[X] Close

'சீமராஜா'வுக்காக சிக்ஸ்பேக் வைத்தது ஏன்? எப்படி? - மனம் திறக்கும் சூரி


soori-opens-up-how-he-get-six-pack-for-seemaraja

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 25 Sep, 2018 19:38 pm
  • அ+ அ-

’சீமராஜா’ படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து ஏன், எப்படி என்று முதல் முறையாக தெரிவித்திருக்கிறார் சூரி.

’சீமராஜா’ பட வெளியீட்டுக்கு முந்தைய நாள், சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை வெளியிட்டார். இப்படம் ட்விட்டர் பயங்கர வைரலாக பரவியது. சிக்ஸ்பேக் வைத்தது ஏன், எப்படி என்று சூரியிடம் பேசியதிலிருந்து...

’சீமராஜா’ படத்துக்காக 6 பேக் வைக்கணும் என்றவுடன் என்ன நினைத்தீர்கள்?

முதல்ல டைரக்டர்  கதையைச் சொன்னாரு. ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இப்படத்துக்காக நீங்க முக்கியமான ஒரு விஷயம் பண்ணனும்னு சொன்னாரு. என்னன்னு கேட்டவுடனே நீங்க 6 பேக்ஸ் வைக்கணும்னு சொன்னார். ஷங்கர் அண்ணன் படத்துல விஜய் அண்ணன் ஒரு காஸ்ட்டியூம் போட்டு வருவாரே அதா அண்ணே என்றேன். நிஜத்துல வைக்கணும் சூரி என்று சீரியஸாக சொன்னார்.

சார்.. தம்பி சிவாக்கிட்ட போய் சொல்லுங்க ஒரு நியாயமிருக்கு. நான் ஒரு காமெடியன். நான் எதுக்கு வைக்கணும். அதெல்லாம் கஷ்டமான விஷயமாச்சே பிரதர்.. உடனே எல்லாம் வராதே என்றபடியே யோசிச்சேன். 6 பேக் அப்படினு கேட்டாலே நான் பயப்படுவேன். என்னைப் போய் வைக்கச் சொல்றீங்களே பிரதர் என்று கேட்டேன்.  எவ்வளவு நேரம் அந்த சீன் வரும் என்றவுடன் ஒரு நிமிஷம் தான் என்று மல்யுத்தப் போட்டியில் கிண்டல் பண்ணுவார்கள். ஹீரோ சிவா வந்து உங்க டி-சர்ட் கழட்டி 6 பேக்கை அறிமுகப்படுத்துற விஷயத்தைச் சொன்னார். ரொம்ப பிடிச்சுருச்சு. அதுமட்டுமல்லாமல், பொன்ராம் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு. ஓ.கே ப்ரதர் வைக்கிறேன் என்று சொன்னேன்.6 பேக்கை எப்படி கொண்டு வந்தீர்கள்? கடினமாக இருந்திருக்குமே...

முதல்ல 4 நாள் ஜிம்முக்குப் போனேன். அதுக்குப் பிறகு பொன்ராமுக்கு போன் அடிச்சேன். என்னோட 6 பேக்கு வேணுமா, நான் உயிரோடு இருக்கணுமானு கேட்டேன். என்னாச்சு சூரி என்று பதறிட்டார். என்னை ஜிம்ல மாஸ்டர் கொல்றான் ப்ரதர். கத்துக்கிட்ட மொத்த வித்தையும் என் மேல இறக்குறான், தயவுசெய்து காப்பாத்துங்க என்றேன். உங்களால் முடியும் சூரி பண்ணுங்க என்று போனை வைச்சுட்டார். அப்படியே 10 நாள், ஒரு மாசம், 2மாசம்னு போயிடுச்சு. ஆனால், ஒரு மாசத்துலயே எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. 21 நாள் மட்டும் தொடர்ச்சியா வாங்க, அதுக்கு அப்புறம் நீங்க முடிவெடுங்கனு சொன்னார் மாஸ்டர் சரவணன். அவர் சொன்ன மாதிரியே என் உடம்பைப் பார்த்து எனக்கே 6 பேக் வைச்சுத்தான் பார்ப்போமே என்ற ஆசை வந்துருச்சு. ஒரு கட்டத்துல ரொம்ப வெறிக் கொண்டு ஜிம்முக்கு போக ஆரம்பிச்சுட்டேன். ஆனால், வெவ்வேற பட ஷுட்டிங் இருந்ததால் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். சரியா 4 மாசத்துல 6 பேக் கொண்டு வந்துட்டேன்.

