[X] Close

பெரம்பலூரில் போலீஸ் சீருடையில் வந்த 5 பேர் நாமக்கல் தொழிலதிபரிடம் ரூ.8 லட்சம் கொள்ளை


perambalur-fake-police

சித்தரிப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 11:54 am
  • அ+ அ-

 

பெரம்பலூரில் பட்டப்பகலில் போலீஸ் சீருடையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், நாமக்கல் தொழிலதிபரிடம் ரூ.8 லட்சம் கொள்ளையடித்துச் சென்றனர்.

நாமக்கல்லை சேர்ந்தவர் கதிரேசன்(50). தொழிலதிபரான இவர், 8-க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் பெரம்பலூரில் லாரி ஒன்று விற்பனைக்கு உள்ளதாக, நாமக்கல்லைச் சேர்ந்த லாரி புரோக்கரான கவுதமன், மதுரையை சேர்ந்த முத்து ஆகிய இருவரும் அணுகியுள்ளனர்.

இதையடுத்து, ரூ.8 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, தன் நண்பர் மோகன்ராஜ் என்பவருடன் பெரம்பலூருக்கு நேற்று முன்தினம் இரவு கதிரேசன் வந்துள்ளார். அவருடன் புரோக்கர்கள் கவுதமனும், முத்துவும் வந்துள்ளனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

நேற்று பகலில் லாரியின் உரிமையாளர் என்று கூறிக்கொண்டு ஒருவர் காரில் வந்துள்ளார். லாரியை பார்ப்பதற்காக அவருடன் கதிரேசன் உட்பட மூவரும் காரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். கார் பெரம்பலூரை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வேறு ஒரு காரில் போலீஸ் சீருடையில் வந்த 5 பேர் இவர்களை வழிமறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்களில், ஒருவர் இன்ஸ்பெக்டர், ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் என கூறியுள்ளனர். போலீஸார் எனக் கூறிய 5 பேரும், கதிரேசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை தாங்கள் வந்த காரில் ஏற்றிக்கொண்டு, புரோக்கர்கள், லாரி உரிமையாளர் என்று கூறிக்கொண்டு வந்த நபர் ஆகியோரை வேறு ஒரு காரில் ஏற்றிக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, கதிரேசனிடம் இருந்த ரொக்கப் பணம் ரூ.8 லட்சத்தை பறித்துக்கொண்ட அந்த கும்பல், கதிரேசனையும், மோகன்ராஜையும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

இது தொடர்பான புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட பெரம்பலூர் நகர போலீஸார், இந்த சம்பவத்தில் உண்மையிலேயே பெரம்பலூர் அல்லது வேறு மாவட்ட போலீஸாருக்கு தொடர்பு உள்ளதா அல்லது போலீஸ் சீருடையுடன் வந்த, கொள்ளைக் கும்பலின் கைவரிசையா என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், தலைமறைவான புரோக்கர்களான கவுதமன், முத்து மற்றும் லாரி உரிமையாளராக காரில் வந்த நபர் ஆகியோருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவக்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் சீருடையில் வந்த 5 பேர் கும்பல் நாமக்கல் தொழிலதிபரிடம் ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் சீருடை, நாமக்கல் தொழிலதிபர், ரூ.8 லட்சம் கொள்ளை, கதிரேசன், மோகன்ராஜ், பெரம்பலூர் நகர போலீஸார் 


 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close