[X] Close

ஷோபாவின் பிறந்தநாள்; சில்க்கின் இறந்தநாள்! - இப்படியொரு துயர ஒற்றுமை


shoba-silk

ஷோபா - சில்க் ஸ்மிதா

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Sep, 2018 19:30 pm
  • அ+ அ-

தமிழ்த் திரையுலகில், எத்தனையோ பேர் நம்மை குதூகலப்படுத்தியிருக்கிறார்கள். நம் மனதில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அப்படியானவர்களின் பிரிவு, தாங்கிக்கொள்ள முடியாத துயரம். மனதில் தங்கிவிடுகிற சோகம். அப்படியான சோகத்தைத் தந்தவர்கள்... ஷோபாவும் சில்க் ஸ்மிதாவும்! 

இருவருமே முதல் படத்திலேயே நம் மனதில் உட்கார்ந்துகொண்டார்கள். ஒருவர் குடும்பப்பாங்கான  முகமும் கேரக்டரும் கொண்டு நம்மை ஈர்த்தார். இன்னொருவரோ, அதற்கு நேர்மாறாக வந்து மயக்கிப்போட்டார். ஷோபா கிழக்கு; சில்க் மேற்கு. ஆனாலும் என்ன... இருவரையுமே கொண்டாடியது தமிழ் சினிமாக் கூட்டம்.

மளமளவென ஏகப்பட்ட படங்களில் நடித்தார் ஷோபா. பாலசந்தரின் அறிமுகம் ஷோபா. நிழல் நிஜமாகிறதுதான் தமிழில் முதல் படம். வினுசக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம்தான் சில்க் ஸ்மிதாவின் முதல் படம். ஷோபாவின் பெயர் மகாலட்சுமி. சில்க்கின் இயற்பெயர் விஜயலட்சுமி. லட்சுமிகரமான பெயர்கள். தனலட்சுமிக்கும் குறைவில்லை. 


பெயர் கிடைத்தது. படங்கள் கிடைத்தன. புகழ் கிடைத்தது. எங்கு போனாலும் பார்த்ததும் ஓடி வந்து பேசினார்கள். கைகுலுக்கினார்கள். பரவசப்பட்டார்கள். ஷோபாவின் படம் போஸ்டரில் இருந்தால், அது மிகப் பிரமாதமான மனதை உலுக்கும் படமாக இருக்கும் என்றார்கள் ரசிகர்கள். 

அதேபோல சில்க்கின் படம் போஸ்டரில் இருந்தால், வியாபார ரீதியாக கலெக்‌ஷன் கட்டலாம் என்று கணக்குப் போட்டார்கள் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும். நிழல் நிஜமாகிறது படத்தில் கமலின் நடிப்பைத் தாண்டியும் ஷோபா பேசப்பட்டார். முள்ளும் மலரும் படத்தில் காளி ரஜினியையே ஓவர் டேக் செய்திருந்தார் வள்ளி ஷோபா. 

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லையில், ராதாவின் அண்ணி கேரக்டர், சில்க்கின் லைஃப் டைம் கேரக்டர். கோழிகூவுது, கொக்கரக்கோ என கங்கை அமரனின் படங்களில், அற்புதமான கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வந்து, மனதில் இடம் பிடித்திருப்பார் சில்க் ஸ்மிதா. 

என்னதான் சகலகலாவல்லவன் என்றாலும் சில்க்கின் ஆட்டம், அதில் அதகளம் பண்ணியது. தங்கமகனில் அடுக்குமல்லி பாடலும் அப்படித்தான். ஷோபாவை விட சில்க் விஷயத்தில் நிகழ்ந்த ஒரு ஆச்சரியம்... கவர்ச்சிக்கன்னி, காபரே டான்ஸ் நடிகை, கவர்ச்சி நடிகை என்று சொல்லப்பட்டாலும் ஆண்பெண் வித்தியாசமில்லாமல் எல்லோரும் சில்க்கைக் கொண்டாடினார்கள். தங்கள் வீட்டுப் பெண்ணாகவே நினைத்து மகிழ்ந்தார்கள்.

ஆனால் காலம் எடுத்த முடிவு... ஷோபாவும் சில்க் ஸ்மிதாவும் எடுத்த முடிவு... மிகப்பெரிய துயரம்.  வடியவே வடியாத சோகம். செப்டம்பர் 23ம் தேதி பிறந்தவர் ஷோபா. அந்தநாளில்தான் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை, உலகையே தூக்கியெறிந்து செல்லும் முடிவை, பணம், புகழ், அந்தஸ்து, கவுரவம், மிகப்பெரிய விசிறிக்கூட்டம்... என சகலத்தையும் ஒருநொடியில் தள்ளிவைத்துவிட்டு, மரணத்தைத் தழுவினார் சில்க் ஸ்மிதா. ஷோபாவுக்கு அது பிறந்தநாள். சில்க் ஸ்மிதாவின் இறந்தநாள். 

அந்த நாளில் பிறந்த ஷோபாவும் சில்க்கைப் போலவே முடிவெடுத்தவர். ஊர்வசி முதலான மிகப்பெரிய பட்டங்களெல்லாம் ஷோபாவைத் தேடி வந்தன. ஆனால் தடக்கென்று ஓர் நாளில், ஷோபா, மரணத்தைத் தேடிக்கொண்டார். 

அப்போது தூர்தர்ஷன் தவிர, சேனல்கள் இல்லை.  ஆனாலும் ஷோபாவின் மரணமும் சில்க்கின் மறைவும் தமிழகத்தையே உலுக்கிப் போட்டன. உறையச் செய்தன. 

ஷோபா பிறந்தநாள்... சில்க்கின் இறந்தநாள். ஆனால் அவர்களுக்கு மரணமே இல்லை. ரசிகர்களின் மனங்களில் உள்ள சோகத்துக்கும் மருந்தே இல்லை. 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close