[X] Close

மணிரத்ன வெற்றி! - மனசை அள்ளும் செக்கச்சிவந்த வானம்!


sekka-sivandha-vaanam-maniratnam

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Sep, 2018 10:48 am
  • அ+ அ-

கேங்ஸ்டர் படமொன்றும் தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் புதிதில்லை. ஆனால் எடுத்துக்கொண்ட விஷயத்திலும் சொல்லப்பட்ட்ட விதத்திலும், தனக்கு நிகர் தானே என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறார்... மெளன மணிரத்னம். ஆமாம்... கேங்ஸ்டர் கதைதான் செக்கச்சிவந்த வானம்!

மிகப்பெரிய ஆளுமையான கேங்ஸ்டர் சேனாபதி என்கிற பிரகாஷ்ராஜ். இவரின் மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு வரதன் அரவிந்த்சாமியும் தியாகு அருண்விஜய்யும் எத்திராஜ் சிம்புவும் மகன்கள். ஒரு மகளும் உண்டு. திருமணநாளன்று கோயிலுக்குப் போய்விட்டு வரும் இந்தத் தம்பதி மீதான தாக்குதலில் இருந்து படம் தொடங்குகிறது.

அப்பாவுக்கு நேர்ந்த தாக்குதல் அறிந்து துபாயில் இருக்கும் அருண்விஜய்யும் செர்பியாவில் உள்ள சிம்புவும் உடனடியாக வருகிறார்கள். அப்போது அப்பாவை இப்படிச் செய்தது யார் என்று யோசிக்க, எல்லோரும் இன்னொரு கேங்ஸ்டரான தியாகராஜன் மீது சந்தேகப்படுகிறார்கள். அதேசமயம், தன் பால்ய நண்பனும் போலீஸ் இன்ஸ்பெக்டருமான ரசூல் விஜய்சேதுபதியிடம் விசாரித்து சொல்லச் சொல்கிறார் அரவிந்த்சாமி.

இந்த நிலையில், அப்பாவுக்குப் பிறகு அப்பாவின் இடம் யாருக்கு என்கிற கேள்வி வருகிறது. அந்த நீயாநானா... அரவிந்த்சாமியா... அருண்விஜய்யா என்று முட்டிக்கொண்டு நிற்கிறது.

இதனிடையே தாக்குதலில் இருந்து தப்பித்த பிரகாஷ்ராஜ், இந்தத் தாக்குதலைச் செய்ததே தன் மகன்களில் ஒருவர்தான் என்பதை அறிந்துகொள்கிறார். மனமுடைந்திருக்கும் அவர் நெஞ்சுவலியால் இறந்தும் போகிறார்.

பிறகு அண்ணன் தம்பிக்குள் முட்டிக்கொள்கிறார்கள். மோதிக்கொள்கிறார்கள். அண்ணன் அரவிந்த்சாமியை, அண்ணன் அருண்விஜய்யைத் தலைமையாக வைத்துக்கொண்டு, தம்பி சிம்புவும் முஷ்டி மடக்குகிறார். நடுவே, போலீஸ் வேலையில் சஸ்பெண்டாகி இருக்கிற விஜய்சேதுபதியை, எல்லோருமே உதவி கேட்டு வர, பணத்துக்காக அவர்களை ஒவ்வொரு நிலையில் பயன்படுத்திக்கொள்கிறார்.

சொத்துத் தகராறு, பங்காளித்தகராறு போல, யார் கேங்ஸ்டர் எனும் தகராறில் அந்த இடத்தை யார் பிடித்தார்கள்? பிடித்தார்களா என்பதுதான் செக்கச்சிவந்த வானத்தின் கதையும் திரைக்கதையும்.

