[X] Close

புதுச்சேரியில் மனைவி, மகளை கொன்று கூலித் தொழிலாளி தற்கொலை


pondycherry-crime-news

வனஜா - தீபாவதி

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 12:45 pm
  • அ+ அ-

புதுச்சேரியில் குடும்ப பிரச்சினையில் மனைவி, மகளை கொலை செய்த கூலித் தொழிலாளி தானும் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை சங்கோதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வனஜா (55). இவர்களுக்கு கல்பனா, பிரேமலதா, தீபாவதி (28) என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் கல்பனா, பிரேமலதா இருவரும் திருமணமாகி சென்றுவிட்டனர். தீபாவதி மாலத்தீவு நாட்டில் வேலைக்கு சென்றுவிட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பினார். மீண்டும் அவர் மாலத்தீவுக்கு செல்லாமல் மூலகுளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் தீபாவதிக்கும், நெல்லித்தோப்பை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் வரும் 27-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பாலகிருஷ்ணன் வீட்டுக்கு அரு கில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் மாடிப் படிக்கட்டில் சென்றபோது பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்குவதை கண்டான். இதுபற்றி அருகில் இருந்தவர்களிடம் சிறுவன் கூறினான். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இதையடுத்து உருளையன்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டின் அறையில் வனஜா, தீபாவதி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதையறிந்த ஐஜி சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பி மாறன், இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பாலகிருஷ்ணன் கடந்த பல ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதோடு மகள் திருமணம் செய்துகொள்ள இருந்தவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மேலும், பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து 3 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close