[X] Close

திருநவேலி பாஷைய ரெண்டரை வருசம் ரிசர்ச் செஞ்சேன் பாத்துக்கோ!- நெல்லைத் தமிழால் உயர்ந்த நெல்லை சிவா


nellai-siva-interview

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 18:23 pm
  • அ+ அ-

“அடுத்த சீனுக்கு நடிக்க கூப்புடுதாக பாத்துக்கோ… மேக்கப் போட்டுகிட்டே பேசுவமா?” என மண்வாசனை படர ஆரம்பிக்கிறார் நெல்லை சிவா. தமிழ்த் திரைப்படங்களில் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசி, நகைச்சுவை பட்டாசுகளை வெடிக்க வைப்பவர். நாகர்கோவிலில் ஷூட்டிங் ஒன்றுக்கு வந்தவரை காமதேனுவுக்காகச் சந்தித்தேன்.

திரைத்துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

நெல்லை மாவட்டம் பணக்குடி இருக்குல்லா... அது பக்கத்துல வேப்பிளாங்குளம்தான் என் சொந்த ஊரு. நான்லாம் ஸ்கூலு படிக்கும்போதே வெறிபிடிச்ச சிவாஜி ரசிகனாக்கும். அவரு வசனத்தைக் கேட்டுத்தான், சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டேன். ஆனா, கிராமத்துல பிறந்தவன் பாத்தியளா, அதனால வெளிய சொல்லதுக்கும் வெட்கம்! ஸ்கூலுல பேச்சுப்போட்டியிலும் நான்தான் ஃபர்ஸ்ட். அண்ணாவைப் பத்தி பேசுனேன். ‘அழகிய செந்தாமரை குளத்திலேன்னு ஆரம்பிச்சு’ அண்ணாவைப் பத்தி நீளமா வசனம் பேசுவேன். அப்போ இருந்தே வசனம் பேசதுன்னா இஷ்டம். நான் வசதியான குடும்பத்துல பிறந்தவன். அதனால வீட்ல கெடந்து நல்லா சாப்பிட வேண்டியது, ஊரு கோயில்ல படுத்துக்கெடந்து காத்து வாங்கது, தூங்கது, சீட்டு விளையாடதை வேடிக்கை பாக்கது, இதுக்கு இடையில் சிவாஜி வசனம் பேசது இதுதான் அப்பல்லாம் பொழுதுபோக்கு. வசனத்தை ஊருக்குள்ள எல்லாரும் கேட்டுப் பாராட்டுனதுலதான் நான் சென்னைக்குப் புறப்பட்டேன்.

முதல் பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

சென்னைக்குப் போனதும் ஹபிபுல்லா ரோட்ல இருக்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்யாணமண்டபத்துல தங்குனேன். அங்க என்ன மாதிரி சென்னைக்கு வாய்ப்புத் தேடி வர்ற நிறையபேரு இருப்பாங்க. ஒருநாளைக்கு ஒரு ரூபாதான் வாடகை இருந்துச்சு. ஆனா, அதிகபட்சம் ஒரு ஆளு 4, 5 மாசம் வரைக்கும்தான் தங்கலாம்.

அடுத்தவங்களுக்கும் வாய்ப்புக் குடுக்கணுமால்லியா... அதுக்குத்தான் இந்த ஏற்பாடு. அந்த மண்டபத்துக்கு கன்னிராசி படத்துல சில காட்சிகள் எடுக்க பாண்டியராஜன் சார் வந்திருந்தார். அப்போ நானும் கூடமாட நின்னு ஒத்தாசை செஞ்சேன். கெடச்ச கேப்புல அவருக்கிட்ட வாய்ப்பு கேட்டேன். அடுத்த படத்துல தர்றேன்னாரு. தரவும் செஞ்சாரு.

முதன் முதலில் அவரோட ‘ஆண்பாவம்’ படத்துல தான் நடிச்சேன். அப்ப, எனக்கு நடிக்க வரலன்னு, சாரு முதுகுல அடிச்சுட்டாரு. ராத்திரி பூரா அதை நினைச்சே ஃபீல் பண்ணுனேன். என்னை எங்க அப்பாகூட அடிச்சதில்ல. சினிமா நமக்கு வேணாம். ஊருக்கே போயிடுவோம்ன்னு தோணுச்சு. ஆனா, ஏனோ அந்தத் தப்ப அப்ப செய்யல. அப்படி அடுத்தநாளு ரயிலு ஏறி இருந்தா இன்னிக்கு இந்த சிவா, நெல்லை சிவாவா இருந்துருக்க மாட்டான்.

அப்புறம் எப்படி நடிக்கக் கத்துக்கிட்டீங்க..?

அதுக்கு பாக்கியராஜ் சார்தான் காரணம். அவரு இயக்குன சீரியல் தூர்தர்ஷன்ல ரெண்டு வருசம் ஓடுச்சு. அதுல எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். `நான்ஜே ஜேன்னு இருக்குற காலத்துல எல்லாம் நீ என்கிட்ட மாட்டாம போயிட்டியே’ன்னு சொல்லுவாரு. அவரைப் போல் யாரும் வசனம் எழுத முடியாது. நிறைய வாசிப்பாரு. என்னோட டயலாக் பகுதி வரும்போது, “நெல்லை பாஷையில அவனே எழுதிடுவான்...”னு எனக்கு சுதந்திரம் கொடுப்பாரு.

