[X] Close

இது மாவடு சீசன்!


maavadu-season

  • வி.ராம்ஜி
  • Posted: 09 May, 2018 14:33 pm
  • அ+ அ-

கோடை சீசன் வந்துவிட்டாலே கூடவே இன்னும் இன்னுமாய், ‘எனக்கும் இப்பதான் சீசன்’ என்று வரிசைகட்டி வந்துவிடும் சில விஷயங்கள். அவற்றில் முக்கியமானது மாவடு.

‘என்னா வெயிலு, என்னா வெயிலு. வெறும் மோர்சாதம் போதும். வேற எதுவும் சாப்பிடப்பிடிக்கலை’ என்று வீட்டுக்குவீடு வாசப்படி போல், வீடுகளின் வசனங்கள் இதுதான். அந்த மோர்சாதத்திற்கு சுவை சேர்ப்பதும் மணம் சேர்ப்பதும் நாலு கவளத்தை அதிகமாகவே உள்ளே இறக்குவதுமான விஷயங்களை செம்மையாய், அதேசமயம் பச்சைப்பசேலென நிறம் கொண்டு செய்பவை, மாவடுகள்தான்!

இப்படிப் பேசிக்கொண்டிருக்கிற இந்த வேளையில், மார்க்கெட்டுகளில் மாவடு விற்பனை கனஜோராக நடந்துகொண்டிருக்கிறது. பலபேர் ஆசையும் ஏக்கமுமாக, மாவடுவை பார்த்துக்கொண்டே கடந்துவிடுவார்கள். ‘எனக்குத் தெரியாதுங்களே... மாவடு சாப்பிட ஆசை. ஆனா செய்யத் தெரியாதே...’ என்று வருத்தத்துடன் சொல்பவர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதோ... மாவடு ஊறுகாய் செய்வது இப்படித்தான்!

மாவடு - அரை கிலோ அல்லது ஒருகிலோ

கல் உப்பு - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - முக்கால் கப் (முழு கப் சுள்ளென்றிருக்கும்)

கடுகு - கால் கப்

விரலி மஞ்சள் - 2 அல்லது 3

விளக்கெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய்  - கால் கப்

செய்வது இப்படி...

முதலில், மாவடுவை நன்றாகக் கழுவிவிடுங்கள். பிறகு அந்த நீரை வடியவையுங்கள். ஒரு துணியை எடுத்து அதில் மாவடுவைப் பரப்பி காயவைக்கவேண்டும்.

காய்ந்த மிளகாயை வெயிலில் காயவைத்துக் கொள்ளுங்கள். பிறகு நன்றாக பொடியாக்கிக் கொள்ளுங்கள். மிளகாய்த்தூள்தான் பயன்படுத்துறோம் என்றால் சரி... உங்கள் இஷ்டம்.  இப்போது விரலி மஞ்சளை வெயிலில் காயவைத்துவிட்டு ஈரப்பதமில்லாமல் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடுகையும் விரலி மஞ்சளையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

காய வைத்திருந்த மாவடுக்களை எடுத்து, விளக்கெண்ணெய், கடுகு, மஞ்சள்பொடியை நன்றாகக் கலந்து கிளறவும். உங்கள் வீட்டில் ஊறுகாய்க்கென்று பாத்திரம் இருக்கிறதா? இல்லையெனில், அதற்காகவே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பைப் போட்டு மேல்பகுதியில் ஒரு பிடி மாவடு, அதன் மீது கொஞ்சம் உப்பு, காரப்பொடி, பிறகு மாவடு என்று லேயர்லேயராக உருவாக்கிக்கொண்டு, மேல்பகுதியில் நல்லெண்ணெயை விடுங்கள். நன்றாகக் கிளறுங்கள். அப்படியே மூடிவைத்துவிடுங்கள்.

மறுநாள்... தாராளமாக எடுத்து உபயோகிக்கலாம். இன்னொரு விஷயம்... அடிக்கடி நன்றாகக் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்படிக் கிளறக் கிளற, சுவையும் எகிடுதகிடாக ஏறிக்கொண்டே இருக்கும் என்கிறார் மடிப்பாக்கம் நளினி.  

பொதுவாகவே, ஊறுகாய் முதலான சமாச்சாரங்களுக்கு ஜாடியையோ கல்சட்டியையோ அந்தக்காலத்தில் பயன்படுத்துவார்கள். செட்டிநாட்டுப் பகுதியில், சமையலறையில் வைக்கப்பட்டிருக்கும் ஜாடியைக் கொண்டே, அதில் ஊறுகாயோ மாவடோ இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

மாவடுவில் ஈரக்கரண்டியைப் போடுவதோ, கையைவிட்டுக் கிளறுவதோ கூடாது. மாவடு என்பதே மாங்காயின் ஒன்று விட்ட சகோதரர்தான். அந்த மாவடில் வடுமாங்காய் மாதிரியானவையெல்லாம் கூடப்பிறந்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி. இன்னும் இன்னும் சுவையை வாரிவழங்கிக் கொண்டே இருக்கும்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close