[X] Close

'96’ - என்றும் பதினாறு!


96-vijaysethupathi

96 விஜய்சேதுபதி, த்ரிஷா

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Oct, 2018 12:03 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

படிப்பில் கெட்டியோ பூஜ்யமோ, பள்ளிக்காலம்தான் வாழ்வின் ஆகச்சிறந்த பொற்காலம். அப்படி, 96ம் ஆண்டு பள்ளியில் படித்த வகுப்பு மாணவர்கள், ஓரிடத்தில் கூடிக்கொள்கிறார்கள். அப்படி சந்திப்பதும் அங்கே இருவர் தங்கள் காதலை சிந்திப்பதும்தான் ‘96’ திரைப்படம்.

புகைப்படக்கலைப் பயிற்சியாளரும் டிராவல் போட்டோகிராபருமான விஜய்சேதுபதி தன் மாணவர்களுடன் தஞ்சாவூருக்கு வருகிறார். அதுதான் அவரின் சொந்த ஊர். அங்கே, அவர் படித்த பள்ளிக்குச் செல்கிறார். நினைவுகள் முட்டிக்கொண்டு வருகின்றன. நண்பர்களையெல்லாம் சந்திக்க ஆசைப்படுகிறார். தடதடவென வாட்ஸ் அப்பில், குழுமுகிறார்கள். சென்னையில் சங்கமிக்க முடிவு செய்கிறார்கள்.

அதன்படி, சந்திக்கிறார்கள். கலாய்க்கிறார்கள். உற்சாகமடைகிறார்கள். நெகிழ்ந்து போகிறார்கள். அங்கே... ஜானு வருவாளா என படபடத்துக் காத்திருக்கிறான் கே.ராமச்சந்திரன் (விஜய்சேதுபதி). ஜானு வருகிறாள். மயங்கிச் சரிகிறான்.

பிறகு, சந்திப்பு நிகழ்ச்சி முடிகிறது. ஜானுவுக்கு விடிந்ததும் ஃப்ளைட். அந்த இரவு மட்டுமே அவர்களுக்கானது. ஜானுவும் ராமச்சந்திரனும் அந்த இரவை எப்படிக் கழிக்கிறார்கள், அவர்களின் காதல் எங்கே சிதைந்து போனது, என்னெல்லாம் பேசிக்கொண்டார்கள், பரிமாறிக்கொண்டார்கள் என்பதை, உணர்வு ரீதியாக, மனசின் அடி ஆழத்தில் இருந்து திரைக்கதை விவரிக்கிறது.

சொந்த ஊர், பள்ளிக்கூடம், காதல், நட்பு என்கிற விஷயங்களைக் கலந்துகட்டி எப்படிச் சொன்னாலும் பார்ப்பவர்களை கொஞ்சம் உசுப்பிவிடும். மனசின் அடி ஆழம் சென்று, அசைத்துப்பார்க்கும். இந்த 96... திரைப்படமும் நட்புடன் காதலையும் காதலுடன் கண்ணியத்தையும் கண்ணியத்துடன் ஏக்கத்தையும் சங்கிலித்தொடரென விவரிக்கிறது. இந்த உருவாக்கத்தையும் அந்த விரிவாக்கத்தையும் அழகு குறையாமல், அளவீடு குலையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார்.

பள்ளியின் காவலர் ஜனகராஜிடம் அன்பாகப் பேசுவதும் சந்திப்பு நிகழ்ச்சியில் படபடப்புடன் இருப்பதும் த்ரிஷாவை ஹோட்டல் வாசலில் விடுவதும் சலூன் கடைக்குச் சென்று முடிவெட்டிக்கொள்வதும் ‘ஆம்பள நாட்டுக்கட்டைடா நீ’ என்று சொன்னது, நாணிக்கோணிச் சிரிப்பதும் சாலையில் முன்னாள் காதலியுடன் நடந்து செல்வதும் என தன் உடல்மொழியாலும் நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

காதலில் தயக்கமில்லை, ஆனால் காதலைச் சொல்ல தயக்கம், சேர முடியாத வலி, பிரிவால் விளைந்த துக்கம் என விஜய்சேதுபதி வெகு அழகாக, இலகுவாக ஸ்கோர் செய்கிறார்.

