[X] Close

மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது; சர்காரில் அரசியலே மெர்சலா இருக்கும்!- விஜய் பேச்சு


vijay-speaks-about-sarkar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 22:19 pm
  • அ+ அ-

மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் பண்ணியிருந்தோம். சர்காரில் அரசியலையே மெர்சலா பண்ணியிருப்போம் என சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் ஏ.ஆர்.ரஹ்மான், கலாநிதி மாறன், ஏ.ஆர்.முருகதாஸைத் தொடர்ந்து நடிகர் விஜய் பேசினார்.

அவர் பேசும்போது, "எல்லோருக்கும் வணக்கம். நன்றி நண்பா. என் நெஞ்சில் குடியிருக்கும் எனது நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். ரொம்ப நாள் கழிச்சி ஆசையாக இருந்ததால் நண்பா என்று சொன்னேன். என்னோட படம் வெற்றி பெறும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அதே சந்தோசம்தான் இது மாதிரியான நிகழ்ச்சியில் உங்களைப் பார்க்கும்போது கிடைக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் கிடைத்தது சர்காருக்கு ஆஸ்கர் கிடைத்தது மாதிரி. ரஹ்மானுடன் விவேக் சேரும்போதெல்லாம் ஒரு மேஜிக் நடந்திருக்கிறது.

சர்காருக்காக ஏ.ஆர்.முருகதாஸ் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார் என்றால். சுருக்கமா சொல்லனும் என்றால், மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் பண்ணியிருந்தோம். சர்காரில் அரசியலையே மெர்சலா பண்ணியிருக்கிறார். கலையை வளர்ப்பதற்காகவே நிதியை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இவருக்கு கலாநிதி மாறன் என பெயர் வைத்தார்களோ என்னவோ.

சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்தில், சாவித்திரி அம்மா மாதிரி ஒரு ஆர்டிஸ்ட்டை நம் கண் முன் நிறுத்தியவர். கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். வாழ்த்துகள் கீர்த்தி. வரலட்சுமி நடிப்பதாக சொன்னபோது வர்ற லட்சுமியை ஏன் வேண்டாம்னு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அவர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபுவின் அசுர வளர்ச்சியைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கிறது.

எல்லோருடைய உழைப்பும் சேர்ந்ததுதான் சர்கார். உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னு.. கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். எல்லோரும் தேர்தல் நடத்தி சர்கார் அமைப்பார்கள். நாங்கள் சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கவிருக்கிறோம். நான் சினிமா ரிலீஸை சொன்னேன். சினிமா பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க. ஒருவேளை நான் நிஜத்தில் முதல்வரானால் லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும். ஆனால், நூறு சதவீதம் ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை.

சர்கார் படத்தில் நான் முதலமைச்சரா நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சர் ஆனால் நடிக்க மாட்டேன். ரஹ்மான் சார் என்னை ஒரு பாடல் பாடச் சொன்னார். என்னிடம் அவர் கேட்டதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனால், நல்ல பாடலை கெடுத்துவிடக் கூடாது என்றுதான் நான் அதை செய்யவில்லை" எனப் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close