[X] Close

திருமணத்துக்கு மறுத்த காதலியை கொல்ல முயன்ற இளைஞர் கைது


murder-attempt

கைதான ஷபீர்.

  • kamadenu
  • Posted: 01 May, 2018 11:35 am
  • அ+ அ-

திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை கொல்ல முயன்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ஷபீர் (23). தனியார் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 3 ஆண்டுகளாக காட்பாடி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் மதம் மாறவேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் ஷபீர் கூறியுள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்காத நிலையில், மதம் மாறவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்று ஷபீரிடம் அந்த இளம்பெண் உறுதியாக கூறிவிட்டார். திருமணம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதற்கிடையில், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் ஷபீரும் இளம் பெண்ணும் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக சாப்பிட்டுள்ளனர். பின்னர், வீட்டுக்கு கிளம்பும்போது திருமணம் செய்துகொள்வது தொடர்பாக ஷபீர் பேசத் தொடங்கியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஷபீர் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை வெட்டியுள்ளார். 

பின்னர், அவரே படுகாயமடைந்த காதலியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 

இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் விசாரித்தார். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், காதலியை கொலை செய்ய முயன்றதை ஷபீர் ஒப்புக்கொண்டார். 

கொலை முயற்சியில் படுகாயமடைந்த இளம் பெண்ணுக்கு அழகான சிறிய கத்திகளை சேகரிக்கும் பழக்கம் இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கத்தியை ஷபீருக்கு அவர் பரிசாக அளித்துள்ளார். 

அவர் பரிசாக அளித்த கத்தியாலேயே ஷபீர் கொலை செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக, ஷபீர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்’’ என்றனர். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close