[X] Close

இனி வியாழக்கிழமையே ரீலீஸ்?  4 நாள் வசூல் ஐடியா!


thursday-release

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Oct, 2018 20:25 pm
  • அ+ அ-

இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை படம் ரிலீசாகி, சனியும் ஞாயிறும்தான். பிறகு அந்தப் படத்துக்கு பெரிய கூட்டமும் இல்லை. வசூலும் இருப்பதில்லை என்கிற நிலை வந்துவிட்டது. எனவே இனி வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யும் சிஸ்டம்வந்துவிடும் போல! இதனால், மூன்று நாள் வசூல் நான்குநாள் வசூலாகும் என கணக்குப் போடுகிறார்கள் திரையுலகத்தினர்.

எண்பது மற்றும் தொந்நூறுகள் வரை, ஒரு படம் ரிலீசாகி, 25 வது நாள் போஸ்டர் ஒட்டுவார்கள். 50வது நாள் போஸ்டர் ஒட்டுவார்கள். படம் நூறுநாளாகிவிட்டால், பிரமாண்டமான போஸ்டர் ஒட்டுவார்கள். விழா எடுப்பார்கள். பிறகு வேறொரு படம் வந்தால், அந்தத் தியேட்டரில் நூறாவது நாள் ஷீல்டு வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

மேலும் நூறு நாளானதும் தியேட்டர் ஊழியர்களுக்கு போனஸ் மாதிரி ஒருதொகை தருவார்கள். அதேபோல படம் ரிலீசானதும் சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்கள், தோரணம், பேனர், போஸ்டர், வாழைமரம் எனக் கட்டி அசத்துவார்கள். அதேபோல நூறாவது நாளின் போது, 125வது நாளின் போது, 150வது நாளின் போது சில்வர் ஜூப்ளி எனப்படும் 175வது நாளின் போது இந்தக் கொண்டாட்டங்கள் தொடரும்.

இன்னும் ஒரு படி மேலேபோய், நூறாவது நாளுக்குப் பிறகு தியேட்டருக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் என வருவார்கள். அப்படி வருவதாலேயே இன்னும் இருபது நாற்பது நாட்கள் படம் வசூல் மழை பொழியும்.

அப்போது, செகண்ட் ரிலீஸ் உண்டு. அதாவது ஒரு படம் ஒரு தியேட்டரில் ரிலீசாகி, நாற்பது எழுபது நாட்கள் வரை ஓடும். பிறகு அந்தத் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு, அதே ஏரியாவில் உள்ள இன்னொரு சுமாரான தியேட்டரில் இன்று முதல் எனும் அடைமொழியுடன் திரையிடப்படும். அதன் பிறகு, அங்கே இருபது முப்பது நாட்கள் ஓடியதும் டவுனைத்தாண்டி அருகில் உள்ள அவுட்டர் ஏரியாவில் படம் திரையிடப்படும். அங்கேயும் கூட்டம் வழியும். கல்லா கட்டும். இப்படி பட உரிமை பெற்ற அந்த ஐந்து வருடங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் ஒரு படம், வசூலைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

அதேபோல மினிமம் கியாரண்டி நடிகர்கள் என்றொரு பட்டியல் உண்டு. உதாரணத்துக்கு, கமல், ரஜினியைத் தவிர்த்து விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் ஆகியோரின் படங்கள் ரிலீசானால் 40 நாட்கள் உறுதியாக ஓடிவிடும். கதை சூப்பர், பாட்டுகள் ஹிட், நடிப்பு பிரமாதம் என்றால் சில்வர் ஜுப்ளி வரை கூட எகிறியிருக்கிறது. விஜயகாந்துக்கு இப்படியான மெகா வெற்றிப் படங்கள் ஏராளம். பிரபுவின் சின்னதம்பி மாதிரியான படங்களும் கார்த்திக்கின் வருஷம் 16, கிழக்கு வாசல் மாதிரியான படங்களும் சத்யராஜின் பிரம்மா, வால்டர் வெற்றிவேல் மாதிரியான படங்களும் செம ஹிட்டடித்ததெல்லாம் வரலாறு.