வீட்டில் என்ன சொன்னாங்க?

ஜிம்முக்கு தொடர்ச்சியாக போகும் போது, ஒரு கட்டத்துல உடம்பு குறைய ஆரம்பிச்சது. வெளியே பாக்குறவங்க எல்லாம் உன் உடம்புக்கு எதுவும் வியாதியா அப்படினு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. 6 பேக் வைக்குறனு சொல்லவும் முடியாது, இதனால் ஒரு கட்டத்துல என்னடா சொல்றதுனு பதில் சொல்ல முடியாம தவிச்சேன். ஜிம்முக்கு போய் உடம்பைக் குறைக்கேன்னு சொன்னா, நக்கல நீயெல்லாம் எதுக்கு போறனு சிரிப்பாங்க. படத்துக்காக போறேன்னு சொல்லவும் முடியாது. தொடர்ச்சியா ஷுட்டிங், அதனால தூக்கமில்ல என்று சொல்லி சமாளிச்சேன். ஒரு முறை எங்கம்மா பாத்துட்டு என்னடா நம்ம பையன் ரொம்ப ஒல்லியா ஆயிட்டான்னு கேட்க ஆரம்பிச்சாங்க. பொன்ராம் படத்துக்காக உடம்பைக் குறைச்சுட்டு இருக்கேன்னு சொன்னேன். என் பொண்டாட்டிக்கு எல்லாம் போன் பண்ணி, பையனுக்கு என்னாச்சுனு அழ ஆரம்பிச்சுட்டாங்க. இல்ல அத்தை.. டைரக்டர் சொல்லியிருக்காருனு 6 பேக் வைக்கிறாரு அப்படினு என் மனைவி சொல்லிட்டாங்க. அதென்ன எழவு பாக்கெட்டு, அது எதுக்கு இவ வைக்கிறான். அதுக்காக பிள்ள இப்படி போயிட்டு இருக்கானே என்று அம்மா வருத்தப்பட்டு இருக்காங்க. அதுக்குப் பிறகு சொந்த ஊருக்கு போறதே விட்டுட்டேன். ஏன்னா... எல்லாருமே ஊர்ல கேட்பாங்களே என்ன சொல்றது அப்படிங்கிற பயம் தான்.6 பேக்குக்காக யாரெல்லாம் உதவியாக இருந்தது?

மாஸ்டர் சரவணுக்குத் தான் முதல் நன்றி. ஊசி எல்லாம் போட்டு கொண்டு வருவாங்ளே அதை நானும் விரும்பல, என் மாஸ்டரும் விரும்பல. ஹெவி வொர்க்-அவுட், பக்கா டயட் இதுலயே கொண்டு வந்தேன். இந்த நேரத்துல என் மனைவி ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்கள விட ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு என்னோட உதவியாளர்கள் மணி மற்றும் சுரேஷ். காலைல 4 மணில இருந்து நைட் 12 மணி வரைக்கும் கூடவே இருப்பாங்க. 4 மணிக்கு ப்ளாக் காப்பி கொடுப்பாங்க. அப்போதிலிருந்து 1 மணி நேரத்துக்கு ஒருக்கா ப்ரெட், முட்டை வெள்ளை கரு,  ஓட்ஸ் இப்படி ஏதாவது ஒன்னுக் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. நானா இருந்திருந்தேன்னா கூட இப்படி இருந்திருப்பேன்னா அப்படினு கேட்டா மாட்டேன். வொர்க்-அவுட் பண்ணிட்டு வந்தேன்னா சாப்பிடாம தூங்கிடுவேன். சார்.. சாப்பிடுங்க என்று எழுப்பி ஏதாவது கொடுப்பாங்க. மணி, சுரேஷ் ரெண்டு பேருமே என்னை அப்படிப் பாத்துக்கிட்டாங்க.

உங்களுக்கு 6 பேக் வந்ததைப் பார்த்தவுடன் மனநிலை எப்படி இருந்தது?

