[X] Close

கோவையில் தலைதூக்கும் ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்துகள்: பட்டியல் தயாரிக்கிறது மாநகரக் காவல் துறை


rowdyism-in-rise-at-coimbatore

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 10:42 am
  • அ+ அ-

ரவுடிகளும், கட்டப் பஞ்சாயத்துகளும் தலைதூக்கி வருவது பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளதால், அவர்களின் பட்டியலை தயாரிக்கிறது கோவை மாநகரக் காவல் துறை.

கோவையில் நகைப்பறிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ரவுடியிசமும், கட்டப் பஞ்சாயத்துகளும் தலைதூக்கி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம், புலியகுளம், போத்தனூர், உக்கடம், ரத்தினபுரி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் ரவுடிகள் தலைதூக்கி வருவதாகவும், கட்டப் பஞ்சாயத்து, பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டுதல், தாக்குதல் நடத்துதல், கேங்வார் (மோதல்) உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மாநகரக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

சட்ட விரோத செயல்கள் பலவற்றுக்கு இவர்கள் உடந்தையாக இருப்பதாகவும், இவர்களை வைத்து முக்கியப் பிரமுகர்கள் காரியம் சாதித்து வருவதும் தெரியவந்துள்ளது. திரைமறைவில் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதை அடுத்து, தனிப்படையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன மேற்குறிப்பிட்ட பகுதிகள்.

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டவர் சூர்யா (22). நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சூர்யாவை, கடந்த வாரம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 3 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் கத்தி, அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவமே, ரவுடியிசம் தலைதூக்கியுள்ளதற்கு உதாரணமாகியுள்ளது.

ராமநாதபுரம், புலியகுளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவுடிகள் அட்டகாசம் செய்து வந்தனர். அங்கு காவல் ஆய்வாளராக ராஜ்குமார் நியமிக்கப்பட்ட பிறகு, ரவுடியிசம் கட்டுப்படுத்தப்பட்டதால், அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டன. தற்போது, மீண்டும் தலைதூக்கியுள்ள ரவுடிகளை களையெடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதேபோல் உக்கடம், போத்தனூர், ரத்தினபுரி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் ரவுடிகள் அட்டகாசம் செய்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள்.

இதுகுறித்து கோவை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணைக் காவல் ஆணையர் எல்.பாலாஜி சரவணனிடம் கேட்டபோது, ‘ரவுடியிசமும், கட்டப் பஞ்சாயத்துகளும் தலைதூக்காதவாறு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். ரவுடியிசத்தைக் கட்டுப்படுத்த, மாநகரக் காவல்துறையில் ரவுடியிசம் தடுப்புப் பிரிவு இயங்குகிறது.

மேற்கண்ட பகுதிகள், தனிப்படை போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன. பெண்கள், குழந்தைகளை பாதிப்புக்கு உள்ளாக்குபவர்கள் காவல்துறையின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர். பொதுமக்கள், தங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதை உணர்ந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். சட்டம் துணை நிற்கும்' என்றார்.

காவல்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘கோவை மாநகரக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் யார்? யாரெல்லாம் தற்போது செயல்பாட்டில் உள்ளனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இவர்களுக்கு எந்தெந்த வழக்குகளில் தொடர்புள்ளது என்ற விரிவான தகவலறிக்கையும் தயாராகி வருகிறது. ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றனர்.

த.சத்தியசீலன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close