[X] Close

’வடசென்னை’ டீம் உண்மையான சக்ஸஸ் மீட் வைப்பார்கள்! - இயக்குநர் அமீர் பேச்சு


vadachennai-ameer

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Oct, 2018 14:52 pm
  • அ+ அ-

வடசென்னை குழுவினர், உண்மையான சகஸஸ் மீட் வைப்பார்கள். இந்தப் படம் வெற்றிபெறும் என இயக்குநர் அமீர் பேசினார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் வடசென்னை. இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, கிஷோர், சமுத்திரக்கனி, அமீர் முதலானோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குநர் அமீர் பேசியதாவது:

ஒரு ரசிகனாக இந்தப் படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன். இந்த வடசென்னை படத்தில் நடித்தது எனக்கொரு புது அனுபவம். ‘வேறு இயக்குநரின் இயக்கத்தில் நீங்கள் நடிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்றுதான் முதலில் வெற்றிமாறன் கேட்டார். ‘அது அந்த இயக்குநரைப் பொருத்தது’ என்றேன். ஏனென்றால், ஏற்கெனவே ஒரு இயக்குநரின் படத்தில் நடித்து, டான்ஸெல்லாம் ஆடவைத்து என்னவோ செய்துவிட்டார். அந்த அனுபவம் எனக்கு உண்டு. ‘என்னுடைய இயக்கத்தில் நடிக்க விருப்பமா?’ என்று கேட்டார். ஒத்துக்கொண்டேன். கதை ரொம்பவே பிடித்திருந்தது.

வடசென்னை குறித்த அவ்வளவு விஷயங்களை வைத்திருக்கிறார் வெற்றிமாறன். தேசிய விருது வாங்கிய இயக்குநர், சர்வதேச தரத்துக்கு இணையாகப் படமெடுத்த இயக்குநர் வெற்றிமாறன். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஜாலியாக இருக்கிறார். சீரியஸாக இருக்கிறார். நானெல்லாம் ஏதோ போர்க்களம் மாதிரி படப்பிடிப்பை நடத்துவேன். வெற்றிமாறனைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.

தனுஷின் நடிப்பைக் கண்டு பிரமித்துப் போனேன். அவரின் ஆரம்பகாலத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மூன்று விதமான கட்டங்கள். அந்த இடங்களுக்குத் தேவையான உடல்மொழியை அத்தனை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார். தனுஷ், நம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வலிமையான ஆயுதம்.

அந்தக் காலத்தில் சிவாஜி - ஏ.பீம்சிங், எம்ஜிஆர் - ப.நீலகண்டன் மாதிரி தொடர்ந்து படம் பண்ணினார்கள். ஆனால் இன்றைக்கு இது அரிதாகிவிட்டது. ஆனால் வெற்றிமாறனும் தனுஷும் தொடர்ந்து படம் செய்கிறார்கள். இந்தக் கூட்டணி தொடரவேண்டும். வெற்றிமாறன் மாதிரியானவர்கள்தான் தனுஷின் நடிப்பை இன்னும் வெளிக்கொண்டுவரமுடியும்.

ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். ஆண்ட்ரியாவின் நடிப்பும் அப்படித்தான். இதில் வேறொரு ஆண்ட்ரியாவைப் பார்ப்பீர்கள். டேனியல் பாலாஜியைச் சொல்லவே வேண்டாம்.

இப்போதெல்லாம், படம் ரிலீசானதும் சக்ஸஸ் மீட் என்று ஒன்று வைக்கிறார்கள். இந்த வடசென்னை, உண்மையான சக்ஸஸ் மீட்டாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அமீர் பேசினார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close