[X] Close

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் அறிவித்த அரசு பெண் மருத்துவர் கைது


child-paalinam-doctor-arrest

பிரதிநிதித்துவப் படம்.

  • kamadenu
  • Posted: 21 Apr, 2018 10:26 am
  • அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவித்த அரசு பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டார மருத்துவமனையில் முதுநிலை மருத்துவராக பணியாற்றி வருபவர் தமயந்தி (53). இவர் ஆத்தூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவர் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து பார்த்து, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வந்துள்ளார். மேலும், பெண் குழந்தையாக இருந்தால், கருக் கலைப்பு செய்து வருவதாக மருத்துவ பணிகள் இயக்குநரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.

மருத்துவ பணிகள் இயக்குநர் இன்பசேகரன் உத்தரவின் பேரில், சென்னையில் இருந்து இயக்குநரக கண்காணிப்பாளர் கமலக்கண்ணன், ரேடியோ கதிரியக்க வல்லுநர் மருத்துவர் நடராஜன், பாலினம் தெரிவித்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் மருத்துவர் பிரபாகரன், சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் சத்யா உள்ளிட்ட பத்து பேர் கொண்ட குழுவினர் நேற்று முன் தினம் மருத்துவமனைக்கு ரகசியமாக சென்றனர். இக்குழுவினர் தங்களுடன் கர்ப்பிணி ஒருவரையும் உடன் அழைத்துச் சென்று, கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா என பரிசோதனை செய்து தெரிவிக்கும்படி கேட்டுள்ளனர்.

முன் பதிவுக்காக ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை தெரிவித்தது.

இதையடுத்து அங்கிருந்த குழுவினர் டாக்டர் தமயந்தியை கையும் களவுமாக பிடித்தனர். நாமக்கல், திருச்சி , பெரம்பலூர் ஆகிய இடங்களில் இருந்து பரிசோதனைக்கு வந்திருந்தவர்களிடமும், மருத்துவமனை ஊழியர்களிடம் சென்னை மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஆத்தூர் காவல் நிலையத்தில் அரசு பெண் மருத்துவர் தமயந்தி மீது புகார் அளிக்கப்பட்டது. அறிவிப்பு தடை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மருத்துவர் தமயந்தியை கைது செய்து, சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். ஆர்டிஓ செல்வன் தலைமையிலான அதிகாரிகள் தமயத்தியின் மருத்துவமனை, ஸ்கேன் மையத்தை பூட்டி சீல் வைத்தனர். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவர் தமயந்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஸ்கேன் மையம் ஏற்கெனவே மூன்று முறை சீல் வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி மீண்டும் மருத்துவர் தமயந்தி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள ரசீது புத்தகத்தை போலீஸார் கைப்பற்றி, யார் யாருக்கெல்லாம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு பணம் பெற்றுள்ளார் என போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில் புரோக்கர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close