[X] Close

பெற்றெடுத்த பிள்ளைகள் கைவிட்டதால் மனமுடைந்த பெற்றோர் விபரீத முடிவு: கணவர் உயிரிழப்பு; மனைவி கவலைக்கிடம்


parent-suicide-attempt

வேதகிரி, தனகோடி |

  • kamadenu
  • Posted: 26 Mar, 2018 11:49 am
  • அ+ அ-

பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் மனமுடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில், கணவர் உயிரிழந்தார். மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:

காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதகிரி (68). இவரது மனைவி தனகோடி (60). இவர்களுக்கு தேவராஜ் (35), கருப்பையா (29) என 2 மகன்களும், சாந்தி (30) என்ற மகளும் உள்ளனர்.

மூத்த மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் லாரி ஓட்டுநராகவும், மகள் சாந்தி திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

வேதகிரி சமையல் வேலை செய்து, தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். வயது காரணமாக உடல் ஒத்துழைக்காததால், சமையல் வேலை செய்ய முடியாமல் வேதகிரி தவித்து வந்தார். இதனால், மகன்களிடம் செலவுக்கு பணம் கேட்டார். யாருமே பணம் கொடுக்காததால், குடும்பம் நடத்த வேதகிரி மிகவும் சிரமப்பட்டார். தவிர, கடந்த சில ஆண்டுகளாக மனைவியின் வைத்தியச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது நிலைமையை மகன்கள் மற்றும் மகளிடம் கூறி, வேதகிரி பண உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், 3 பேரும் உதவ முன் வராததால், மனமுடைந்த வேதகிரி, தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து, கோரந்தாங்கல் கிராமத்தை ஒட்டியுள்ள பொன்னியம்மன் கோயிலுக்கு மனைவியுடன் சென்ற வேதகிரி அங்குள்ள மரத்தில் மனைவியுடன் சேர்ந்து தூக்கில் தொங்கினார். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் இருவரும் தூக்கில் தொங்குவதைக் கண்டு கூச்சலிட்டனர்.

உடனே, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வேதகிரி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகவும், தனகோடி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தனகோடி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, காட்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close