ஜானுவாக வாழ்ந்திருக்கிறார் த்ரிஷா. அப்படி மாறுவதும் வாழ்வதும் புதிதில்லைதான் அவருக்கு. ஏற்கெனவே ஜெஸ்ஸியாக இருந்து  உருகவைத்தவர், இங்கே ஜானுவாக இருந்து கலக்கியெடுத்திருக்கிறார். தன் முன்னாள் காதலனை, கல்யாணமாகி, குழந்தையெல்லாம் பிறந்த பிறகு பார்ப்பது, அதிலொரு தயக்கம், பார்க்கத்தானே போகிறோம், அதற்குத்தானே வந்திருக்கிறோம் என தைரியம், ‘ஏன் என்னைப் பாக்கணும்னே தோணலை உனக்கு’ என்கிற ஆதங்கம், ‘கல்யாண மண்டபத்துல தாலி கட்டும் போது, சினிமால வர்ற மாதிரி என் ஜானுவை எங்கிட்டயே கொடுத்துருங்க’ என்று சொல்லமாட்டியான்னு தவிச்சேன் தெரியுமா என்று சொல்லும்போது வந்த ஏக்கம், ‘நீ சந்தோஷமா இருக்கியா?’ என்ற கேள்விக்கு, ‘சந்தோஷமா இருக்கேன்னு சொல்லமுடியாது. ஆனா நிம்மதியா இருக்கேன்’ என்று ஒற்றை வார்த்தையில் தன் மனசை சொல்லிவிடுகிற தெளிவு... என த்ரிஷா, படம் முழுக்கவே பட்டையைக் கிளப்பியிருக்கிறார். லைப்ஃடைம் கேரக்டர் ஜானு... த்ரிஷாவுக்கு!

விஜய்சேதுபதியின் பால்யத்திலும் த்ரிஷாவின் பால்யத்திலும் வருகிற ஆதித்யனும் (நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன்) கெளரியும் அந்த இரண்டுபேரையும் நமக்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். பள்ளிப்பருவம் என்பதைச் சொல்ல தத்துப்பித்து காமெடிகள் வைக்கவில்லை. விடலைப் பருவத்தைச் சொல்ல, கொஞ்சம் விரசம் கூட காட்டவில்லை. அந்த இரவு நேரத் தனிமையில் உடல் சார்ந்து யோசிக்கவே இல்லை. சொல்லப்போனால், சிங்கப்பூரில் வசிக்கும் த்ரிஷா, இயல்பாகத் தொடுவதும் அப்போதெல்லாம் விஜய்சேதுபதி பயந்து விலகிப் போவதும், அருமையான பாத்திர வார்ப்புகள்.

முதல் பாதி முடிந்து பின்பாதி தொடங்கியதில் இருந்தே படம் நிறைவுறும் வரைக்கும் முழுக்கவே விஜய்சேதுபதியும் த்ரிஷாவும்தான். அப்படி அமைத்த திரைக்கதை தைரியத்துக்கு ஸ்பெஷல் பாராட்டு பொக்கே அனுப்பலாம் பிரேம்குமாருக்கு. அதேசமயம், அந்த இரவைப் போலவே காட்சிகளும் சற்றே நீளம்தான்.  இயக்குநர், விஜய்சேதுபதி, த்ரிஷா என பலரும் சேர்ந்துகொண்டு, பல இடங்களில் நம்மை அழவைத்துவிடுகிறார்கள். அழுதுகொண்டே கைத்தட்ட வைத்துவிடுகிறார்கள். 

கல்லூரிக்கு பார்க்க வந்ததையும் கல்யாணத்தின் போது வந்திருந்ததையும் சொல்லும்போது உடைந்து நொறுங்கி அழுகிறாரே... த்ரிஷா. ‘நம்மப் பாக்க வரவே இல்லை’ என்பது அவளுக்குத் தெரிந்து போகிறது. ‘நாம் வரமாட்டோமா’ என்று அவள் காத்திருந்தது நாயகனுக்குத் தெரிந்து போகிறது. அங்கே, சேர்ந்த காதலின் அடர்த்தியை விட, காதலின் உண்மையையும் மேன்மையையும் எதிர்பார்த்தலையும் மிகத்துல்லியமாக நமக்குக் கடத்திவிடுகிறார்கள் எல்லோருமே!