ரொம்ப சாதிச்சவங்க மட்டும் வைச்சிருப்பாங்க. அதெல்லாம் பார்த்து வியந்துருக்கேன். முதல் முறையா கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு சட்டையத் தூக்கிவிட்டு பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன். லைட்டா வர்ற மாதிரி தெரியும். மாஸ்டர் சரவணன் உடனே பூஸ்ட் பண்ணுவார். அவ்வளவு தான் வந்துருச்சு.. சூப்பர் சூப்பர்.. இன்றைக்கு கொஞ்சம் ஹெவியா வொர்க்-அவுட் பண்ணுங்க. நாளைக்கு இன்னும் வரும்னு சொல்வார். நமக்கு 6 பேக்கானு அவ்வளவு சந்தோஷம். 6 பேக் வந்தவுடனே நடை, உடையெல்லாம் மாறிடும். ரொம்ப தைரியமா  இருக்கும். ஆனால், பாக்குறவங்களுக்கு ரொம்ப பாதிக்கப்பட்டவன் போல தெரியும். உள்ளுக்குள்ள நாலு பேரை விட்டு சாத்தணும்னு தோணும். கண்ணாடியில் முகத்தை மட்டும் பாத்துட்டு இருந்தவன், குளிச்சுட்டு வந்தவுடனே 6 பேக்கைப் பார்க்க ஆரம்பிச்சேன். அப்படி பார்த்து பார்த்து என் உடம்பை நானே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். 

கிராமத்து ஆள் நீங்க. பழைய சோறு சாப்பிடாமல் எப்படி இருந்தீங்க...

இடையே மாஸ்டருக்கு போன் பண்ணி, கஞ்சி குடிக்க ஆசையா இருக்கு என்று கேட்பேன். கஞ்சி குடிச்சா.. இன்றைக்கு 3 மணி நேரம் வொர்க்-அவுட் பண்ணனும்னு பயமுறுத்துவார். அப்படியிருந்தும், 2 வாரத்துக்கு ஒரு முறை கஞ்சி குடிக்க சொல்லிடுவார். கஞ்சி குடிக்கிற அன்றைக்கு நைட் சாப்பிட மாட்டேன்.'சீமராஜா'வில் ஒரே ஒரு காட்சிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும்னு நினைச்சீங்களா?

கண்டிப்பா இல்ல. தமிழ் சினிமாவுல முதன் முறையாக ஒரு காமெடியன்  6 பேக் வைச்சுட்டு வர்ற சீனுக்கு அவ்வளவு விசில் அடிக்குறாங்க. இந்திய சினிமாவுல தெலுங்கு ஆக்டர் சுனிலுக்கு அப்புறம் நான் தான் காமெடியன்ல சிக்ஸ் பேக் வைச்சுருக்கேன்னு நினைக்கேன். காமெடியன் பன்ச் வசனம் பேசாம, தியேட்டரே கைதட்டும் போது கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. 6 பேக்காக பட்ட கஷ்டமெல்லாம் என் கண் முன்னாடி வந்துட்டு போச்சு. சூர்யா சார், விஷால் சார், ஆர்யா சார், விஷ்ணு எல்லாரும் போன் பண்ணி பாராட்டினாங்க. 6 பேக்னு நெட்ல தேடினீங்கன்னா ஆமிர்கான் சார், சூர்யா அண்ணா, தனுஷ் சார் இவங்களோட போட்டோ கூட என் போட்டோவும் வருது. இது காமெடியனுக்கு கிடைச்ச எவ்வளவு பெரிய கொடுப்பனை.

ஒரே ஒரு சீனோட முடிஞ்சிருச்சே.. இன்னும் அதிகரித்திருக்கலாம் என்று பேசுகிறார்கள். உங்களது எண்ணம் என்ன?

உண்மைத் தான். இன்னுமொரு 4 ஷாட் வைச்சுருந்தா நல்லாயிருந்துக்கும். ஆரம்பித்துலயே 40 விநாடி தான் டைரக்ட்ரு சொன்னதுனால எனக்கு பெரிசா தெரியல. என்கிட்ட சொல்லாமல் பண்ணியிருந்தாங்கன்னா தோணியிருக்கும். அறிமுகத்துக்கே அவ்வளவு க்ளாப்ஸ் பார்த்ததுனால சந்தோஷமாயிடுச்சு. ஏன் தோற்குற மாதிரி, ஜெயிக்கிற மாதிரியெல்லாம் வைச்சுருக்காலாமே என்று மக்கள் சொல்றாங்க. இயக்குநர் நம்மள காமெடியனாவே பார்த்துட்டு போயிடுணும் என்கிற எண்ணத்துல தான் சீனையே சொன்னார். அனைத்துமே இயக்குநருடைய ஐடியா.

இவ்வாறு சூரி தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close