பிரகாஷ்ராஜ் ஜெயசுதா, அரவிந்த்சாமி ஜோதிகா, அருண்விஜய் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு டயானா எரப்பா, திருமணம் செய்துகொள்ளாத விஜய் சேதுபதி, அரவிந்த்சாமியுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிதி ராவ், தியாகராஜன், அரவிந்த்சாமியின் மாமனார் சிவா ஆனந்த், போலீஸ் அதிகாரி கவுதம் சுந்தர்ராஜன், மன்சூரலிகான் என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் வந்து போகாமல், மனதில் நிற்கிறார்கள்.

பிரகாஷ்ராஜின் நிதானமும் நொடிக்கு நொடி மாறுகிற எக்ஸ்பிரஷன்களும் பிரமாதம். ஆனால் மனிதர் என்ன வேலை (அதான் என்ன இல்லீகல் வேலை) செய்கிறார் என்றே தெரியவில்லை. அரவிந்த்சாமியின் நடையும் சொடுக்கு போடுகிற ஸ்டைலும் அவரின் பாடிலாங்வேஜூடன் கூடிய டயலாக் டெலிவரியும் அபாரம். ராஜா மாதிரி இருந்தவர் ஒருகட்டத்தில், பயந்து, வெளிறி, ஷேர் ஆட்டோவிலும் பஸ்சிலுமாக தப்பித்து ஓடும்போது அவர் கொடுக்கிற பீதியும் நடுக்கமும் மிரட்டல்.ஜோதிகாவிடம் மருத்துவமனையில் இவர் பேசுகிற போது, உருக்கிவிடுகிறார்.

படம் முழுக்கவே சிம்பு, ஒரு ஸ்டைலீஷாகப் பண்ணியிருக்கிறார். விட்டேத்தியாய், அலட்டிக்கொள்ளாத அவரின் கேரக்டருக்கு ஏற்றது மாதிரி, பார்வையும் மாடுலேஷனும் பேச்சும் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டே போகிறது.

துபாயில் உள்ள அருண்விஜய், அப்பாவுக்குப் பிறகு அந்த இடம் தனக்குத்தான் என்று நினைப்பதும் அப்பாவின் கம்பீரமான அந்த சோபாவில் உட்காருவதும் அதை ஜோதிகா கண்டிப்பதும், வரதன் பாத்தா கோபமாயிருவாரு என்பதும் ‘அண்ணன்கிட்ட சொல்லிடாதீங்க’ என்று அருண்விஜய் சொல்வதும் செம. இதன் உச்சமாக, வெறிகொண்டு ஆர்ப்பரிப்புடன் அரவிந்த்சாமியின் வீட்டுக்குள் நுழைந்தவர், ஒரு தாவு தாவி, ரொம்ப ஸ்டைலாகவும் உற்சாகமாகவும் அதே சோபாவில் உட்காரும் இடத்தில், தியேட்டரில் அப்படியொரு அப்ளாஸ்.

ஜெயசுதாவுக்கும் ஜோதிகாவுக்கும் கொஞ்சமாக நடிக்க வாய்ப்பு. கொடுத்ததில் நிறைவு காட்டியிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வேலை இல்லை. அதிதி ராவின் அசத்தல் நடிப்பு ஈர்க்கிறது. டயானா எரப்பாவும் மனதில் நிற்கிறார்.

அரவிந்த்சாமியின் மாமனாராக வரும் சிவா ஆனந்த், நடிப்பு அற்புதம். மணிரத்னத்துடன் இணைந்து வசனமும் எழுதியிருக்கிறார். நடிப்பாலும் வசனத்தாலும் மனதில் பதிகிறார். தியாகராஜன் பரவாயில்லைதான். அவரின் வசன ஸ்டைலெல்லாம் பழசுதான்.

