[X] Close

சொக்க வைக்கும் ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு!


sokka-vaikkum-srirangam-vathakulzhambu

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Jun, 2018 12:14 pm
  • அ+ அ-

’நாக்கே செத்துப்போச்சுப்பா’ என்று அவ்வைசண்முகி படத்தில் மணிவண்ணன் சொல்வார். ‘செத்துப்போச்சுன்னா அடக்கம் பண்ணுங்க முதலியார்’ என்பார் கமல்.

அப்படியெல்லாம் செய்யத்தேவையில்லை. வத்தக்குழம்பு வைத்து சுடச்சுடச் சாப்பிட்டாலே போதும். போன உயிரும் திரும்பி வந்துவிடும் என்கிறார்கள் வத்தக்குழம்புப் பிரியர்கள்.

சாம்பாருக்கு தூரத்து சொந்தம். காரக்குழம்புக்கு ஒன்றுவிட்ட சகோதரர் முறை என்று வத்தக்குழம்பை ஆராதித்துக்கொண்டாடுகிற பெரியவர்கள், இன்னும் காமெடியாய் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். ‘வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் இருந்தா சொத்தையே எழுதிக்கொடுக்கலாம்பா’ என்பார்கள் கிண்டலாகவும் பாராட்டுகிறவிதமாகவும்!

வத்தக்குழம்பு என்று மொத்தமாகச் சொல்லி, சுருக்கிவிடமுடியாது. வத்தக்குழம்பில் பலவகை உண்டு. சின்னவெங்காயம் போட்டு வத்தக்குழம்பு செய்யும் போது, அதுவொரு சுவையில் நம்மை சொக்கவைக்கும். பூண்டு சேர்த்து செய்யும்போது அது வேறொரு கிக்கைக்கொடுக்கும். சுண்டவத்தல் போட்டு செய்கிற வத்தக்குழம்பு என்றால், நாலுகவளம் கூடுதலாக உள்ளே போகும்.

எந்த வத்தக்குழம்பாக இருந்தாலும், சாதத்துடன் வத்தக்குழம்பு சேர்த்து சாப்பிட்டுவிட்டு, பிறகு மோர் சாதம் சாப்பிடும்போது வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, புறக்கணித்துவிட்டு, வத்தக்குழம்பைத் தொட்டுக்கொண்டு, ஊற்றிக்கொண்டு சாப்பிடுவார்கள். அது, அமிர்தம்... அமிர்தம்... என்று கொண்டாடித்தீர்த்துவிடுவார்கள்.

வத்தக்குழம்பின் ருசி இப்படியெல்லாம் இருக்க, ஸ்ரீரங்கம் வத்தக்குழம்புக்கு தனி ருசியும் சுவையும் மணமும் உண்டு என்கிறார்கள் வத்தக்குழம்பு தாசன்கள்!

அத்தனை மகத்துவம் வாய்ந்த ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு செய்ய என்னவெல்லாம் தேவை தெரியுமா? திருச்சி அம்புஜவல்லி ரங்காச்சாரி இதுகுறித்து சொன்ன டிப்ஸ்... இதோ!

தேவையான பொருட்கள்:

சுண்டக்காய் - 1 கப்

வெந்தயம் - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 4

புளி - 75 கிராம் (நன்றாகச் சாறு எடுத்துக் கொள்ளவும்) சின்ன வெங்காயம் - 10

வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

அரிசி - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை, சிறிது உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

இப்படித்தான் செய்யணும்...

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தைப் போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில், அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து இறக்கிவைத்துக்கொள்ளுங்கள்.

அதைக் குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு நன்றாகப் பொன்னிறமாக வரும்வரை வதக்கி, பிறகு சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.

அதன் பிறகு, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்குங்கள்.

பிறகென்ன... மணக்க மணக்க, சுவைக்கச் சுவைக்க, ருசிக்க ருசிக்க, ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு தயார்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close