[X] Close

’ஆண்பாவம்’ பாண்டியராஜனுக்கு வாழ்த்துகள்!


rpandiarajan-birthday

ஆர்.பாண்டியராஜன்

  • வி.ராம்ஜி
  • Posted: 02 Oct, 2018 20:50 pm
  • அ+ அ-

குருவின் பேரைக் காப்பாத்தணும். அதான் முக்கியம் என்பார்கள். அப்படி குருவின் பெயரைக் காப்பாற்றிய சிஷ்யர்களில் இயக்குநர் கே.பாக்யராஜுக்கு முக்கியமான இடம் உண்டு. அப்படி நல்ல சிஷ்யனாக இருந்து, பிறகு அவரே நல்ல குருவாகவும் உயர்ந்தார். அப்படியான குருவிடம் இருந்து வந்த முதல் சிஷ்யன்… ஆர்.பாண்டியராஜன்.

பேரைச் சொல்லும்போதே, முதலில் கண்முன்னே வந்து நிற்பது, அவரின் திருட்டுமுழிக் கண்கள்தான். குருவிடம் இருந்து பல வித்தைகளைக் கற்றுகொண்ட பாண்டியராஜனுக்கு, அவரைப் போலவே இந்த முழி இயல்பாகவே அமைந்தது வரம்தான்.

பாக்யராஜிடம் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் உதவி இயக்குநராக இருந்தவர், முதன்முதலில் இயக்குநராக தன்னை வெளிப்படுத்திய அறிமுகப்படம்… கன்னிராசி. பிரபு, ரேவதி, கவுண்டமணி, ஜனகராஜ் முதலானோர் நடித்த இந்தப் படமே, பேசப்பட்ட படமாக அமைந்தது.

சின்னதாக ஒரு கதை, அதை அழகாய் விரித்துச் சொல்கிற திரைக்கதை, முக்கியமாக படம் முழுக்கவே வருகிற காமெடி என ரகளை செய்து ரவுசு பண்ணுகிற பாண்டியராஜனின் படங்கள், பாக்ஸ் ஆஃப் ஹிட்டைக் கொடுத்தன.

கன்னிராசிக்குப் பிறகு இரண்டாவதாக எடுத்த படம்தான் சூப்பர்டூப்பர் ஹிட். சில ஊர்களில் சில்வர் ஜூப்ளியும் பல ஊர்களில் நூறுநாட்களக் கடந்தும் ஓடியது. அப்போது செல்போனும் இல்லை. ரிங்டோனும் கிடையாது. ஆனாலும் காதல் கசக்குதய்யாவும் இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் பாடலும் குயிலே குயிலே பூங்குயிலே பாடலும், டீக்கடைகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. கல்யாண வீடுகளில், லவுட் ஸ்பீக்கர் கட்டி, பட்டையைக் கிளப்பின. இந்தப் படத்தை இயக்கியதுடன் இரண்டாவது நாயகனாவும் நடித்திருந்தார் பாண்டியராஜன்.

இவர் வருகிற காட்சிகளெல்லாம் விசில் பறந்தன. இவரின் விசுக்குவிசுக்கு நடையும் உருட்டிப் பார்க்கிற பார்வையும் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு, வெள்ளந்தியாய்ப் பேசுகிற டயலாக் டெலிவரியும் இயக்குநர் பாண்டியராஜனைப் போலவே நடிகர் பாண்டியராஜனையும் கொண்டாட வைத்தது. ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அடுத்தடுத்த படங்களில் சரவெடி வெற்றிகள் வெடித்துக்கொண்டே இருந்தன. இவரின் நெத்தியடி படத்தின் காமெடியும் ‘வேணு…’ என்று இழுத்தபடி சொல்கிற ஜனகராஜின் காமெடியும் யானைவெடிகளும் மத்தாப்பூக்களும் கொண்ட சிரிசிரி தீபாவளி.

கபடிகபடி, தாய்க்குலமே தாய்க்குலமே, ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், கோபாலா கோபாலா என பாண்டியராஜன் கொடுத்ததும் நடித்ததுமான படங்கள் எல்லாமே மக்களின் மனம் கவர்ந்த படங்களாயின.

உள்ளம் கவர் கள்வன் படம் அழகிய காதல் ப்ளஸ் காமெடி. கதாநாயகன் முழுக்கமுழுக்க காமெடி ரகளை. இவரின் வாய்க்கொழுப்பு, கொஞ்சம் செண்டிமெண்ட்டும் காதலும் நகைச்சுவையும் கொண்ட செம கலாட்டா.

இத்தனைக்கும் நடுவே, அஞ்சாதே மாதிரியான படத்தில் நெகடீவ் ரோல்களிலும் பின்னிப்பெடலெடுத்தார் பாண்டியராஜன்.

பாண்டியராஜன் என்ன செய்தாலும் ரசிப்போம். ஏனென்றால், பாண்டியராஜனை எல்லோருக்குமே பிடிக்கும். குரு மரியாதையுடன் மனிதாபிமானமும் அலட்டல் இல்லாத குணமும் கொண்டு, எல்லோரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற ஆர்.பாண்டியராஜனுக்கு இன்று பிறந்தநாள் (அக்டோபர் 2).

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆனால் எண்பதுகளிலேயே ஆண்பாவம் எடுத்த நாயகன் ஆர்.பாண்டியராஜனுக்கு வாழ்த்துகள்.

ஹேப்பி பர்த்டே பாண்டியராஜன் சார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close