[X] Close

சண்டக்கோழியால் கிடைத்த நல்ல நண்பர் விஷால்! - கீர்த்தி சுரேஷ்


keerthisuresh-vishal

நடிகை கீர்த்தி சுரேஷ்

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Sep, 2018 11:48 am
  • அ+ அ-

சண்டக்கோழி 2 படத்தின் மூலமாக, விஷால் எனும் நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார் என கீர்த்தி சுரேஷ் பேசினார்.

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடித்த சண்டக்கோழி 13 வருடங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது அதன் இரண்டாம்பாகம் வெளியாகிறது. முதல் பாகத்தில், விஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண், லால் முதலானோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம்பாகம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.

சண்டக்கோழி 2ல், விஷாலுடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி சுரேஷ். ராஜ்கிரண் முதலானோர் நடித்து வருகிறார்கள். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு நடிகை கீர்த்திசுரேஷ் பேசியதாவது:

முதலில், இந்தப் படத்தில் என்னை நடிக்க அழைத்த இயக்குநர் லிங்குசாமிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் முதலில் நடிப்பதற்கு பயந்தேன் என்பதுதான் உண்மை.

சண்டக்கோழி 1ல் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்திருப்பார். மிகச்சிறந்த நடிகை அவர். அந்தப் படத்தில் பிரமாதமான நடிப்பைத் தந்திருப்பார். இப்போது சண்டக்கோழி 2ல் அவர் நடித்த ஹீரோயின் கேரக்டரை நாம் சிறப்பாகச் செய்யவேண்டுமே என்று பயமும் டென்ஷனும் வந்தது எனக்கு.

அதேசமயம், நடிகையர் திலகம் படத்தில் நடித்ததால், மனதில் ஒரு பாரம், ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருந்தது. அந்த மன பாரத்தில் இருந்து அழுத்தத்தில் இருந்தும் என்னை மீட்டெடுத்தது சண்டக்கோழி 2 பட ஷூட்டிங்தான். நடிகையர் திலகம் கேரக்டரில் இருந்து நான் மீண்டு வந்ததற்கு சண்டக்கோழி 2 தான் காரணம். என்னை பழையபடி சகஜநிலைக்குக் கொண்டு வந்த படம் இது. கொஞ்சம் ஜாலியாக என்னை இருக்கவைத்தது. நடிகையர் திலகத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பதை உணர்கிறேன்.

இன்னொரு விஷயம்... இந்தப் படத்தின் மூலமாக விஷால், எனக்கு நல்ல நண்பராகிவிட்டார். மிக நல்ல மனிதர் அவர். நல்ல மனிதர், நல்ல நண்பர். இப்படியொரு குழுவினருடன் சண்டக்கோழி 2 படத்தில் நடித்தது, எனக்கு இனிய அனுபவம்.

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் பேசினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close