ஆனால் இன்றைக்கு சினிமாவுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். நாலாபுறமிருந்தும் எக்கச்சக்க தடைகள். சேனல்களின் ஆதிக்கம் காரணம் சொல்லப்பட்டது. அடுத்து திருட்டு விசிடி சொல்லப்பட்டது. இதன் பிறகு படம் வெளியாகி காலைக் காட்சி ஓடி முடியும் முன்பே, இணையதளத்தில் எந்தப்புண்ணியவானோ ஏற்றிவிடுகிறான். பாவத்தை வாங்கிக் கொள்கிறான். தமிழ் ராக்கர்ஸ் என்றெல்லாம் உலவுவதை கேட்டறிந்திருப்போம்.

இப்போது வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். சனிக்கிழமை சக்ஸஸ் பிரஸ்மீட். ஞாயிற்றுக்கிழமை நான்கைந்து சேனல்களில், ஸ்பெஷல் கவரேஜ். திங்கட்கிழமை அடுத்த வேலைகளில் மூழ்கிவிடுகின்றனர். நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்திய சினிமாவின் சுருங்கிவிட்ட சோகம் இது.

இதில் பெரிய ஹீரோ, பெரிய இயக்குநரின் படங்கள் வந்தால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு துண்டுதான். அந்தப் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ப்ரைம் ஷோக்கள் கொடுப்பதில்லை. சமீபத்திய உதாரணங்களாக… யுடர்ன் படத்துக்கும் ராஜாரங்குஸ்கிக்கும் இப்போது வெளியாகி எல்லோராலும் பாராட்டப்படுகிற பரியேறும் பெருமாளுக்கும் இதுதான் கதி.

இன்னொரு சோகம்… முன்பெல்லாம் ஒருபடத்தின் வெற்றிக்கு ரிப்பீடட் ஆடியன்ஸ் என்று இருப்பார்கள். திரும்பத்திரும்ப பார்ப்பார்கள். மதுரைவீரனை நாப்பது தடவை பாத்தேன். தங்கப்பதக்கத்தை முப்பது தடவை பாத்தேன். பாட்சாவை அம்பது தடவை பாத்தேன். அபூர்வசகோதரர்கள் படத்தை அறுபது தடவை பாத்தேன் என்று பெருமிதத்துடன் சொல்லுவார்கள். ஆனால், இன்றைக்கு ரிப்பீடட் ஆடியன்ஸ் என்பதே இல்லை என்பதே உண்மை.

டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், பப்ஸ், பாப்கார்ன் கட்டணம் என்று செலவுகள் எகிடுதகிடாகப் போக, மிரண்டுதான் போகிறான் ரசிகன்.

சரி… வெள்ளிக்கிழமை ரிலீஸ் விஷயத்துக்கு வருவோம். போனவாரம் வந்த மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் வியாழக்கிழமையே ரிலீசானது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று கூட்டம் கூடியது. போதாக்குறைக்கு திங்களன்றும் ஒரு கூட்டம் இருந்தது. செவ்வாய்க்கிழமை அக்டோபர் 2 அன்று, விடுமுறைக் கூட்டம் கொஞ்சம் வசூல் தந்தது.

இதோ… நாளை வியாழக்கிழமை (4.10.18) அன்று விஜய்சேதுபதி, த்ரிஷா நடிக்கும் 96 திரைப்படம் ரிலீசாகிறது. இன்றைய தேதிக்கு விஜய்சேதுபதி படத்துக்கு நல்ல ஓபனிங் உண்டு. வியாழன் டூ ஞாயிறு கல்லா கட்டலாம் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.  

அதேநேரம், இந்த வாரம் மூன்று படங்கள் ரிலீஸ். 96, விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா, விஷ்ணுவிஷால் நடிக்கும் ராட்சசன் ஆகிய படங்களும் வருகின்றன. இந்தப் படங்களுக்கு சரியான தியேட்டரும் ப்ரைம் டைம் என்று சொல்லப்படுகிற மேட்னி, ஈவ்னிங் ஷோக்களும் பெரும்பாலும் இல்லை என்கிறார்கள்.

அஜித், சிலபல ஆண்டுகளாகவே, தன் படங்களை வியாழக்கிழமையில்தான் ரிலீஸ் செய்து வருகிறார். அவர் சாயிபாபா பக்தர் என்பதாலும் பாபாவுக்கு உகந்த வியாழக்கிழமையில் ரிலீஸ் செய்கிறார் என்றும் சொல்லுகிறார்கள்.

ஆக, கூடிய சீக்கிரமே இனி வியாழனன்று படங்களை ரிலீஸ் செய்யும் காலம் வந்தாலும் ஆச்சரியமில்லை.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close