[X] Close

திண்டுக்கல்லில் போலீஸாருக்கு சவால்விடும் சங்கிலி பறிப்பு திருடர்கள்


dindugal-chain-snatching

சித்தரிப்புப் படம்

  • kamadenu
  • Posted: 26 Apr, 2018 11:30 am
  • அ+ அ-

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸாருக்கு சவால்விடும் வகையில், சங்கிலி பறிப்பு திருடர்கள் காவல்நிலையம் அருகே மற்றும் எஸ்.பி. அலுவலகம் அருகே என தங்கள் கைவரிசையை தொடர்ந்து காட்டி வருகின்றனர். திண்டுக்கல்லில் அடுத்தடுத்து நடந்துவரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் தொடக்கம் முதலே திருடர்கள் நடத்திய பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கச் சங்கிலியை பறிகொடுத்துள்ளனர். இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை. மாவட்டத்தில் அடுத்தடுத்து சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் தொடர்வதால் பெண்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், பட்டப்பகலில் ஆசிரியர் காலனியில் உள்ள வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், கோடை விடுமுறைக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்குச் செல்லலாமா என மக்களை யோசிக்க வைத்து விட்டது. 

தொடரும் சங்கிலி பறிப்பு

ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே தங்கள் கைவரிசையை காட்டத் தொடங்கினர் ஹெல்மெட் அணிந்த பைக் திருடர்கள். மாவட்டத்தில் திருடர்கள் களம் இறங்கிய முதல் நாளிலேயே, பழநியில் இரண்டு பேர், செம்பட்டி அருகே பாளையங்கோட்டையில் ஒருவர், ஒட்டன்சத்திரத்தில் இருவர், திண்டுக்கல் விவேகானந்தா நகரில் ஒருவர் என ஒரே நாளில் ஆறு பெண்களிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர்.

ஒரே நாளில் மட்டும் 20 பவுன் நகை வழிப்பறி செய்யப்பட்டது. ஆனால் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுக்காததால் அடுத்த நாள், அதற்கு அடுத்து என தொடர்ந்து சங்கிலி பறிப்பு நடக்கிறது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட பெண்களிடம் 50 பவுன் நகைகளை வழிப்பறி செய்துள்ளனர்.

காவல்நிலையம் அருகேயே சங்கிலி பறிப்பு

நேற்று முன்தினம் மட்டும் இரு பெண்களிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்டது. இதில் ஒன்று திண்டுக்கல் காவல்நிலையம் அருகே நடந்தது. நேற்று காலை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே, சில அடி தூரத்திலேயே செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அங்குத்தாய் (30) என்பவரிடம், ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பறித்துச் சென்றனர்.

எஸ்.பி. அலுவலகம் முன் போலீஸார் நடமாட்டம் எப்போதும் இருக்கும் நிலையில், சில அடி தூரத்தில் போலீஸாருக்கு சவால்விடும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இனிமேலாவது கூடுதல் தனிப்படைகளை அமைத்து, பெண்களின் பாதுகாப்பை போலீஸார் உறுதி செய்ய வேண்டும்.

கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்லலாம் என்று நினைத்திருந்த பலரும், பாதுகாப்பு கருதி பயணத்திட்டத்தையே கைவிடும் சூழல் மாவட்டத்தில் நிலவுகிறது. இதற்கு காரணம் பூட்டியிருந்த வீடுகளில் பட்டப்பகலில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம்தான்.

போலீஸார் காலையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என பாதுகாப்புக்குச் செல்வதும், பின்னர் மாலையில் காவல் நிலையத்துக்கு வரப்பெற்ற புகார்களை பேசி தீர்ப்பதுமாகவே பணிகள் செல்கிறது. ரோந்துப் பணி என்பது மிகவும் குறைந்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். எந்தப் பகுதியில் திருட்டு நடைபெற்றதோ அந்தப் பகுதியில் மட்டும் ஒப்புக்கு போலீஸார் ரோந்து வருகின்றனர்.

போலீஸார் பற்றாக்குறை என காரணம் கூறப்பட்டாலும், காவலர்களை ஒருங்கிணைத்து அதிகாரிகள் முழு வீச்சில் களம் இறங்கினால்தான் வழிப்பறித் திருடர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால், மாவட்டத்தில் நாள்தோறும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாத நிலையே உள்ளதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

- பி.டி. ரவிச்சந்திரன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close