[X] Close

இணையத்தில் இப்போது உலா வரும் அக்கால பாடல் ஓ ரசிக்கும் சீமானே...


oh-rasikkum-seemane-goes-viral

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Oct, 2018 11:18 am
  • அ+ அ-

இணையத்தில் கடந்த சில நாட்களாக ஓ.. ரசிக்கும் சீமானே பாடல் வெகு ஜோராக வைரலாகி வருகிறது. இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? அந்தப் பாடலை இப்போது வைரலாக்கியிருப்பவர் ஒரு வெளிநாட்டுக்காரர்.

ஓ… ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

இந்தப் பாடல் அந்தக் காலத்தில் இளைஞர்கள் முனுமுனுத்த மெகா ஹிட் பாடல். பராசக்தி படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. பராசக்திக்கி சிவாஜி புகழ் சேர்த்தது போல் இந்தப் பாடலும் புகழ் சேர்த்தது.

இந்தப் பாடலை பிரெஞ்சு பாடகர் ஒருவர் பாட அதற்கு பிரஞ்சு நாட்டியக் கலைஞர் ஒருவர் நடனமாடும் வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால், இது இப்போது உலா வருவதற்கு ஒரு காலப் பொருத்தம் இருக்கிறது.

1952 அக்டோபர் 17-ம்  தீபாவளி அன்றுதான் பராசக்தி படம் வெளியானது. இதோ இந்த அக்டோபர் 17 வந்தால் இப்பாடல் ஒலிக்கத் தொடங்கி 66 வருடங்கள் ஆகிவிடும். இந்தப் பாடலைப் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

இந்தப் பாடல் குறித்து மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சமூக நலத்துறை அதிகாரியும் சினிமா ஆர்வலருமான கணேசன் கூறுகையில், "இந்தப் பாட்டு அந்தக் கால இளசுகளின் கனவு பாடல். குமாரி கமலா நாட்டியம் ஆடியிருப்பார். குமாரி கமலா, பரதநாட்டியக் கலைஞர். டி.ஆர்.மகாலிங்கம் நடித்த நாம் இருவர் படத்தில் எட்டு திக்கும் கொட்டு முரசே என்ற பாடலில் பிரமாதமாக ஆடியிருப்பார்.

அப்பேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர் அந்தக் காலத்தில் ஒரு குத்துப்பாட்டு மாதிரியான ரசிக்கும் சீமானே பாடலுக்கு ஆடி என்னால் இப்படியும் ஆட முடியும் என திரையுலகுக்கு நிரூபித்தார்.

இந்தப் படத்துக்கு இசை சுதர்சனம். இவர் பிரபல இசையமைப்பாளர் கோவர்தனத்தின் அண்ணன் ஆவார். பராசக்தியின் சிவாஜியின் வசனம் எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு இந்தப் பாடலும் பிரபலம். பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்தது" என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close