[X] Close

அடிதடி பிரச்சினைக்கு தீர்வுகோரி சேலம் நீதிமன்றத்துக்கு வந்த சகோதரர்கள் இரு பிரிவாக மோதல்


brothers-fight-in-court

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார். படம் எஸ்.குரு பிரசாத்

  • kamadenu
  • Posted: 27 Nov, 2018 11:31 am
  • அ+ அ-

நிலம் தொடர்பான அடிதடி பிரச்சினைக்கு தீர்வுகோரி சேலம் மக்கள் நீதிமன்றத்துக்கு வந்த சகோதரர்கள் இருபிரிவாக மோதலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தினர்.

சேலம் ஓமலூரை அடுத்த சாமிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரமேஸ்வரன், அய்யனார், தங்கவேலு. சகோதரர்களான இவர்களுக்கு இடையே 20 சென்ட் நிலத்தை பிரிப்பது தொடர்பாக சுமார் 19 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இதில், பரமேஸ்வரன், அய்யனார் ஒரு பிரிவாகவும், தங்கவேலு மற்றும் அவரது மகன்கள் சுரேஷ், சக்ரவர்த்தி ஆகியோர் மற்றொரு பிரிவாகவும் நிலத்துக்கு உரிமை கோரி வந்தனர்.

இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் ஓமலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நிலப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அய்யனார் தரப்பினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கக் கோரி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் சக்ரவர்த்தி வழக்கு தொடர்ந்தார். பிரச்சினை தொடர்பாக மக்கள் நீதிமன்றத்தை அணுக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மக்கள் நீதிமன்ற விசாரணைக்காக நேற்று பரமேஸ்வரன், அய்யனார் மற்றும் தங்கவேலு தரப்பினர் சேலம் மக்கள் நீதிமன்றத்துக்கு வந்தனர். அங்கு இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும், அங்கு கிடந்த மரக்கட்டையால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில், இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

நீதிமன்ற பணிக்கு வந்திருந்த போலீஸார் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி, மோதலை தடுத்தனர். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close