[X] Close

டிரெண்ட் உருவாக்குமா செக்கச்சிவந்த வானம்?


trend-seeter-film-ccv

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Oct, 2018 20:51 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

எல்லா காலத்திலும் ஒரு படத்தின் தாக்கமானது அடுத்தடுத்த படங்களில் எவர் இயக்கினாலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதற்குப் பெயர்தான் டிரெண்ட் என்கிறது சினிமா உலகம். ‘அட… இப்படியும் பண்ணலாம் போல…’ என்று இயக்குநர்கள், அந்தப் பாணிக்கு மாறி, படமெடுப்பார்கள். ஹிட்டைச் சுவைப்பார்கள். ‘பாத்தியா… ஹிட்டாகிருச்சு. இதாம்பா இப்ப டிரெண்ட்டு.அதை மாதிரி பண்ணுங்க’ என்று தயாரிப்பாளர்கள், தங்களிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் வெற்றி பெற்ற படங்களைப் போலவே எடுக்கச் சொல்லுவார்கள்.

டிரெண்ட் செட்டர் படம் என்பது, இன்றைக்கு நேற்றைக்கு வந்தது அல்ல. பராசக்தி காலத்தில் இருந்தே இருப்பதுதான். சமூகக் கருத்துகளையும் சமூக அவலங்களையும் சொல்லி வெளியான பராசக்தி, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு யார் யாரோ, இதுமாதிரியான படங்களை எடுத்து, வெற்றியும் பெற்றார்கள். எம்.ஆ.ராதாவின் ரத்தக்கண்ணீர் ஏற்படுத்திய தாக்கம் சொல்லிமாளாது.

‘சார்… ஹீரோ அண்ணனுக்கு ஒரு தங்கச்சி சார்’ என்று கதை சொல்லும்போதே, ‘நல்லா பாசமலர் சிவாஜி, சாவித்திரி மாதிரி உருகவைச்சிருங்க தம்பீ’ என்றுதான் தயாரிப்பாளர்கள் சொல்லுவார்கள். பாசமலர் தமிழ் சினிமாவின் அண்ணன், தங்கைக் கதைக்கு டிரெண்ட் செட்டரானது.

இப்படி எத்தனையோ படங்கள்… டிரெண்டுகளை உருவாக்கியிருக்கின்றன. ஸ்ரீதர் வந்த பிறகு, காதலுக்கும் முக்கோணக் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நிறைய பேர் படமெடுத்தார்கள். பாலசந்தர் படங்கள் வந்ததும், பெண் விடுதலை, பெண்ணின் மன உணர்வுகள், இன்றைய ஆண் பெண் உறவுகள் என ஏராளமான படங்கள் வந்தன.

பாரதிராஜா வந்த பிறகு, கிராமத்து சப்ஜெக்ட் படங்களும் அவுட்டோரில் எடுக்கப்படும் படங்களும் அதிகமாயின. ‘நான் 16 வயதினிலே எடுக்கறதுக்கு முன்னாடியே, அன்னக்கிளி படத்தை முழுசா, அவுட்டோர்லதான் எடுத்தாங்க’ என்று பாரதிராஜாவே சொல்லுகிறார்.

நான்கைந்து நண்பர்கள், ஒரு பெண் என்று பாலைவனச்சோலை ஏற்படுத்திய தாக்கம், அன்றைக்கு இளைஞர்களை தூங்கவிடவில்லை. ஒருதலைராகமும் அப்படித்தான். இந்தப் படம் வந்த பிறகு, கல்லூரி, காதல் என்று நாயகன் கையில் புத்தகத்துடன் படிக்கக் கிளம்பினான்.

பாக்யராஜின் மெளனகீதங்கள் வந்த பிறகு, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் சீரியஸ், அப்படியே ஒரு குடும்பம் என பல கதைகள் வரத்தொடங்கின.

87ம் ஆண்டு, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றமொன்று நிகழ்ந்தது. அந்த மாற்றம்… நாயகன். மாற்றத்தின் நாயகன் மணிரத்னம். இந்தப் படம் வந்ததும், தமிழ் சினிமாவை அப்படியே புரட்டிப் போட்டது. கதை சொல்லும் பாணி, ஒளிப்பதிவு முதலான டெக்னிக்கல் விஷயங்கள், சண்டைக்காட்சிகளின் யதார்த்தம், ‘ஏன்…’ ‘ஆமா…’ அதான் ஏன்…’ ‘அப்படித்தான்’ ‘காரணம் சொல்லு’…, ‘தெரியல, எனக்குத் தெரியல… என்னன்னு சொல்ல எனக்குத் தெரியல’ என்கிற வசனங்கள் ஏற்படுத்திய தாக்கம், பல படங்களில் அப்படியே வந்தன.