நான் பாக்கியராஜ் சாரோட ரசிகன். அவரோட சேர்ந்து வேலை செஞ்சத பாக்கியமாக நினைக்கிறேன். அவரோட சொக்கத்தங்கம் படத்துல எனக்கு ஒரு டயலாக் வரும். அதில், ‘போயும் போயும் இந்தக் கிழவிய போயா கிண்டல் பண்ணுதே’னு எழுதியிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பாக்கியராஜ், என் டயலாக்கை வாங்கிப் பார்த்தார். ஜெனரேட்டர் ஓடும் சத்தம் காதை கிழிக்குது. படப்பிடிப்புக்கு ரெடியாகிட்டு இருக்கு யூனிட். அந்த நிமிஷத்துல, ‘நல்லா வெயில்ல காயப்போட்டு, வாடி வதங்கி வத்தலாட்டம், மொத்தமும் சுருங்கி சுண்டிப்போன கிழவி… அவளைப் போயா கிண்டல் பண்ணுதீக’ன்னு டயலாக்கை மாத்துனாரு. அவருகிட்ட கத்துகிட்ட விசயங்கள வெச்சுத்தான் இன்னிக்கு 500 படங்கள் தாண்டியும் நிக்கேன்.

நெல்லை வட்டார வழக்கு உங்கள் அடையாளமாக எப்போது மாறியது?

மன்சூர் அலிகான் ஆபீஸும் என்னோட வளர்ச்சிக்கு ஒரு காரணம். சினிமா ஆர்வத்துல நடிக்க வர்றவங்களுக்குத் தன்னோட ஆபீஸ்ல இலவசமாக தங்கவைப்பாரு. சாப்பாடும் குடுப்பாரு. அவரு எடுத்த ‘ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ படத்துல எனக்கும் வாய்ப்புக் குடுத்தாரு. அதில் நாகேஷ் சாரும் நடிச்சாரு. அவரு மூத்தகலைஞர். நடிப்பில் இமயமும் கூட. அவருடன் நடிக்கும் போது, அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். `உங்க கூட புதுசா நடிக்கேன்; பயமா இருக்கு’ன்னு சொன்னேன்.

அதுக்கு அவரு, `முதன் முதலா கேமரா முன்னாடி நிக்கும்போது எந்த நடிகன்னாலும் பயப்படத்தான் செய்வாங்க. நானே பயந்துருக்கேன். அதனால நீங்க பயப்படாதீங்கன்னு சொன்னாரு. அப்போ என்னை அறியாம ஷூட்டிங்கில் ஊரு பாஷையில் பேசுவேன். `அண்ணே... நம்ம சைக்கிள் எங்க’ன்னு ஒரு காட்சியில கூட நடிக்கவர் கேட்பார். நான் `அன்னா நிக்கி’ன்னு எங்க ஊரு பாஷையில் சொன்னேன். `சாமான் வாங்கிட்டு வா’ன்னு ஒரு பாத்திரம் சொல்லும்போது, பதிலுக்கு, `வாங்கிட்டு பொசுக்குன்னு வந்துடுகேன்னு’ சொன்னேன். `உதைக்கணும்’ன்னு எழுதியிருந்த இடங்கள்ல, `தூக்கிப் போட்டு மிதிக்கணும்’ன்னு யதார்த்தமா பேசுனேன். அதுவே இன்னிக்கு அடையாளமாகிடுச்சு.

நெல்லை பேச்சு, உங்கள் மண்ணின் மொழி என்பதால் எளிமையாக இருந்திருக்கும் அல்லவா?

அப்படிச் சொல்ல முடியாது. மன்சூர்அலிகான் படத்துக்கு பின்னால ஊருக்கு வந்து ரெண்டரை வருசம் திருந(ல்)வேலி பாஷைய ரிசர்ச் செஞ்சேன் பாத்துக்கோ. 80 வயசு தாண்டுன, கிழவர்கள்தான் அப்ப எனது தோஸ்த். அதுக்குப் பின்னாடி மறுபடியும் சென்னைக்குப் போயி, ஊர் பாஷையில் இன்னும் தெளிவா முழுசா பேசி ஜெயிச்சேன்.

ஒருநாளு எனக்கு ஒரு அம்மா போன் போட்டுது. ஒரு எஸ்.பி-யோட பேரைச் சொல்லி, நான் அவரோட வீட்டம்மான்னு சொன்னாங்க. என்னம்மான்னு கேட்டேன். `நீங்க பேசது, என் தாத்தா, அப்பா பேசது போலயே இருக்கு. அதான் நம்பர் தேடிப் பிடிச்சு வாழ்த்து சொல்லக் கூப்புட்டேன்’ன்னு சொன்னாவ.

இன்னொரு நாளு சென்னையில டூவீலர்ல போயிட்டு இருந்தேன். சிக்னலில் நின்னுட்டு இருந்தப்போ, ஒரு லேடி இன்ஸ்பெக்டர், ஜீப் கதவைத் திறந்து, `அண்ணாச்சி நானும் திருநெவேலிதான்… என்ன சொல்லுதிய’னு சொல்லிச் சிரிச்சுட்டு மூவ் செஞ்சாங்க. இதுதான் நம்ம மண்ணோட மொழியின் மவுசு என்று சொல்லிவிட்டு, “சரிதானா... ஆமா, இப்போ நீங்க என்ன சொல்லுதிய?” என்று நம்மைக் கேட்ட அண்ணாச்சிக்கு சரிதான் என தலையாட்டிவிட்டு விடைபெற்றேன்.

-என்.சுவாமிநாதன், படங்கள்: ராஜேஷ்குமார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close