[X] Close

போலி ஏடிஎம் கார்டு மோசடி நபர்களுக்கு சர்வதேச கொள்ளை கும்பலுடன் தொடர்பு: புதுச்சேரியில் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை


fake-atm-cards

பிரதிநிதித்துவப் படம்.

  • kamadenu
  • Posted: 21 Apr, 2018 11:01 am
  • அ+ அ-

புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட போலி ஏடிஎம் கார்டு மோசடி கும்பலுடன் சர்வதேச கொள்ளை கும்பல், வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி பிருந்தாவனம், சித்தன்குடி பிரதான சாலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபடுவதாக சிபிசிஐடி போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் லாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகிய இருவரை இரு தினங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் மிஷின், ரகசிய கேமிராக்கள் மூலம் பொதுமக்களின் தகவல்களை திரட்டி போலியான ஏடிஎம் கார்டுகள் தயார் செய்து அதன் மூலம் பொதுமக்களின் வங்கி பண பரிவர்த்தனையை தெரிந்து கொண்டு, அவர்களின் பணத்தை பிஓஎஸ் மிஷின் மூலம் ஸ்வைப் செய்து தங்களுடைய வங்கி கணக்கில் மாற்றம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் ஸ்கிம்மர் மிஷின், ஸ்வைப் மிஷின் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், கைதானவர்களுக்கு சர்வதேச அளவில் ஏடிஎம் மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக தனியாக ஆன்லைன் இணைப்பை உருவாக்கி அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு

இதில் பல்வேறு வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கைதான நபர்களுடன் தொடர்புடைய சென்னை மற்றும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலாஜி, ஜெயசந்திரன் இருவரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற காவல் விசாரணைக்கு அனுமதி வழங்கியதும் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close