[X] Close

பைனான்ஸ் சிக்கலில் ‘96’: விஷால் காரணமா? - தயாரிப்பாளர் சதிஷ் குமார் சாடல்


96-movie-in-finance-issue

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 09:45 am
  • அ+ அ-

‘96’ திரைப்படம் பைனான்ஸ் சிக்கலில் மாட்டியுள்ளது. இதற்கு விஷால் தான் காரணம் என்கிறார்கள். இதனால் விஷாலை கடுமையாக சாடியிருக்கிறார் தயாரிப்பாளர் சதீஷ் குமார்.

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.  இன்று (அக்.4) காலை வெளியாகவிருந்த படம், தற்போது பைனான்ஸ் சிக்கலால் வெளியாகவில்லை. பல்வேறு திரையரங்குகளில் காலை காட்சிக்கு டிக்கெட் எடுத்த ரசிகர்கள், பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த பெரும் எதிர்பார்ப்பே இதற்குக் காரணம்.

இது குறித்து விசாரித்த போது, நந்தகோபால் தயாரிப்பில் விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ படம் தான் காரணம் என்கிறார்கள். அப்படத்துக்காக விஷாலுக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறார் நந்தகோபால். இதனால், அப்பாக்கிகளைக் கொடுத்தால் மட்டுமே ‘96’ வெளியாகும் என்று விஷால் செக் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

இப்பிரச்சினையை சரி செய்ய, ‘96’ சம்பளத்திலிருந்து விஜய் சேதுபதி முதலில் 1கோடி கொடுத்திருக்கிறார். ஆனால், அப்படியிருந்தும் பிரச்சினை முடிவுக்கு வராதக் காரணத்தால் மேலும் 2 கோடி கொடுக்கத் தயார் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருப்பதாக திரையுலக வட்டாரத்தினர் தெரிவித்தார்கள். இன்னும் பேச்சுவார்த்தை முடியாத காரணத்தினால், இறுதியில் யார் எவ்வளவு கொடுத்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது என்று தெரியவரும்.

‘96’ படம் வெளியாகாதது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணிக்கு எதிரான அணியில் இருக்கும் தயாரிப்பாளர் சதீஷ் குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம் நான் சதீஷ் குமார். விஜய் சேதுபதி நடித்த ’96’ படம் சில பிரச்சனைகளால் ரிலீஸுக்கு தாமதமாகிறது. இதன் காரணம் என்ன என்பதை நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது நந்தகோபால் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கும் கடந்த காலங்களில் வரவு செலவுகளில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என்பது தெரியவந்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு விஷால் பெருந்தன்மையோடு(?) இந்த படத்தை ரிலீஸாகாமல் தடுத்து வைத்திருக்கிறார். 

அதை பற்றி கேட்பதற்காக அவருக்கு போன் செய்தேன். ஆனால் அவர் எடுக்கவில்லை. விஷாலுக்கு அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் அதற்கு மாற்று வழி எதாவது இருந்தால் யோசிக்கலாம். இத்தனைக்கும் விஜய் சேதுபதி தன் சம்பளத்திலிருந்து ரூ.1 கோடி தருவதாக சொல்லியிருக்கிறார். ஒரு தலைவர் என்பவர் கலந்து ஆலோசித்து படத்தை ரிலீஸ் செய்ய பார்க்க வேண்டுமே தவிர இப்படி செய்வது அழகல்ல. 

அதே போல நந்தகோபாலிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டுமே தவிர இப்படி போனை எடுக்காமல் இருக்கக் கூடாது. 

முதலில் இந்த விவகாரத்தில் விஷாலின் நிலை என்ன என்பதை அவர் பகிரங்கமாக தெரியபடுத்த வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தயவு செய்து அந்த ஒற்றுமை கெட்டு போகும்படி செய்து விடாதீர்கள். விஷாலின் இந்த செயல் மிகவும் கண்டனத்துகுரியது.

இவ்வாறு சதீஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்ப் படங்கள் வெளியாகும் தினத்தில் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் ‘சீமராஜா’வைத் தொடர்ந்து ‘96’ படமும் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close