[X] Close

'பரியேறும் பெருமாள்' - திரையுலக பிரபலங்கள் சொன்னது என்ன?


tamil-film-industry-reactions-for-pariyerum-perumal-film

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 20:31 pm
  • அ+ அ-

'பரியேறும் பெருமாள்' படம் குறித்து திரையுலக பிரபலங்கள் கூறிய கருத்துகளின் தொகுப்பு

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோருடன் பல்வேறு புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடி வருகிறார்கள். அவர்களது கருத்துகளின் தொகுப்பு

புஷ்கர் காயத்ரி: பரியேறும் பெருமாள் இதயமுள்ள படம். ஒரு எழுத்தாளர், இயக்குநராக மாரி செல்வராஜ் ஒரு புதிய கண்டுபிடிப்பு. நம்பிக்கை என்பதை வைத்து நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். கதிர் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் தேர்ந்த நடிப்பைத் தந்துள்ளார். சந்தோஷின் இசை ஆத்மார்த்தமாக உள்ளது. நீலம் தயாரிப்புக்கு சரியான துவக்கம். பா ரஞ்சித்துக்கு பெரும் பாராட்டுகள். 

தயாரிப்பாளர் சசிகாந்த்: சின்ன மாணிக்கம் இந்தப் படம். மாரி செல்வராஜின் தேர்ந்த கலை படைப்ப். அவரது அடுத்த படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. சந்தோஷ் தனது கிராமிய இசை மாயாஜாலத்தை படம் முழுவதும் கொட்டியுள்ளார். கதிர் அழகான, பண்பட்ட நடிப்பைத் தந்துள்ளார். வாழ்த்துகள். எல்லாவற்றுக்கும் தயாரிப்பாளர் ரஞ்சித் தான் காரணம். உங்களுக்கும் வாழ்த்துகள்.

'இரும்புத்திரை' மித்ரன் - பரியேறும் பெருமாள் ஒரு பொக்கிஷம். வேதனை, அடக்குமுறை பற்றிய அதி அற்புதமான கதை. மாரி செல்வராஜின் கலைத்திறனும், எழுத்தும் ஆச்சரியமூட்டுகிறது. இன்னும் வேண்டும் என கேட்க வைக்கிறது. இந்த க்ளாசிக்கை தயாரித்த பா ரஞ்சித்துக்கு நன்றி. திரையரங்கில் பாருங்கள்.

தயாரிப்பாளர் சதிஷ் குமார் - மாரி செல்வராஜிடமிருந்து தீவிரமான படைப்பு. கதிரும், ஆனந்தியும் படத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். இருவரிடமிருந்து ஆச்சரியகரமான நடிப்பு. இந்த தைரியமான படத்தைத் தயாரித்த பா ரஞ்சித்துக்கு விசேஷ பாராட்டுகள். இயக்குநர் ராம் பள்ளியிலிருந்து வந்த மாரி செல்வராஜ் ஃபர்ஸ்ட் க்ளாஸில் தேர்ந்து விட்டார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ்: பரியேறும்பெருமாள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். மனம் திறந்து விரிந்து, மானம் என்றுமே மனிதம் மட்டுமே என மாண்புடன் பறைசாற்றும் உன்னத படைப்பு.  இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முத்தங்கள். தயாரிப்பாளர் ரஞ்சித் அவர்களுக்கு அரவணைப்புகள் படைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள்

இயக்குநர் தாஸ்ராமசாமி: ”சாதியும் மதமும் மனித சமூகத்திற்கு எதிரானது” என்ற வாசகத்துடன் திரைப்படம் தொடங்கி,  சாதிய ஒழிப்பு எங்கிருந்து தொடங்கவேண்டும் என்பதில் முடிகிறது  இந்த பரியேறும்பெருமாள் பெரும் மகிழ்ச்சிக்கான வாழ்த்துக்கள்

இயக்குநர் ராஜுமுருகன்: 'பரியேறும் பெருமாள்' பார்த்தேன். மிக மிக முக்கியமான படம். முதல் காட்சியில் அதிரும் இதயம் கடைசி வரை அடங்கவில்லை. இந்த நிலமெங்கும் விஷம் போல் பரவியிருக்கும் சாதியத்தின் முகத்தில் மோதி மிதிக்கிறது இந்தப் படைப்பு. இது முன் வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் நம் முன் பூதம் போல் தோன்றி,  உறக்கத்தை கெடுக்கும். நம் மனசாட்சியை உலுக்கும். சொல்லத் தயங்குகிற, சொல்லியே ஆக வேண்டிய இந்த மண்ணின் கதையை மிக நேர்மையாக, துணிவாகப் பேசுகிறான் இந்தப் பரியன். கருப்பியில் தொடங்கி கதை நாயகனின் அப்பாவாக வருகிறவர் வரை ஒவ்வொருவரும் நமது உயிர்கள். படம் முடிந்த பிறகு தண்டவாளத்தில் கிடக்கும் கருப்பியாகவும் மேசையில் படபடக்கும் மல்லிகையாகவும் மனம் மாறிவிடும். முதல் படைப்பிலேயே இந்த அற்புதத்தை நிகழ்த்திய தம்பி மாரி செல்வராஜுக்கு நிறைய ப்ரியங்கள். இந்த மாதிரி படத்தை தயாரித்திருப்பது இந்த மண்ணுக்கும் சமூகத்துக்கும் தோழன் பா.ரஞ்சித் செய்திருக்கும் முக்கியமான பங்களிப்பு. நேர்த்தியான உருவாக்கத்தில் தோள் கொடுத்த சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்! பரியனைக் கொண்டாடுவோம் தோழர்களே! 

இயக்குநர் பிரம்மா: இந்த முத்தான படம் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. இந்த படத்தை அதன் உண்மையான எழுத்துக்காக, சரியான நடிகர்கள் தேர்வுக்காக, நம்பிக்கையளிக்கும் உள்ளடக்கத்திற்காக, அமர்க்களமான நடிப்புக்காக, மிகச் சிறப்பான கையாளுதலுக்காக திரையரங்கில் பார்க்க வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close