[X] Close

திருவண்ணாமலையில் 3-வது முறையாக சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: தம்பதி உட்பட 3 பேர் கைது


police-seals-scanning-center

ஸ்கேன் மையத்துக்கு 'சீல் ' வைக்கும் அதிகாரிகள்.

  • kamadenu
  • Posted: 03 Dec, 2018 13:20 pm
  • அ+ அ-

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்து வந்த தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை செங்குட்டுவன் வீதியில் வசிப்பவர் தமிழ்ச்செல் வன்(53). இவர், சென்னை முகப்பேரில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஆனந்தி(51). இவர், சட்ட விரோத மாக கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தைக் கண்டறிந்து கருக் கலைப்பு செய்ததால், கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகும், அவர் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஊரக மற்றும் மருத் துவ நலப்பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் தலைமையிலான சிறப்புக் குழுவினர் கடந்த சில நாட்களாக ஆனந்தி யின் நடவடிக்கையை கண் காணித்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள், 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை தேர்வு செய்து, திரு வண்ணாமலை செங்குட்டுவன் தெருவில் உள்ள ஆனந்தியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பினர்.

அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆனந்தியை செல்போன் மூலம் கர்ப்பிணி பெண் தொடர்பு கொண்டு உள்ளார். பின்னர், அவர் கூறிய தகவலின் பேரில், மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவின் ஓட்டுநரை அணுகினார். பல்வேறு கேள்விகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகே ஆட்டோ ஓட்டுநர் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், அங்கு ஆனந்தியிடம் கர்ப்பிணியை ஒப்படைத்துள்ளார். அதன்பிறகு, அந்த கர்ப்பிணிக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கர்ப்பிணிக்கு பெண் சிசு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற் காக, ரூ.6 ஆயிரம் கட்டணம் பெறப்பட்டுள்ளது. மேலும், வயிற்றில் உள்ள கருவை கலைக்க மறுநாள் (3-ம் தேதி) வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். அப்போது, ஆனந்தியுடன் அவரது கணவர் தமிழ்ச்செல் வனும் இருந்துள்ளார்.

அதிர்ந்த அதிகாரிகள்

இந்நிலையில், ஆட்டோவை பின்தொடர்ந்து சென்ற சிறப்புக் குழுவினர் ஆனந்தி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு, பாலினம் கண்டறிதல் மற்றும் சட்ட விரோத கருக் கலைப்புக்காக செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட உட்கட்டமைப்பு வசதிகளை கண்டு அதிர்ந்தனர்.

தமிழ்ச்செல்வன்

இதுகுறித்து சிறப்புக் குழுவினர் கூறும்போது, “இரவு நேரங்க ளில் கருக்கலைப்பு மற்றும் பாலினம் கண்டறிதல் ஆகிய சட்ட விரோத செயல்களில் ஆனந்தி ஈடுபட்டுள்ளார். இதற்கு, இடைத்தரகராக திரு வண்ணாமலை செட்டிக்குள மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார்(48) செயல்பட்டுள்ளார். அவர், ஒரு பெண் ணுக்கு ரூ.2 ஆயிரம் வரை கமிஷன் பெற்றுள்ளார். வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்ய ஆனந்தி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெற்றுள்ளார்” என்றனர்.

சிவக்குமார்

இதுகுறித்து மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, தமிழ்ச்செல்வன், ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், ரூ.8 லட்சம் மதிப்பிலான கருவிகள், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதை யடுத்து, ஆனந்தியின் ஸ்கேன் மையத்துக்கு சிறப்புக்குழுவினர் 'சீல்' வைத்தனர்.

ஆனந்தி

10 ஆண்டு சிறை விதிக்கலாம்

இதுகுறித்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி கூறும்போது, “சட்ட விரோதமாக பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு வழக்குகளை விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்க நீதித்துறை நடுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்ட விரோத கருக் கலைப்பு செயலை ஒரு முறை செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 அல்லது 3 முறை என தொடர்ந்து செய்துவந்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஒரு குற்றத்தைத் தொடர்ந்து செய்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

8 ஆயிரம் கருக்கலைப்புகள்

ஆட்சியர் கந்தசாமி கூறும்போது, “ஆனந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை சுமார் 8 ஆயிரம் பெண்களுக்கு பாலினம் கண்டறிதல் மற்றும் கருக்கலைப்பு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனந்தியின் செல்போனில் பதிவான எண்கள் மூலமாக விசாரணை நடத்தப்படுகிறது. அவருக்கு துணையாக இருந்தவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close