[X] Close

குஷ்பு மேடம்… பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம்!


kushboo-birthday

குஷ்பு

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Sep, 2018 19:40 pm
  • அ+ அ-

ஜெயிப்பது பெரியவிஷயமே இல்லை. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்வதில்தான், திறமையும் சாதுர்யமும் அணுகுமுறையும் அன்பும் இருக்கிறது. அப்படித் திறமையுடன், சாதுர்யத்துடன், நல்ல அணுகுமுறையுடன், எல்லோரிடம் அன்பாக நடந்துகொண்ட அற்புதமான நடிகை… குஷ்பு.

மும்பைப் பக்கம் மகாராஷ்டிராதான் குஷ்பு பிறந்த ஊர். குழந்தை நட்சத்திரமாக அங்கே கேமிராவுக்கு முன்னே நடிக்கத் தொடங்கினார். பிறகு தர்மத்தின் தலைவன் படத்தில் 88ம் ஆண்டு, தமிழுக்கு அறிமுகமானார். ரஜினி நடித்த படத்தில் பிரபுவின் ஜோடி. அடுத்ததாக இயக்குநர் பாசிலின் வருஷம் 16 படத்தின் போதே, ‘ஏங்க… நடிகை குஷ்புன்னு ஒரு பொண்ணு வந்திருக்குது. எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும். அதனால எங்க வூட்டு ரேஷன்கார்டுல அது பேரை சேக்கலாமுங்களா?’ என்று கேட்கிற அளவில் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

அதே வருடத்தில் கமல் நடித்த வெற்றிவிழா. பிரபு ஜோடியாக நடிக்க, ஹிட் ஜோடி என்று கைத்தட்டியது. மீண்டும் கார்த்திக்குடன் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், கிழக்கு வாசலில் செம ரகளை பண்ணியிருப்பார் குஷ்பு.

ஆக, அடுத்தடுத்து உள்ள மூன்று நான்கு படங்களிலேயே கனமான கேரக்டர் தாங்கி நடித்தது குஷ்புவாகத்தான் இருக்கும். ஒவ்வொரு படத்திலும்உடன் யார் நடித்திருந்தாலும் குஷ்பு, தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்துக்கொண்டு, ராஜாங்கம் பண்ணினார். குஷ்பு குஷ்பு குஷ்பு… என்று கொண்டாடினார்கள் மக்கள்.

யார் நடிகர், தயாரிப்பாளர் எப்படி, இயக்குநர் யார் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார் குஷ்பு. நல்ல கதையா, நம் கேரக்டர் நன்றாக இருக்கிறதா… என்று பார்த்து ஓகே சொல்லிவிடுவார். அடுத்தடுத்து, சத்யராஜ், விஜயகாந்த், பார்த்திபன் ஏன்… ராமராஜனுடன் கூட ஜோடி சேர்ந்தார் குஷ்பு.

ரஜினியுடன் அண்ணாமலை, மன்னன், கமலுடன் சிங்காரவேலன், மைக்கேல் மதன காமராஜன் என்று நடித்தார். ரஜினி ரஜினி என்று பாட்டில் பெயர் வருவது சாதாரணம். ரஜினிக்கு இணையாக குஷ்பு குஷ்பு என்று எழுதினார் வைரமுத்து. திருச்சியில் குஷ்புவுக்கு கோயிலே கட்டினார்கள் எனும் செய்தியெல்லாம், இந்திய நடிகைக்கு, உலக நடிகையருக்குக் கூட கிடைக்காத மரியாதை. கெளரவம். பேரன்பு.

தாலி எனும் ஒற்றை விஷயத்தைக் கொண்டு, இயக்குநர் பி.வாசு வித்தை காட்டினார். அந்தப் படம் சின்னதம்பி. இந்தப் படத்தின் வெற்றிக்கு இருவர் காரணம்… ஒன்று, இளையராஜா. அடுத்தவர் குஷ்பு. மெகா மகா பிரமாண்ட ஹிட்டடித்து, வசூலில் சாதனை படைத்தது.

நடுவே வருத்தங்கள். சோகங்கள், துரோகங்கள், காயங்கள்.

‘மனசு உடைஞ்சு போய் அந்தப் பொண்ணு ஷோபா மாதிரி, படாபட் மாதிரி எதுனாப் பண்ணிக்கப் போவுதோன்னு பயந்தார்கள் மக்கள். தங்கள் குலசாமிக்கு படையல் போட்டு, குஷ்பு நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள் ரசிகர்கள்.

அத்தனையும் தாண்டி, எது பற்றியும் யோசிக்காமல், நடிப்பு நடிப்பு நடிப்பு என யோசிக்க நேராமல் நடித்துக்கொண்டே இருந்தார். தமிழே தெரியாத குஷ்பு, தமிழ் கற்றுக்கொண்டார். பேட்டிகளிலும் விழாக்களிலும் தமிழில் திக்கித்திணறிப் பேசினார். இயக்குநர் சுந்தர்.சி.யின் படங்களில் நடித்தார்.

அங்கே இனிய உறவு பூத்தது. புரிந்து உணர்ந்து கருத்தொருமித்தார்கள். கல்யாணம் செய்துகொண்டார்கள். மும்பையில் இருந்து நடிக்க வந்தவர், நடிப்பு வேலை பார்க்க வந்தவர், அப்படியே அக்மார்க் தமிழ்ப்பெண்ணாகவே மாறினார். இன்னும் தெளிவாகவும் அழகாகவும் தமிழில் பேசினார்.

குழந்தைகள் பூத்தார்கள். சினிமாவிலும் டிவி ஷோக்களிலும் என இரட்டைக் குதிரைச் சவாரி செய்து, ஜெயித்தார். ஜாக்பாட் அடித்தார்.

இன்றைக்கு, சினிமா, டிவி, தயாரிப்புப் பணிகள், அரசியல், குடும்பம் என இன்னமும் பரபரசுறுசுறுவிறுவிறு குஷ்புவாகவே, அந்த வருஷம் 16 குஷ்புவாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.

தமிழ் கூறும் நல்லுலகில், ‘இட்லின்னா மல்லிப்பூ மாதிரி இருக்கணும்’ என்கிற சொலவடையை மாற்றிவிட்டு, ‘குஷ்பு இட்லி’ என்று பேர் வைத்தார்கள் தமிழர்கள். இதெல்லாம் குஷ்புவின் எக்ஸ்ட்ரா அட்ராசிட்டி சாதனைகள்.

குஷ்புவை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோருக்கும் எப்போதும் பிடிக்கும்.

அந்த குஷ்புவுக்கு இன்று 29.9.18 பிறந்தநாள்.

நல்லா இருங்க குஷ்பு மேடம். வாழ்த்துகள்!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close