[X] Close

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் சிறுவன் கைது


juvenile-arrested-for-rape-and-murder

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 12:05 pm
  • அ+ அ-

புதுச்சேரியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி குயவர்பாளையம் நல்ல தண்ணீர் கிணற்று வீதியைச் சேர்ந்தவர் அம்சபிரபா (25). தேசிய வங்கி ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு வரும் ஜனவரி 27-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதனிடையே கடந்த 18-ம் தேதி பூட்டிய வீட்டினுள் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார், தற்கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது பின்பக்க தலை மற்றும் முகம் உள்ளிட்ட பல இடங்களில் காயம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.

பின்னர் தனிப்படையினர் அம்சபிரபா வீட்டின் அருகே வசிக்கும் இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து சந்தேகத்துக்கிடமாக சென்ற இரண்டு இளைஞர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர்களை போலீஸார் விடுவித்தனர்.

கொலையாளி யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், 17 வயது சிறுவனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அச்சிறுவன் இந்த கொலையை செய்தது உறுதியானது. இதையடுத்து சிறுவனை கைது செய்து, அவனிடம் இருந்து செல்போன், வீட்டு சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலில் வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததாக தகவல் வந்ததால் தற்கொலை என்று முடிவு செய்து வழக்கு பதியப்பட்டது. பின்னர் மருத்துவ அறிக்கையை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினோம்.

“சிறுவன் தனது வீட்டில் புறா வளர்த்து வருகிறான். கடந்த 18-ம் தேதி அம்சபிரபா வீட்டிற்கு புறா சென்றுள்ளது. அதனால் அங்கு புறாவை பிடிக்க சிறுவன் சென்றுள்ளான். அப்போது அம்சபிரபா தடுத்து திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், அம்சபிரபாவை கல்லால் தாக்கியுள்ளான். இதில் அவர் மயங்கி கீழே சரிந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்ததும் அம்சபிரபாவை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை அறுத்துள்ளான். பின்னர் அங்கிருந்த சாவியை எடுத்து கதவை பூட்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்றதாக சிறுவன் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்” என்றார்.

இதன் பின்னர் சிறுவனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் போலீஸார் அடைத்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close