[X] Close

ரஜினிக்கு அப்புறம் இன்டஸ்ட்ரியில் எளிமையானவர் விஜய்: கலாநிதி மாறன்


kalanithi-maran-praises-vijay

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 21:23 pm
  • அ+ அ-

ரஜினிக்கு அப்புறம் இன்டஸ்ட்ரியில் எளிமையானவர் விஜய் என சர்கார் படத்தின் தயாரிப்பாளரும் சன் குழும தலைவருமான கலாநிதி மாறன் கூறினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இசை வெளியீட்டுக்குப் பின்னர் மேடை ஏறிய கலாநிதி மாறன், நடிகர் விஜய்யை வெகுவாகப் பாராட்டினர். அவர் பேசுகையில், "நான் எந்த சாதனையும் செய்யவில்லை. சாதனை செய்தவர்கள் எல்லாம் கீழே அமர்ந்திருக்கிறார்கள்.

இந்த சினிமாத் துறையில் எனக்குத் தெரிந்து இருவர் மிக எளிமையானவர். ஒருவர் ரஜினிகாந்த். இன்னொருவர் நடிகர் விஜய். விஜய் மட்டும்தான் நல்ல காரியங்களை சத்தமில்லாமல் செய்கிறார். அண்மையில் தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது விஜய் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னார். அப்போ, புதுச்சேரியில் சர்கார் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இரவோடு இரவாக தூத்துக்குடி சென்றவர் மறுநாள் காலையில் ஷூட்டிங் வந்துவிட்டார். பொதுவா ஒரு ஸ்டார் இப்படி உதவ செல்கிறார் என்றார் முதலிலேயே ஊடகங்களுக்கு தகவல் சொல்லிவிடுவார்கள். ஆனால், விஜய் அவ்வளவு எளிமையானவர். அவர் அங்கு சென்றது குறித்து ட்விட்டரில் வந்ததை வைத்தே தெரிந்து கொள்ள முடிந்தது.

விஜய்யின் எளிமைக்கு இன்னொரு விஷயம் சொல்கிறேன். நான் ஒரு முறை விமானத்தில் மனைவியுடன் சென்றேன். என் பின் சீட்டில் விஜய் அவர் மனைவியுடன் இருந்தார். விமானம் தரையிறங்கியபோது என் மனைவி அவரது கைப்பையை எடுத்தார். நான் எனது பெட்டியை எடுக்கும் முன் இன்னொரு கை அதை எடுத்தது. நான் யார் எனப் பார்த்தபோது அது விஜய். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. எவ்வளவு பெரிய ஸ்டார் எவ்வளவு எளிமை எனத் தோன்றியது.

தமிழக தளபதி விஜய், அகில இந்திய தளபதி ஆக மாற வேண்டும்.

எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. சினிமாவில் அவர் நிறைய ரோல் செய்துவிட்டார். அவர் செய்ய வேண்டியது இன்னொன்று இருக்கிறது. அதை ரஜினி ஏற்கெனவே செய்துவிட்டார் விஜய்யும் செய்ய வேண்டும். நீங்கள் நினைப்பதை நான் சொல்லவில்லை. விஜய்யும் ரஜினியைப் போல முழுமையான 3டி படம் நடிக்க வேண்டும். அதை செய்வார் என நம்புகிறேன்" எனப் பேசினார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close