[X] Close

கமல் ஸ்டைலில் ‘பேட்ட’ ரஜினி மீசை


kamal-meesai-petta-rajini

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Oct, 2018 09:54 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சமீபகாலமாகவே கமல் முறுக்குமீசையுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே ரஜினி மீசையில் எந்த மாற்றங்களும் செய்யாமலே நடித்துவந்தார். நீண்டகாலத்துக்கு பிறகு பேட்ட படத்தில் முறுக்குமீசை கெட்டப்புடன் நடிக்கிறார் ரஜினி.

முன்பெல்லாம், கமல் ஒரு கெட்டப் போடுகிறார் என்றால், அந்தக் கெட்டப்புடனே வலம் வருவார். மருதநாயகத்துக்காக பின்னங்கழுத்து தாண்டியும் முடி வளர்த்திருந்தார். அதேபோல் நாயகனுக்காக மீசை எடுத்த பிறகுதான், எப்போதும் மீசை இல்லாமல் இருப்பது என்றிருந்தார். சத்யாவுக்கு மொட்டைத்தலையும் தாடியும் என கெட்டப் வைரைட்டி காட்டினார் கமல்.

முறுக்கு மீசை என்பது சகலகலாவல்லனிலேயே அப்படியொரு வேஷத்துடன் இருந்தார். அதில் குடுமி விக் பொருத்தப்பட்டது. பிறகு எல்லாம் இன்ப மயம் மாதிரியான படங்களில், முறுக்கு மீசை வைத்திருந்தார். தேவர்மகன் படத்தில் ஒரு மாதிரியாகவும் விருமாண்டி படத்தில் வேறொரு மாதிரியாகவும் முறுக்கு மீசையை வைத்திருந்ததை ரசிகர்கள் வெகுவாகவே ரசித்தார்கள்.

ரஜினியைப் பொருத்தவரை, இப்போது பேட்ட படத்தின் செகண்ட் போஸ்டர் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெள்ளையும்சொள்ளையுமாக, முறுக்குமீசையுடன் ரஜினியின் கெட்டப் வெளியிடப்பட்டுள்ளது.

யோசித்துப் பார்த்தால், இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில், தப்புத்தாளங்கள் படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் இருப்பார் ரஜினி. அதன் பிறகு, முறுக்கு மீசையுடன் கேரக்டர் எதுவும் செய்ததில்லை என்றே தெரிகிறது. நடுவே, குரு சிஷ்யன் படத்தில், போலீஸ் போல் வேஷம் போட்டு, வினுச்சக்ரவர்த்தி வீட்டுக்கு வரும் போது, முறுக்குமீசை வைத்து, மாறுவேடத்தில் வருவார் ரஜினி.

ஆனால் தில்லுமுல்லு படத்தில் மீசை இல்லாமல் நடித்த ரஜினி, இயல்பிலும் மீசை வைத்துக்கொள்ளாமலேயே இருந்தார். மற்றபடி, முறுக்கு மீசை கெட்டப் ரஜினி செய்து, நீண்டகாலமாகிவிட்டதுதான்.

மழுமழுவனெ மீசை இல்லாமல் இருந்த கமல், மக்கள் நீதி மய்யம் தொடங்கியது முதலே, முறுக்கு மீசை வைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அந்த முறுக்கு மீசையுடனே வந்தார்.

இப்போது இந்தியன் 2 படத்தில் ஷங்கருடன் இணைகிறார். அந்தப் படத்தில் கெட்டப்புக்காக முறுக்கு மீசையை எடுத்தாலும் எடுக்கலாம் கமல். ஆக,இன்றைய தேதி வரை, கமல் முறுக்கு மீசையுடன் அடையாளத்துடன் இருக்க, ரஜினி நீண்டகாலத்துக்குப் பிறகு, பேட்ட படத்தில் முறுக்குமீசையுடன் வருவது குறிப்பிடத் தக்கது.

பேட்ட ரஜினியின் முறுக்குமீசை… இது கமல் ஸ்டைல் என்று நெட்டிசன்கள் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close