அதேபோல், இயக்குநர் அகத்தியனின் காதல் கோட்டைக்குப் பிறகு, காதலை பயாலஜி லேப்பில் வைத்து தவளையை அறுப்பது போல், பார்க்காமலேயே காதல், பார்த்தும் பேசிக்கொள்ளாத காதல், டெலிபோனில் பேசுகிற காதல், பாட்டுப் பாடி உணருகிற காதல், நாக்கை அறுத்துக் கொள்கிற காதல் என விதம்விதமாக, ரகம்ரகமாக, தினுசுதினுசாக வந்துகொண்டே இருந்தன. முக்கியமாக, டைட்டிலில் காதல் என்றே பெயர் கூடசேர்த்து வைத்தார்கள்.

விட்டலாச்சார்யாக்களும் ஜெயலலிதா ஜெய்சங்கர்களும் ரஜினி லதாக்களும் எனப் பேய்ப்படங்கள் அவ்வப்போது வந்த நிலையில், சந்திரமுகியும் அதையடுத்து வந்த காஞ்சனாவும் ஏற்படுத்திய டிரெண்ட் விசித்திரமானது. கோடம்பாக்கம், பேய்களையெல்லாம் 99 வருட குத்தகைக்கு எடுத்துக்கொண்டன. வாராவாரம் வெள்ளிக்கிழமை வரும். வெள்ளிக்கிழமையில் இரண்டு மூன்று படங்கள் ரிலீசாகும். அந்த இரண்டு மூன்றில், ஒரு பேய்ப்படம் நிச்சயம். ஆக, வாரந்தோறும் பேய்கள் விதம்விதமான காரணங்கள் சொல்லி, தியேட்டர்களில் உலவிக்கொண்டிருந்தன.

இப்படியான டிரெண்டுகள்தான், அவ்வப்போது சினிமாவையும் கைப்பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் ரிலீசானது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ் என எல்லோருமே மோஸ்ட் வாண்டட் நடிகர்கள். தவிர, எல்லோருக்கும் பிடித்த நடிகர்கள். குறிப்பாக, டைட்டிலில் பெயர் போடும்போதே, விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி ஆகியோருக்குக் அப்ளாஸ் ப்ளஸ் விசில் காது கிழிக்கும்.

இப்படியான மாஸ் ஹீரோக்கள், ஹிந்தியில் நடிப்பது சர்வசாதாரணம். ஆனால் தமிழில் சான்ஸே இல்லை. எம்ஜிஆரும் சிவாஜியும் ஒரேயொரு படத்தில்தான் நடித்தார்கள். கமலும் ரஜினியும் ஒருகட்டத்தில் தனியே படம் பண்ணுவதே நல்லது எனும் முடிவுக்கு வந்தார்கள். பிறகு ஒரேநாளில், கமல், ரஜினி படங்கள் ரிலீசானாலே, ரசிகர்கள் முட்டிக்கொண்டதெல்லாம் நடந்திருக்கிறது. அஜித் விஜய்யும் ஒரேயொரு படத்தில் நடித்தார்கள். பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிக்கவேண்டியது, தடாலென்று சில குழப்பங்கள், சில அரசியல்கள், சில சூழ்ச்சிகளால் காம்பினேஷன் மாறியது.

கமல், ரஜினி காலத்தில் இருந்தே, தர்மேந்திராவும் அமிதாப்பும் நடித்த இந்தி ஷோலே படத்தை எடுக்கும் ஆவல் இருந்தது. ஆனால் செயல்படுத்த முடியவில்லை. அதேபோல், இந்தி கிரப்தார் படத்தில், அமிதாப், கமல், ரஜினி மூவரும் நடித்ததையெல்லாம் இங்கே ஏக்கத்துடன் பார்த்து பெருமூச்சு விட்டான் ரசிகன்.

கமல் பஞ்சதந்திரத்தில் நடித்திருந்தாலும் அவர்கள் சகபோட்டியாளர்கள் இல்லை. அஜித், மங்காத்தாவில் பண்ணியிருந்தாலும் சரிக்குச் சமமானவர்கள் இல்லை. ஆனால், இப்போது செக்கச்சிவந்த வானம் படத்தில், மாஸ் ஹீரோக்களான விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், அருண்விஜய் (பெரிய ஹீரோ இல்லை என்றபோதும், இவர் எல்லோருக்கும் பிடித்த நடிகர் பட்டியலுக்குள் வந்துவிடுகிறார்) ஒன்றாக நடித்தார்கள். அவரவர்க்கான கேரக்டர்களும் சரிசமமாகவே திரைக்கதையில் கொண்டுவரப்பட்டன. இன்னொரு ஆச்சரியம்… ஒருகட்டத்தில், அரவிந்த்சாமிக்காக கைத்தட்டியவர்கள், சிம்புவுக்கும், சிம்புவுக்கு கைத்தட்டியவர்கள் அருண்விஜய்க்கும் இப்படி எல்லாருக்கும் கைத்தட்டியவர்கள் விஜய்சேதுபதிக்கும் என கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தார்கள்.

இந்த டிரெண்ட்… தமிழ் சினிமாவில் உருவாகுமா? செக்கச்சிவந்த வானம் டிரெண்ட் செட்டர் படமாக அமையுமா?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close