைந்துவருகின்றன. மறுபுறம் வழிப்பறிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2016-ல் 448 சங்கிலிப் பறிப்பு சம்பவங்களும், 179 செல்போன் பறிப்பு சம்பவங்களும் பதிவாகி உள்ளன. 2017-ல் 616 சங்கிலிப் பறிப்பு சம்பவங்களும், 520 செல்போன் பறிப்பு சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதில் நீடித்த கவனம் அவசியம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்வது மட்டும் போதாது. அவர்களின் பின் புலத்தை ஆராய்வது, குற்றவாளிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்றவை முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதில்லை.

குறிப்பாக, சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் முன்பு காட்டிய தீவிரத்தைக் காவல் துறையினர் தற்போது கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் பாதிக்கப்பட்ட பலரின் ஆதங்க மாக இருக்கிறது.

சென்னையில், சமீப காலமாக சங்கிலிப் பறிப்பு சம்பவங்களைவிட செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. செல்போன் பறிப்புதானே என்று இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதன் பின்னணியில், இருக்கும் தகவல்கள் அதிர வைப்பவை.

நகரில் செல்போன் பறிப்புகள் ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கில் நடைபெறுவதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். காலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள், தனியாக நடந்துசெல்லும் பெண்கள் போன்றவர்கள் இத்தகைய குற்றங்களில் எளிய இலக்காகிறார்கள்.

“இப்படிப்பட்ட குற்றங்களில் சிறார்களும் இளைஞர் களுமே பெருமளவில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகம். இவர்களைச் சிறையில் அடைக்க முடியாது. கூர்நோக்கு இல்லத்தில்தான் வைக்க வேண்டும்.

எங்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. சில நாட்களில் வெளியே வரும் சிறுவர்கள் மீண்டும் வேலையைக் காண்பிக்கிறார்கள்” என்கிறார் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர்.

பெற்றோர் கண்காணிப்பில் இல்லாதது, போதைப் பழக்கம் போன்றவற்றின் காரணமாக இளைஞர்கள், சிறார்கள் பணத் தேவைக்காக இதுபோன்ற குற்றச் செயல்களில் இறங்கிவிடுகிறார்கள் என்கிறார் இதை வெகு காலமாகக் கவனித்துவரும் நுண்ணறிவுப் பிரிவுக் காவலர் ஒருவர்.

பெரும்பாலும் குடிசைப் பகுதிகளில் சுற்றித் திரியும் சிறார்களே இதில் பெருமளவில் ஈடுபடுகிறார்கள் என்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். செல்போன் பறிப்பு, சங்கிலிப் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தற்போது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்கள்.

அதிவேக மோட்டார் பைக்குகள், கத்திகளுடன் வலம்வரும் இவர்கள், இப்போதெல்லாம் தனியாக இருப்பவர்களிடம் கத்தி யைக் காட்டி மிரட்டியே உடைமைகளைப் பறித்துச் செல்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் பல்லாவரத்தில் நடந்த வாகனச் சோதனையில், ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு சிறுவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தபோது, அவர்களிடம் ஒன்றரை அடி நீளக் கத்தியும் 14 செல்போன்களும் இருந்தது தெரியவந்தது.

அவர்களில் இரண்டு பேர் 14 வயதுச் சிறுவர்கள். சமீபத்தில் கோட்டூர்புரம் சாலையில், பெண் நீதிபதியான தன் தாயுடன் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடமிருந்து விலை உயர்ந்த செல்போனைப் பறித்துச்சென்றனர் இரண்டு இளைஞர்கள்.

கடந்த மாதம், தனது நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவு 11.45 அளவில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர் ஒருவர், இதுபோன்ற கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டார்.

அவரிடமிருந்து செல்போனைப் பறிக்கும் முயற்சியில் கழுத்தில் கத்தியால் குத்திக் கொன்றவர்கள் மூன்று இளைஞர்கள். 21 வயதுக்கு உட்பட்டவர்கள். செல்போன் பறிப்பையே தொழிலாகச் செய்துவந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட முறை செல்போன் பறிப்பை வெற்றிகரமாகச் செய்து, போலீஸ் கையில் சிக்காமல் வலம்வந்துள்ளனர்.

குற்றங்களைத் தடுப்பதில் காவல் துறையினர் போதிய கவனம் செலுத்துவதில்லை. வாகனச் சோதனை என்ற பெயரில் அப்பாவிகளைப் பிடிப்பது, வாகனச் சோதனையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் லஞ்சம் வாங்குவது என்று காவல் துறையினர் தரப்பில் தவறுகள் நேர்கின்றன.

இதனால், குற்ற வாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். போதைப் பழக்கத்துக்கு ஆளான இளைஞர்கள் செல்போன், சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும்போது, அதில் சிக்கும் பெண்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் சிக்கிக் காயமடையும் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடும் உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.

கொடுமை என்னவென்றால், இத்தனை வலிகளுடன் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்கச் செல்லும்போது அவர்கள் கனிவுடன் நடத்தப்படுவதில்லை என்ற புகாரும் எழுகிறது.

சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, ஊடகங்கள் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டால், குற்றத்தின் வீரியத்தைப் பொறுத்து குற்றவாளிகள் கைதுசெய்யப்படுகின்றனர் என்றே சொல்லலாம். சில வாரங்களுக்கு முன் வில்லிவாக்கத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இந்திரா என்ற பெண்ணின் கழுத்திலிருந்து 15 சவரன் சங்கிலியைப் பறித்திருக்கிறார்கள்.

தடுக்கப் போராடிய அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன்னர் ஜெமினி மேம்பாலம் அருகே செய்தித் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு ஆசிரியர் ஒருவரிடமிருந்து செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இப்படிப்பட்ட சம்பவங்களால், சென்னையில் தனியே செல்லும் இளம் பெண்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

போலீஸாருக்கு நவீன வசதிகள் உள்ள வாகனங்கள், தனித்தனி அதிகாரிகள், அதிகபட்ச ரோந்து வாகனங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், குற்றங்களைக் களைய முடியவில்லை. கண்காணிப்பு கேமராவை ஆராய்வதும், செல்போனை ‘டிராக்’ செய்வதும்தான் போலீஸாரின் அதிகபட்ச துப்பறியும் திறன் என்றாகிவிட்டது. எனவே, காவல் துறை புனரமைக்கப்பட வேண்டும்.

முன்பிருந்த ‘காவல் நண்பர்கள்’ முறையை வலுப் படுத்துவது, குற்றப்பிரிவில் திறமை வாய்ந்த ஆய்வாளர்கள், காவலர்களை நியமிப்பது, கடுமையான வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் குற்றங்களைத் தடுக்க முடியும்.

குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களின் பின்னணியைத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் ஏழ்மை, கவனிப்பின்மை, ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகளைக் களைவதில் அரசும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

குற்றங்களைக் களைவதில் தண்டனைகளுக்கு மட்டுமல்ல, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் முக்கியப் பங்குண்டு என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்!

- மு.அப்துல் முத்தலீஃப்,

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close