[X] Close

வடபழனியில் பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை: தாக்குதலில் காயமடைந்த கணவருக்கு தீவிர சிகிச்சை


கணவர் பாலகணேஷுடன் ஞானப்பிரியா,

  • kamadenu
  • Posted: 06 Apr, 2018 13:00 pm
  • அ+ அ-

வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த தம்பதிகளை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள் நகைகளை திருடிக்கொண்டு தப்பினர். இதில் தலையில் பலமாக தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்தார். கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை வடபழனி சிவன் கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிபவர் பாலகணேஷ் (40). இவரது மனைவி ஞானப்பிரியா (35). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் ஆகும். வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் வீட்டின் வெளிப் பக்கம் உள்ள குளியலறையில் இருந்து நேற்று காலை சத்தம் கேட்டுள்ளது. அதே தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் விஜயலட்சுமி சென்று பார்த்தபோது, குளியலறை கதவு திறந்து கிடந்தது. கைகளும், கழுத்தும் கட்டப்பட்ட நிலையில் உள்ளே பாலகணேஷ் மயங்கிக் கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி இதுபற்றி ஞானப்பிரியாவிடம் சொல்வதற்காக அவரது வீட்டு கதவை தட்டியுள்ளார். வீட்டின் கதவும் திறந்த நிலையிலேயே இருந்தது. அங்கு கைகள் கட்டப்பட்ட நிலையில், ஞானப்பிரியா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது தலையின் பின்பகுதி பலமாக தாக்கப்பட்டிருந்தது.

உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் விஜயலட்சுமி தகவல் கொடுத்தார். வடபழனி போலீஸார் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸில் வந்த ஊழியர்கள், அவர்கள் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஞானப்பிரியாவை சோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பலத்த காயங்களுடன் கிடந்த பாலகணேஷ் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொலை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

அதிகாலையில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஞானப்பிரியா அணிந்திருந்த ஒருசில நகைகள் திருடப்பட்டுள்ளன. பல குடித்தனங்கள் உள்ள நெருக்கமான இடத்தில் கொள்ளையர்கள் புகுந்தது எப்படி? தம்பதியர் தாக்கப்பட்டபோது, அருகில் உள்ளவர்களுக்குகூட சத்தம் கேட்காதது ஏன்? ஒருசில நகைகளை மட்டும் அவர்கள் திருடிச் சென்றது ஏன்? இது உண்மையிலேயே நகைக்காக நடந்த கொலையா, அல்லது, போலீஸை திசை திருப்புவதற்காக நகை திருடப்பட்டதா? என பல கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாலகணேஷுக்கு தெரிந்தவர்கள் யாராவது இந்தக் கொலையில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகமும் உள்ளது. அந்த கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close