எல்லாரையும் விட, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரசூலாக வரும் விஜய்சேதுபதி, தன் அசால்ட் நடிப்பாலும் கவலையே படாத வசன டெலிவரியாலும் கொஞ்சம் மிடுக்கும் அலட்டலும் கொண்ட பாடிலாங்வேஜாலும் மொத்தப்படத்திலும் எல்லோர் வாங்கிய ஸ்கோரை, மொத்தமாக வாங்கிவிடுகிறார். போலீஸ் அதிகாரியிடம் பேசுவது, அரவிந்த்சாமியுடன் பேசுவது, சிம்புவிடம் பேசுவது என வெரைட்டி காட்டி, ஃபுல்மீல்ஸ் பரிமாறியிருக்கிறார் விஜய்சேதுபதி.

பிரகாஷ்ராஜ் என்ன பிஸ்னஸ் செய்கிறார், துபாயில் அருண்விஜய் என்ன பண்ணுகிறார், அரவிந்த்சாமியின் ஆட்களையெல்லாம் ரெண்டுநிமிஷ வசனத்தில் அருண்விஜய்யால் கன்வின்ஸ் செய்கிற காட்சி என்பதையெல்லாம் ஏற்கவே முடியவில்லை. 

காட்சிகளில் கைத்தட்டல்கள் கிடைத்தாலும் கதையிலும் கதாபாத்திர அமைப்பிலும் டீடெய்ல் இல்லாதது குறைதான். ஆனால் படம் பார்க்கும்போது நம்மை யோசிக்கவே விடவில்லை மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் என்று டைட்டில் ஆரம்பிக்கும் போது தொடங்குகிற கைத்தட்டல், படம் நெடுக டிராவலாகி, க்ளைமாக்ஸில் விண்ணைப் பிளக்குகிறது. இதுதான் செக்கச்சிவந்த வானத்தின் வெற்றிக்கான அடையாளம்.

மணிரத்னம் அத்தனைபேரையும் சேர்த்துக் கொண்டு செம உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு படம் முழுக்க கதையின் வண்ணத்தை நமக்குக் கடத்திக்கொண்டே இருக்கிறது. சென்னை, செர்பியா, துபாய், கார், கப்பல், அந்த செக்கச்சிவந்த பூமி என சுற்றிச்சுழன்று மிரட்டுகிறது கேமிரா. ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் கனகச்சிதம். பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் மிரட்டுகிறார். இன்னும் மிரட்டியிருக்கலாம்.

நல்லவேளை, பாடல்களை காட்சிகளுடனும் கதையுடனும் கோர்த்துவிட்டிருக்கிற யுக்தி நன்றாகவே பலன் தருகிறது. தனிப்பாடலாக இருந்திருந்தால், படத்தின் வேகத்துக்கு தொய்வு தந்திருக்கும்.

பொதுவாகவே, மணிரத்னம் பட டயலாக் என்பது எல்லோருக்கும் தெரிந்த தனி ஸ்டைல். இந்தப் படத்தின் வசனங்கள் அந்த ஸ்டைலில் இல்லை. அதேபோல், எல்லோருமே மணிரத்னத்தின் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பார்கள். இங்கே, அவரவரும் அவரவர் பாணியில் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் படத்தின் பல இடங்களில் மணிரத்னம் டச்... மனசை அள்ளுகிறது.

யோசித்துப் பார்த்தால், எல்லோருக்கும் பிடிக்கிற மணிரத்னத்தின் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படமாக வந்திருக்கிறது செக்கச்சிவந்த வானம். சொல்லப்போனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு... மணிரத்னத்துக்குக் கிடைத்த வெற்றி வானம் இந்த செக்கச்சிவந்த வானம்.

கடந்த 35 ஆண்டுகளாக  இந்தியசினிமாவில், தனியிடம் பிடித்து  அந்த இடத்தை, தக்கவைத்துக்கொண்டிருப்பவர் மணிரத்னம். செக்கச்சிவந்த வானம் மூலமாக, இன்னும் வலுவாகவும் அழுத்தமாகவும் இன்னொரு 35 ஆண்டுகளுக்குமாக உரமிட்டிருக்கிறார் மணிரத்னம்.

செக்கச்சிவந்த வானம்... எல்லோருக்குமானது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close