ஜனகராஜ் கவிதாலயா கிருஷ்ணன், தேவர்தர்ஷினி, பக்ஸ் பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் என எல்லோரும் மனதில் பதிகிறார்கள். இளையராஜாவின் பாடல்களை ஒரு கேரக்டராகவே படைத்திருக்கிற இயக்குநரின் ரசனைக்கு கைகுலுக்கல்கள். உச்சபட்சமாக, ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலைப் பாடுகிற இடம், வலியும் வேதனையும் கிளறுகிற இடம். இனி இந்தப் பாடலைக் கேட்கும் போது, தளபதியுடன் 96ம் ஞாபகத்துக்கு வந்துவிடும்.

படத்தின் ஆரம்பக் காட்சி தொடங்கி, தஞ்சைக்குள் பயணம், சென்னையின் சந்திப்பு, அந்த இரவுப் பொழுது என படம் நெடுக மகேந்திரன் ஜெயராஜ், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஒளிப்பதிவு, காதலைப் போலவே அழகானது. கவிதையைப் போலவே மென்மையானது. நீண்டநாட்களுக்குப் பிறகு பின்னணி இசை என்னவோ செய்கிறது. அப்படியான் இசை மாயாஜாலத்தை படம் முழுவதும் நிரவியிருக்கிறார் கோவிந்த். பாடல்களும் காதலின் கனத்தை கடத்துகின்றன.

காதலும் காதல் சார்ந்த படங்களும் எப்போதுமே மனதில் இனம்புரியாத உணர்வைத் தந்துவிடும். டிபன் பாக்ஸ் திறந்து தருவது, உணவு பரிமாறிக்கொள்வது, ஒருநாள் வரவில்லையென்றாலும் துடித்துப் போவது, எல்லாநாளும் பிரசெண்ட் ஆவது என சின்னச்சின்னதான காதலின் விளைவுகளை படத்தின் முற்பாதியில் சொல்லியிருக்கிற பிரேம்குமார், பிற்பாதியில், முன்னாள் காதலனும் முன்னாள் காதலியும் சேர்ந்து, பேசி, சுற்றிக் கழிக்கிற ஓரிரவுப் பொழுதை, அத்தனை ரசனையுடன் பதிவிட்டிருக்கிறார்.

இந்தக் காதல் சேரணுமே என ஒரு படம் நம்மை நினைக்கத் தூண்டவேண்டும். ஆனால் கல்யாணமே பண்ணிக்கொள்ளாத விஜய்சேதுபதி, கல்யாணம் பண்ணிக்கணும், குழந்தை பெத்துக்கணும், அந்தக் குழந்தையோட கண்ணுலயும் மூக்குலயும் நீ தெரியறியான்னு பாக்கணும், உன் பொண்டாட்டி யாருன்னு பாக்கணும், அவகிட்ட இப்படியொரு புருஷன் கிடைக்கவேமாட்டான்னு சொல்லணும். கல்யாணம் பண்ணிக்கோ ராம்... என்று சொல்கிற இடத்தில், ஜானு கேரக்டர் எங்கேயோ உச்சம் தொட்டு கம்பீரத்துடன் நிற்பதெல்லாம் புதுசு.

காதல் சேராமல், யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டால், அந்தக் கணவன் மோசமானவனாகக் காட்டுகிற சினிமா இலக்கணத்தையும் உடைத்திருக்கிறார் இயக்குநர்.  

96ம் ஆண்டு படித்தவர்களும் காதலித்தவர்களும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சேருகிறார்கள். பார்க்கிறார்கள். பேசிக்கொள்கிறார்கள். முன்னாளாகிவிட்ட காதலர்கள் சம்பாஷித்து, உள்ளம் பரிமாறுகிறார்கள். 96, 90, 80கள், எழுபதுகள் என எந்த வருடத்தில் படித்திருந்தாலும், படம் பார்த்த அத்தனைபேரும் அன்றைய இரவில் தூங்கியிருக்கமாட்டார்கள் என்பது மட்டும் நிஜம். அப்படி தூக்கம் வராமலிருப்பதற்கு, அப்போது பள்ளிக்காலத்தில் காதலித்திருக்கவேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. பள்ளியையும் பள்ளிப்பருவத்தையும் காதலித்திருந்தாலே போதும்.

இந்தச் சிந்தனைத் தூண்டுதல்தான் இயக்குநர் பிரேம்குமாரின் அழுத்தம்திருத்தமான வெற்றி.

96... என்றும் பதினாறு!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close