[X] Close

ரமலான் மாத சிறப்பு: நோன்புக் கஞ்சி செய்வது எப்படி?


nonbu-kanji-ramzan-special

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 May, 2018 14:35 pm
  • அ+ அ-

முஸ்லிம் மக்கள் ரமலான் நோன்பு காலத்தில் காலையில் இருந்து மாலைவரை உபவாசம் இருக்கின்றனர். மாலையில் நோன்பை துறக்கும்போது ஒருவகை கஞ்சியை உண்டு நோன்பை முடிக்கின்றனர்.

இந்தக் கஞ்சி பகல் முழுதும் பட்டினி கிடந்தவர்களுக்கு போதிய சக்தியை மீட்டுத் தருவதுடன் நீர்ச்சத்தையும் தருகிறது. எனவே, நோன்பு திறக்க இது மிகச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

நோன்பு திறப்பது இஃப்தார் என்று அழைக்கப்படுகிறது. இஃப்தாரின் முக்கிய உணவே நோன்புக் கஞ்சி.

ஹைதராபாத் ஹலீம் தெரியுமா?
தமிழகத்தில் இது பரவலாக நோன்புக் கஞ்சி என்று அறியப்பட்டுள்ளது. இதுவே ஹைதராபாத்தில் ஹலீம் என அழைக்கப்படுகிறது. ஹைதராபாத் நகரம் இருவகை உணவுகளுக்கு மிகவும் பிரபலம். ஒன்று பிரியாணி மற்றொன்று ஹலீம். பிரியாணி ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஆனால், நோன்புக் கஞ்சி ரமலான் மாதத்தில் மட்டும்தான் கிடைக்கும்.

அதனால், ரமலான் மாதத்தில் ஹலீம் உணவுக்கு அதிக டிமாண்ட் இருக்கும். இஸ்லாமிய மக்கள் மட்டுமல்ல மத எல்லைகள் கடந்து அனைத்து மக்களும் இந்த ஹலீம் விரும்பி வாங்கிச் செல்வர். வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் அருகே இருக்கும் சில கடைகள் ஹலீமுக்கு என்றே பெயர் பெற்றவையாகத் திகழ்கின்றன.
அரிசி உள்ளிட்ட தானியங்களுடன் இறைச்சியைச் சேர்த்து இந்த உணவு சமைக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகள், மத்திய ஆசியா, இந்திய துணைகண்டம் ஆகிய பகுதிகளில் இந்த உணவு வகை மிகவும் பிரபலம். ஒவ்வொரு பகுதியில் இதன் தயாரிப்பு முறை சற்றே வித்தியாசப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வோர் ஊரிலும் ஒருவிதத்தில் நோன்புக் கஞ்சி தயாரித்தாலும். அடிப்படையான சில குறிப்புகள் இருக்கின்றன.

எளியமுறையில் நோன்புக் கஞ்சி எப்படி செய்வது என்பதைத் தெரிந்து கொள்வோம்:
 
தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 150 கிராம் 
சின்ன வெங்காயம் - 100 கிராம் 
தக்காளி - 1 
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2  
பிரியாணி இலை - 1 
கொத்தமல்லி - சிறிது 
புதினா - சிறிது 
தேங்காய்ப் பால் - 1 கப் 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். குக்கரில் 750 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், மல்லி, புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

மிதமான தீயில், குக்கரை மூடி 10-15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். கலவை நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி, நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கி, தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

சூடாக பறிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.

சிலர் விருப்பத்துக்கு ஏற்றவாறு வேகவைத்து மசித்த ஆட்டிறைச்சியை சிறிதளவு சேர்த்துக் கொள்வர். அது அவரவர் விருப்பம் பொருத்தது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close