[X] Close

“அந்தக் காலம் எல்லாம் மலையேறிடுச்சு!” - நிஜம் சொல்லும் நெறியாளர் கோபிநாத்


gopinath-interview

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 18:03 pm
  • அ+ அ-

யு-டியூப் தளத்தில் ‘லிட்டில் டாக்ஸ்’ சேனல் வழியே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விஜய் டிவி-யில் ‘டிவைடெட்’ ஷோ, வழக்கம் போல ‘நீயா நானா’வின் பரபரப்பு, ‘ரீடிஃபைன்’ என்ற பெயரில் பேச்சாற்றலுக்கான வொர்க் ஷாப், வெப் சீரீஸ், நடிப்புக்கான புதிய கதைகள் கேட்பது என எறும்புகளை மிஞ்சிய சுறுசுறுப்புடன் சுற்றி வருகிறார், தொலைக்காட்சி நெறியாளர் கோபிநாத். அவருடன் சில நிமிடங்கள் பயணித்ததிலிருந்து…

புதிய நிகழ்ச்சிகள் உங்களது நடை, உடை, பாவனைகளையும் மாற்றியிருக்கிறதே?

இந்த நியூ லுக்குக்குப் பெரிய வரலாற்றுக் காரணமெல்லாம் கிடையாது. ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட லுக் கொடுக்கணும்னு ‘டிவைடெட்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தரப்பில் விரும்பினாங்க. அதனாலதான் இந்த மாற்றம். ஹேர் ஸ்டைல் மாற்றத்தை ‘டோனி அண்ட் கை’ கணேசன் பார்த்துக்கிட்டார். ரொம்ப நாளா எனக்கு காஸ்ட்யூம்ஸ் டிசைன் பண்ணணும்னு சொல்லிக்கிட்டே இருந்த சத்யா இந்த நிகழ்ச்சி வழியா அந்த ஆசையை தீர்த்துக்கொண்டார். வழக்கமான கோட் ஸூட் கோபிநாத் இப்படி மாற இதுதான் காரணம்.

ஒரே சமயத்தில் ‘லிட்டில் டாக்ஸ்’ டிஜிட்டல் மீடியா பயணம், மற்றொரு பக்கம் ‘ரீடிஃபைன்’ நேரடி வொர்க் ஷாப் நிகழ்ச்சி. இது வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறதே?

இப்போ அதிகமா டிஜிட்டலோட ஆட்சி நடக்குது. அதனால, அந்தச் சூழலுக்கு ஏற்றமாதிரி ஒரு யு-டியூப் சேனல் தொடங்கினோம். இதைப் பின்னாலிருந்து இயக்குவது மட்டும்தான் என் வேலை. கல்லூரி முடித்து வெளியே வர்ற சில இளம் தலைமுறையினர்தான் இதை நடத்துறாங்க. இப்போதைக்கு சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு விஷயங்களைத் தொடுறோம். அடுத்து இது கிளைத்துப் படரும். அதோடு சமீபத்துல ‘ரீடிஃபைன்’ என்ற பெயர்ல ‘தி ஆர்ட் ஆஃப் பப்ளிக் ஸ்பீக்கிங்’ என்ற ஒரு வேலையையும் தொடங்கியிருக்கேன். இங்கே புதிதாகக் கற்றுக்கொள்வது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் பழைய விஷயங்களை மறக்க வேண்டும். ஒருத்தர் நல்லா பேசணும்னு சொன்னா, முதல்ல கண்ணாடி பார்த்து கற்றுக்கொள்ளுங்க. எழுதி வைத்துப் படிங்கன்னு சொல்லத்தான் செய்றோம். இன்றைக்கு இருக்கும் இந்த உலகம் புதிது. இந்த மனிதர்களோட சிந்தனை, உளவியல் எல்லாமும் வேறு. இவர்களுக்கு எதுக்கு பழைய முறைகள்? அதை உடைக்கும் விதமான வொர்க் ஷாப் நிகழ்ச்சிதான் இது. சென்னையில் இந்த நிகழ்ச்சி வெற்றி அடைந்துள்ளது. இது விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரியும். சர்வதேச அளவிலும் இதைக் கொண்டு செல்வதற்கான பணிகள் நடக்கின்றன.

நாயகன் வாய்ப்பு தேடி வருகிறதாமே?

இப்போதும் சிலர் சினிமாவில் இருந்து நீங்கள் விலகியே இருக்கிறீர்களே எனக் கேட்கிறார்கள். அப்படி நான் திட்டமிட்டு விலகுவதில்லை. எனக்கு சினிமா குறித்து பெரிதாகத் தெரியாது. அதுவாக அமையும்போது எனக்கும் அது பிடிக்குமானால் அதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த வரிசையில்தான் இப்போது முன்னணி கதாபாத்திரங்கள் செய்ய 2 கதைகள் வந்துள்ளன. அது வலுவானதாக இருந்தால் பார்க்கலாம். எனக்கு இயக்கம் மீதும், வசனம் எழுதுவது மீதும் தனி பிரியம் உண்டு. அதனால்தான் இப்போது வெப் சீரீஸ் வேலைகளைத் தொடங்க திட்டமிடுகிறேன்.

இத்தனை பிஸி ஷெட்யூலுக்கு நடுவே குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடிகிறதா?

குடும்பத்துக்கு நேரம் இல்லைன்னு சொல்றதெல்லாம் சும்மா கதை. மனைவி, குழந்தை என நான் குடும்பத்துக்கு நிறையவே நேரம் செலவிடுகிறேன். மீடியான்னு இல்லை. இப்போ எல்லா தளத்திலுமே காலை 7 மணிக்கு கிளம்பினா இரவு 11 மணிக்குத்தான் வீடு வர்றாங்க. மாலை 5 மணிக்கு வீட்டுக்குப் போற சூழல் எல்லாம் மலையேறிடுச்சு!

-மஹா

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close