[X] Close

காதலியைக் கொன்ற காதலன் தலைமறைவு: மூன்று ஆண்டுகளாக குற்றவாளியை தேடும் போலீஸார்: நீதிமன்றம் புதிய உத்தரவு 


young-girl-was-killed-by-lover-police-searched-for-three-years

  • போத்திராஜ்
  • Posted: 24 Mar, 2018 17:09 pm
  • அ+ அ-

சென்னை கெல்லீஸ் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரை தாக்கிக் கொலை செய்த காதலன் 3 ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

சென்னை தலைமைச்செயலக காலனியில்  வசித்த கண்ணப்பன் என்ற ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரின் மகன் தினேஷும், வேப்பேரியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகள் அருணா என்கிற பெண்ணும் காதலித்து வந்தனர். 

கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம், காதலி அருணாவை அடித்துக் கொலை செய்துவிட்டு தினேஷ் தப்பிச் சென்றுவிட்டார். தினேஷைக் கடந்த 3 ஆண்டுகள் ஆகியும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தினேஷ் வரும் ஜூன் 5-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதனை அடுத்து இன்று நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் நிர்வாக அதிகாரி வாசவி தலைமையில் தலைமைச்செயலக காலனி போலீஸார் கொலை நடந்த அப்பார்ட்மென்ட் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் நோட்டீஸ் ஒட்டி, தண்டோரா போட்டு தெரிவித்தனர். 

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அருணாவை மிகக் கொடூரமாகக் கொலை செய்த தினேஷை போலீஸார் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று தண்டோரோ போட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? 

சென்னை தலைமைச்செயலக காலனி வி.ஜி.அப்பார்ட்மென்டில் உள்ள 2-வது மாடியில் வசிப்பவர் கண்ணப்பன். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு உமா, அஸ்வினி என்ற மகள்களும், தினேஷ் (25) என்ற மகனும் உள்ளனர். தினேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். 

தினேஷும், வேப்பேரியைச் சேர்ந்த அருணா என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு அந்த கொலை சம்பவம் நடந்தது. சில நாட்களாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த தினேஷின் தந்தை கண்ணப்பன், 2015-ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது மனைவி உடனிருந்து கவனித்து வந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தினேஷ் தனியாக தங்கி இருந்தார். 

2015-ம் ஆண்டு மார்ச் 11 அன்று இரவு 8.30 மணி அளவில் தினேஷ் போர்வை மற்றும் மெத்தையால் சுற்றி கட்டப்பட்ட மூட்டை ஒன்றை லிப்ட் மூலமாக இறக்கி கீழே கொண்டு வந்து தனது காரில் ஏற்றுவதற்காக முயற்சி செய்தார். ஆனால் காரில் ஏற்ற முடியவில்லை. இதனால் பக்கத்து வீட்டுக்காரரை துணைக்கு அழைத்தார். மருத்துவமனையில் உள்ள தனது தந்தைக்கு மெத்தை தலையணை எடுத்துச்செல்வதாக அவரிடம் கூறினார். 

பக்கத்து வீட்டுக்காரர் மூட்டையை தூக்க உதவியபோது துணி மூட்டையில் இருந்து ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து உதவிக்கு வந்தவர் கூச்சல் போட்டு தினேஷைப் பிடிக்க முயன்றார். 

ஆனால் தினேஷ் காரை விட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மூட்டையிலிருந்த பெண்ணின் பிணத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலையான இளம்பெண் யார்? என்று போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அன்று இரவு வேப்பேரியைச் சேர்ந்த சீனிவாசன் வேப்பேரி காவல் நிலையத்தில் தனது மகள் அருணாவைக் காணவில்லை என்று புகார் செய்திருந்தது தெரியவந்து அவரை அழைத்து இளம்பெண் பிணத்தைத் காண்பித்தனர். அதைப் பார்த்த சீனிவாசன் கொலை செய்யப்பட்டது தனது மகள் அருணா என்று உறுதி செய்தார். 

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் பி.காம் பட்டதாரியான அருணாவும், தினேஷும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தது தெரியவந்தது. சம்பவம் நடந்த 2015 மார்ச் 11 அன்று வீட்டில் யாருமில்லாததைப் பயன்படுத்தி அருணாவுக்கு போன் செய்து அவரை வரவழைத்துள்ளார். அபார்ட்மென்ட்டில் தனிமையில் சிக்கிய அருணாவை கழுத்தை நெரித்தும், இரும்பு ஸ்டாண்டால் தலையில் தாக்கியும் கொன்றுள்ளார். பின்னர் அவரது உடலைப் போர்வையில் சுற்றி காரில் கொண்டுசென்று எங்காவது போட்டு விட திட்டமிட்டார். ஆனால் போர்வையிலிருந்து வெளியே விழுந்த கை கதையைத் திருப்பிவிட்டது. 

போலீஸாரிடம் சிக்காமல் இருக்கத் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற தினேஷ் நேராக போரூர் மருத்துவமனையிலிருந்த தனது தாயாரைப் பார்த்துப் பேசிவிட்டு அவரிடம் தனது செல்போனை கொடுத்துவிட்டு மாயமானார். 

அதன் பின்னர் இதோ பிடிக்கிறோம், ஒரு வாரத்தில் பிடித்து விடுவோம் ஒரு மாதத்தில் பிடிப்போம் என்று மூன்று ஆண்டுகளாக தினேஷைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகிறார்கள். நவீன வசதிகள் உள்ள இந்த காலத்தில் தினேஷ் எங்கிருக்கிறார் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது எப்படி என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு தினேஷ் புத்திசாலித்தனமாக செயல்படுகிறாரா? என்பதும் அவர் பிடிபட்ட பின்னரே தெரிய வரும்.

 


 

Attachments area

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close