[X] Close

பிக்பாஸ் வின்னர் ரித்விகா! வாழ்த்துகள் ரித்து!


biggboss2-rithvika

பிக்பாஸ் சீசன் 2 வின்னர் - ரித்விகா

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Sep, 2018 22:38 pm
  • அ+ அ-

பிக்பாஸ் 2 சீசன் முடிவுக்கு வந்துவிட்டது. பிக்பாஸ் சீசன் 2வின் வின்னரானார் ரித்விகா.

பிக்பாஸ் 2 சீசனில், அனந்த் வைத்தியநாதன், மமதி, ரம்யா, மும்தாஜ், பாலாஜி, சென்றாயன், டேனியல், வைஷ்ணவி, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, பொன்னம்பலம், நித்யா, ஷாரிக், மமத், ரித்விகா என 16 பேர் பிக்பாஸ் 2 சீசனில் வீட்டுக்குள் வந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் களைகட்டத் தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக மெர்ஜானார்கள். இவரும் அவரும் அவரும் இவரும் என ஒட்டிக்கொண்டார்கள். இதில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளானார்கள். பாலாஜியின் கோபம் பலரையும் மிரட்டியெடுத்தது. சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தைகள் வேறு உதிர்த்துக்கொண்டே இருந்தார்.

ஆனால், நாளாக ஆக, ஒரு நிதானம் கைக்குள் வந்தது பாலாஜிக்கு.இதேபோல் பொன்னம்பலத்தின் ஜெய் ஸ்ரீராம் எனும் வாக்கியம், அவரின் உள்முகத்தைக் காட்டியது.ஷாரிக்கை, தன் மகனைப் போலவே பாவித்தார் மும்தாஜ். யாஷிகாவிடம் பிரியமாக இருந்தார். எல்லோரிடமும் நேசத்துடன் இருந்தார். ஆனால் மும்தாஜின் ஆயுதம் அன்பு என்றார்கள்.

சென்றாயனை எல்லோருக்கும் பிடித்துப் போனது. அவரின் வெள்ளந்தியான பேச்சு எல்லாரையும் மயக்கியது. நேயர்கள் மனதில் இடம்பிடித்தார். இதனிடையே ஒவ்வொருவராக வெளியேறினார்கள். அனந்த் வைத்தியநாதன், மமதி என வெளியேறினார்கள். ரம்யா வெளியேறினார். நித்யா வெளியேறினார். பொன்னம்பலம் அண்ணா வெளியேறும் போது, கமலே பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றார்.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில், சர்வாதிகாரி டாஸ்க்தான் ஏகத்துக்கும் பாப்புலர். பாலாஜி தலையில் குப்பை கொட்டியது பரபரப்பைக் கிளப்பியது. எதற்கெடுத்தாலும் பாலாஜி சாந்தசொரூபியாய் இருந்தது ஆச்சர்ய புஸ்வாணம். டேனியலும் ஜனனியும் கூட மக்களிடம் பாப்புலரானார்கள். ஒருகட்டத்தில் ஷாரிக் வெளியேறினார். வைஷ்ணவி வெளியேறினார். ‘வைல்டு கார்டு கொடுத்து என்னை உள்ளே விடுங்க சார். அவங்களை… ‘ என்று ஷாரிக் அம்மா உமா ரியாஸ்கான் சொன்னபோது, கமல் தலையிலடித்துக்கொண்டார். அடுத்து விஜயலட்சுமி உள்ளே வந்தார். வைல்டு கார்டு சிஸ்டம்.

மஹத்தும் ஒருசமயத்தில் வெளியேறினார். டேனியல் கிளம்பிய போது, வீட்டில் ஜாலிகேலி குறைந்துபோனது. மும்தாஜ் வெளியேறிய போதுதான் அங்கிருந்தவர்கள், மும்தாஜின் அன்பைப் புரிந்துகொண்டார்கள். டேனியல் வெளியேறிய மறுநாளே காதலியை மனைவியாக்கிக் கொண்டார். சென்றாயன் மனைவி கயல்விழி வந்தார்.நீங்க அப்பா ஆகப் போறீங்க என்று சொன்னபோது பூமிக்கும் வானுக்குமாக குதித்து மகிழ்ந்தார் சென்றாயன். அடுத்த வாரமே சென்றாயன் வெளியேறினார்.

நடுவில், மும்தாஜ், ரித்விகா, ஜனனி, டேனியல், பாலாஜி, விஜயலட்சுமி என அவரவர் வீட்டில் இருந்து குடும்பத்தார் வந்தபோது, முதல் ஆளாக அவர்களை வரவேற்று உபசரித்தார் சென்றாயன். இதில் நேயர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

ஐஸ்வர்யா அம்மா, பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார். ‘நீ பெருமைப்படுத்திட்டேம்மா’ என்று மும்தாஜின் அம்மா நெக்குருகிப் போனார். யாஷிகாவை எல்லோருக்கும் பிடித்துப் போனது. ஒருகட்டத்தில், ஐஸ்வர்யாவின் குணத்தைப் புரிந்து உணர்ந்துகொண்டார்கள். அந்த அன்புக்கு ஏங்கும் குணம் கண்டு சிலிர்த்தார்கள். பாலாஜியும் யாஷிகாவும் வெளியேறினார்கள்.

கட்டக்கடைசியாக, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா என நான்குபேர்தான் பிக்பாஸ் வின்னர் போட்டிக்கு, வீட்டுக்குள் இருந்தார்கள்.

அதில், ஜனனி நேற்றே வெளியேறினார். அடுத்து இன்றைய நிகழ்ச்சியில் ஆரவ், பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விஜயலட்சுமியை அழைத்துச் சென்றார்.

அடுத்து, ஐஸ்வர்யா, ரித்விகா, இதில் ரித்விகாவை பிக்பாஸ் 2 சீசனின் வின்னராக அறிவித்தார் கமல். நெகிழ்ந்து அழுதே விட்டார் ரித்விகா. நேயர்கள் மிகுந்த கரவொலி எழுப்பினார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ஐஸ்வர்யா உட்பட எல்லோருமே பாராட்டிக் கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.

வாழ்த்துகள் ரித்விகா!

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close