[X] Close

ஆம்லெட்டில் உப்பு இல்லாததால் தகராறு: மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு


திருபுவனை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட மதுபான கூடத்தில் போலீஸார் சோதனை செய்கின்றனர்.

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 12:34 pm
  • அ+ அ-

ஆம்லெட்டில் உப்பு இல்லாத தகராறில் திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் தனியார் மதுக்கடை மீது 5 நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை மாநிலம் திருபுவனை ஆண்டியார்பாளையம் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு மதுபான கடையுடன் மது அருந்தும் இடமும் உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் கலைவேந்தனுக்கும், விழுப்புரம் மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த தீனாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. தீனா மீது கொலை வழக்கு உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை இந்த மதுக்கடைக்கு மது அருந்த 2 பேர் வந்தனர். அப்போது மது வாங்கிவிட்டு அங்குள்ள மதுபானக்கூடத்தில் ஆம்லெட் வாங்கினர். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆம்லெட்டில் உப்பு இல்லை எனக் கூறி மதுபானக்கடை ஊழியர் அன்புவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த நபர்களுக்கு புதிதாக ஆம்லெட் வழங்கப்பட்டது.

இதுபற்றி மதுபானக்கடை ஊழியர் அன்பு, கடை உரிமையாளர் கலைவேந்தனிடம் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த கலைவேந்தன் ஆம்லெட்டுக்காக தகராறு செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட 2 பேரும் அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்குச் சென்றனர். அதைத் தொடர்ந்து, அந்த நபர்கள் மீண்டும் மதுக்கடைக்கு வந்தனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளை மதுபானக்கூடம் மீது வீசினர். அவை பலத்த சப்தத்துடன் வெடித்தன. அப்பகுதியே புகைமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து மதுபானக்கூடத்தில் இருந்து அன்பு வெளியே ஓடி வந்தார். உடனே அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அவரை தாக்க முயன்றனர். இருப்பினும் அவர்களிடம் சிக்காமல் அன்பு தப்பி ஓடினார். 

இதற்கிடையே வெடிகுண்டு சப்தம் கேட்டவுடன் அங்கு மதுகுடித்து கொண்டிருந்த குடிமகன்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் திருபுவனை காவல் ஆய்வாளர் கலைச்செல்வன், உதவி ஆய்வளர் பிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதுக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதிவுகள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

அப்போது, தமிழக பகுதியான கோலியனூரைச் சேர்ந்த தீனா (எ) தினகராஜ் (27), எல்.ஆர். பாளையம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் சுகுமார் (22) ஆகியோர் மதுபானக்கூடம் மீது வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close