[X] Close

உஷ்ணம் விரட்டும் வெந்தயக்குழம்பு ரெடி!


vendhaya-kuzhambu

வெந்தயக் குழம்பு

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Jan, 2019 11:54 am
  • அ+ அ-

வெயிலிலும் உடல் சூடாகும். இதோ... இந்த பனிக்காலத்திலும் உடலில் சூடு பரவி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும்.

இந்தத் தருணங்களில் வாரம் ஒருமுறையோ இரண்டுமுறையோ, வெந்தயத்தைச் சேர்த்துக்கொள்வது ரொம்பவே நல்லது. வெறுமனே வெந்தயமாகச் சேர்க்க, சிலருக்குப் பிடிக்காது. அதற்காகத்தான் வெந்தயக்குழம்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

வெந்தயக்குழம்பு, வெரைட்டிக்கு வெரைட்டி. மாற்றத்திற்கு மாற்றம். தனிச்சுவையுடன் வெந்தயக்குழம்பு, தன் வெற்றிக்கொடியை பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறது, இன்னமும்!

வெந்தயக்குழம்பு பண்ணுவதும் சுலபம்.

இப்படித்தான் வெந்தயக்குழம்பு:

தேவையானப் பொருட்கள்:

புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
உப்பு – 1 டீஸ்பூன் (அல்லது தேவைக்குத் தக்கபடி)

வறுத்து அரைக்கவும்:

சின்ன வெங்காயம் – 4
பச்சைமிளகாய் – 2
தேங்காய் துருவல் – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

பொடி செய்யவும்:

வெந்தயம் – 1 டீஸ்பூன்
அரிசி – 1/2 டீஸ்பூன்

தாளிக்கவும்:

பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – கொஞ்சம்
எண்ணை – 5 டேபிள்ஸ்பூன்
 

செய்முறை:

       * உப்பு, புளி இரண்டையும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

      * வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

      * பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

      * வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல், வெந்தயம், அரிசி ஆகியவற்றை வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.

       * பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

       * அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள்.

       * ஆறியபின், மைபோல் அரைத்துக் கொள்ளுங்கள்.

      * புளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். புளிக் கரைசல் மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

      * வாணலியில் மீதி எண்ணெயை விட்டு, எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடவும்.

      * கடுகு வெடித்தவுடன், வெந்தயம் சேருங்கள்.

       * அடுத்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து சுருளச் சுருள வதக்கவும்.

       * புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

       * நன்றாக கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேருங்கள்.

       * கறிவேப்பிலை போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

       * பச்சை வாசனை போக கொதித்தவுடன், வெந்தயப் பொடியை தூவி இறக்குங்கள்.

       மணக்க மணக்க, சுவைக்க சுவைக்க வெந்தயக் குழம்பு ரெடி!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close