[X] Close

மருமகளை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியவர்கள் கைது


daughter-in-law-murder

பிரதிநிதித்துவப் படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 16:15 pm
  • அ+ அ-

 

மருமகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மாமியார் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அடுத்த மட்றபள்ளி அடுத்த தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). சில ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது, அங்கு வேலை செய்த வெண்ணிலா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு வெண்ணிலாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வீட்டைவிட்டு வெளியேறிய வெண்ணிலா, கோவிந்தராஜை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, இருவரும் திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியனூரில் குடியேறினர். தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில், வெண்ணிலாவிடம் பெற்றோர் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வருமாறு கோவிந்தராஜியின் தாய் சின்னதாய் (50) தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந் நிலையில், கடந்த 20-ம் தேதி வெண்ணிலா தற்கொலை செய்துகொண்டதாக திருப்பத்தூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். திருமணமாகி நான்கரை ஆண்டுகளே ஆனதால் சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

வெண்ணிலா தற்கொலை செய்துகொண்டது குறித்த திருப்பூர் கொடுவாய் கிராமத்தில் உள்ள வெண்ணிலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையிலிருந்த வெண்ணிலாவின் சடலத்தை பார்த்தபோது, தலையில் ரத்த காயங்கள் இருந்தன. இதையடுத்து, வெண்ணிலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்தனர்.

இதற்கிடையே காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 20-ம் தேதி சின்னதாய்க்கும் வெண்ணிலாவுக்கும் வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சின்னதாய், வெண்ணிலாவை சுவற்றில் மோதி கொலை செய்துள்ளார். பின்னர், ஊத்தங்கரை அடுத்த கருமந்தம்பட்டியில் வசிக்கும் தனது நாத்தனார் சின்ன தாய் (58) என்பவருக்கு வெண்ணிலா இறந்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், மேற்கத்தியனூர் வந்த சின்னதாய், வெண்ணிலாவின் வாயில் விஷத்தை ஊற்றினார். பின்னர், அவர் தற்கொலை செய்துகொண்டதாக இருவரும் சேர்ந்து நாடகமாடியுள்ளனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டனர்’’என்றனர்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close