[X] Close

விஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை: '96' பட விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி விளக்கம்


vijaysethupathi-speaks-about-what-happened-during-96-release

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 06 Oct, 2018 17:36 pm
  • அ+ அ-

விஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை என்று '96' பட வெளியீட்டு சிக்கல் தொடர்பாக விஜய்சேதுபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘96’ படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இதில் விஜய்சேதுபதி, இயக்குநர் ப்ரேம்குமார், சின்மயி, பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியுடன் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இருப்பதால் த்ரிஷா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

’96’ பட வெளியீட்டில் என்ன சிக்கல் நடந்தது என்பதை அப்படத்தின் நன்றி அறிவிப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி விளக்கினார். அச்சந்திப்பில் அவர் கூறியதாவது:

’96’ பட வெளியீட்டுக்கு முன்பு பிரச்சினை இருந்தது. அது சகஜமான ஒன்று தான். யார் மீது யாரும் குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. யாரையோ குறிவைத்து உருவாக்கப்பட்ட பிரச்சினையுமில்லை. ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் தான். ஒரு வட்டத்துக்குள் இருக்கும் பிரச்சினை. அதில் எது தொடக்கம், எது முடிவு என்று சொல்லவே முடியாது. யாரும் இதற்கு பொறுப்பில்லை. 

என் வாழ்க்கையில் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் போது, நாம் அடுத்த கட்டத்திற்குப் போகிறோம் என்று ரொம்ப வலுவாகவே நம்புவேன். யார் மீது எவ்வளவு பாரம் வைக்கிறார்கள் என்பது அப்போது தான் தெரியும். அவன் அந்த பாரத்தை தாக்கி கடந்துவிட்டால், அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என நினைக்கிறேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் இந்தமாதிரியான விஷயங்களை கடந்து தான் வந்திருக்கிறேன். இந்த மாதிரியான விஷயங்கள், சினிமாவில் காலம் காலமாக நடந்து கொண்டிருப்பது தான். 

அதே போல், எனக்கும் விஷாலுக்கும் எவ்வித பிரச்சினையுமே இல்லை. அவர் நல்ல மனிதர். இந்த தவறு யார் மீதுமில்லை. முன்னால் இருப்பதினால் இவர் தான் பிரச்சினை என்று நினைக்கிறோம். அப்படியில்லை. அவருடைய சூழல் என்னவோ, அவர் எவ்வளவு காசுக்கு வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறாரோ?. அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும். எப்போதுமே வெளியே நடப்பதை மட்டும் பார்க்கிறோம், உள்ளே என்ன நடந்தது என்று தெரியாது.

விஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அப்புறம் தானே வருத்தப்படுவதற்கு.  அது அவருடைய நிலைமை. ஒவ்வொரு முறையும் பணத்தை விட்டுக் கொடுக்கும் போது, இவ்வளவு பணம் கொடுத்தேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து சொல்லவா முடியும். இப்போது கொடுத்த பணத்தையும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். 

உங்களுக்கு வெளியே தெரிவது வெறும் 5% தான். அன்றிரவு நான் இருந்தேன். இதுவரை செஸ் போர்டு எல்லாம் விளையாடியிருக்கேன். அன்றைக்கு தான் நான் காயினாக மாறி பார்த்தேன். அது தான் அனுபவம். செஸ் விளையாட்டில் குதிரையாகவும், மந்திரியாகவும் வைத்து விளையாடுவார்கள். அப்போது தான் நம்மை வைத்து விளையாடுகிறார்கள் என்றே தெரியவரும். அதற்கு யாரையும் பழி சொல்ல முடியாது. 

‘சீமராஜா’வுக்கு முன்பு சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும். விமலுக்கு நடந்தது. பைனான்ஸியர்களையும் குறைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த நேரத்தை விட்டால், அவர்களுக்கு வேறு நேரம் கிடைக்காது. தயாரிப்பாளருக்கும், பைனான்சியர்களுக்கு பணம் தான் அடையாளம். எனக்கு படம் தான் அடையாளம். என் படம் வெளியாக வேண்டும் என்பது முக்கியம். என் மக்களின் ரசனை தான் என்னோட பலம். நீங்கள் அனைவருமே என்னை இப்போது பாராட்டுகிறீர்கள் என்றால் காரணம் என் படம். 

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close