மீ டூ பிரச்சாரத்துக்கு அஜய் தேவ்கான் ஆதரவு

இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மீ டூ பிரச்சாரத்துக்கு அஜய் தேவ்கான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
கடந்த வருடம் ஹாலிவுட்டில் அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அதே பாணியில் தற்போது இந்திய திரையுலகில் உள்ளவர்கள் #Metoo என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசி வருகிறார்கள்.
#Metoo-க்கு பல்வேறு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக அஜய் தேவ்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மீ டூவை சுற்றி வரும் சம்பவங்களால் நான் மிகவும் தொந்தரவு அடைந்துள்ளேன். நானும் எனது நிறுவனமும் பெண்களுக்கு உச்சபட்ச மரியாதையையும் பாதுகாப்பையும் வழங்குவதில் எப்போது நம்பிக்கையுடன் செயல்பட்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பெண்ணுக்காவது ஏதாவது தவறு இழைக்கப்பட்டிருந்தால் ஏடிஎஃப்-ஃபோ அல்லது நானா அதை பார்த்து சும்மா இருக்கமாட்டோம்.
I’m disturbed by all the happenings with regards to #MeToo. My company and I believe in providing women with utmost respect and safety. If anyone has wronged even a single woman, neither ADF nor I will stand for it.
— Ajay Devgn (@ajaydevgn) October 12, 2018
இவ்வாறு அஜய் தேவ்கான் தெரிவித்திருக்கிறார்.