[X] Close

’சர்கார்’ முருகதாஸ்க்கு ஹேப்பி பர்த் டே!


armurugadoss-birthhday

தீனா படத்தின் போது... அஜித்துடன் முருகதாஸ்

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Sep, 2018 10:11 am
  • அ+ அ-

ஸ்ரீதருக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில், இயக்குநரின் படம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரு படம் ரிலீசானால், ‘ஆமா யாரு டைரக்டரு’ என்று கேட்டுவிட்டுச் செல்லும் காலம் வந்தது. அப்படி இயக்குநர்களின் படம் என்று முத்திரை தாங்கி, டைட்டிலில், இயக்குநரின் பெயர் வரும்போது, மிகப்பெரிய கரவொலியை எழுப்பி வரவேற்றார்கள் ரசிகர்கள். அப்படி பெயருக்குக் கைத்தட்டல் வாங்குகிற இயக்குநர் என்று பேரெடுத்தவர்களின் பட்டியலில், இவரின் பெயரும் உண்டு. அவர்... ஏ.ஆர்.முருகதாஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்குகிறார் எனும் அறிவிப்பு வந்ததுமே, அனைத்து ஏரியாக்களுமே விற்றுவிடும். படத்தை வாங்குவதற்கு, பெரிய போட்டியே நடக்கும். அதுதான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பெஷல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

கலைமணியிடமும் பிறகு எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி மற்றும் குஷி படங்களிலும் உதவி இயக்குநராக இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போது அஜித்தின் பழக்கமும் நெருக்கமும் கிடைத்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் முருகதாஸின் சுறுசுறுப்பில் ஈர்க்கப்பட்ட அஜித், முதல் படம் இயக்குவதற்கு வாய்ப்பு வழங்கினார்.

அதுமட்டுமா? இயக்குநர் கே.பாக்யராஜின் நண்பர் பழனிச்சாமியின் மகன் கார்த்திகேயன், அஜித்தின் நண்பர். எனவே தன் நண்பரையே தயாரிப்பாளராக்கினார். நண்பருக்குப் படம் செய்து கொடுத்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அந்த முதல் படம்... தீனா. இந்தப் படத்தின் விமர்சனத்தில், புதுமுக இயக்குநரான முருகதாஸ், ஆக்‌ஷன் படம்தான் எடுத்திருக்கிறார். ஆனால் காதல் போர்ஷன் வெகு இயல்பாக வருகிறது என்று பத்திரிகைகள் விமர்சனத்தில் குறிப்பிட்டன.

தீனா படத்தின் இன்னொரு குறிப்பு... இன்றைக்கு அஜித்தை தல என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். இந்த தல... என்று முதன்முதலில் சொன்ன படம் தீனா.

அடுத்து, விஜயகாந்தை வைத்து ரமணா எடுத்து, அது மிகப்பெரிய பரபரப்புடன் கூடிய வெற்றியைப் பெற்றது. இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த நிமிடத்தில், யாரேனும், எங்கேனும், ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில் நின்றுகொண்டு, ‘ரமணா படம் மாதிரி டாக்டருங்க பண்றா மாதிரியே இருக்குப்பா’ என்று புலம்பிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு பொளேரென்று முகத்தில் அறைந்து அதைக் காட்சியாக்கியிருப்பார்.

சூர்யாவை வைத்து கஜினி பண்ணினார். ஆக்‌ஷன், த்ரில்லர் படமான இதிலும் கூட, சூர்யா அஸின் காதல் போர்ஷன் கவிதை மாதிரி சொல்லியிருப்பார்.

அடுத்தடுத்து, ஏறுமுகம்தான் முருகதாஸுக்கு. ஹிந்திப்பக்கம் சென்று வெற்றிக்கொடி நாட்டினார். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு படம் செய்து, மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் கிடைக்கக் காரணமாக இருந்தார். கத்தி, துப்பாக்கி என விஜய்க்கு முருகதாஸ் கொடுத்ததெல்லாம் ராக்கெட் வெற்றிகள். இப்போது சர்கார் படத்தின் மூலமாக, ஹாட்ரிக் அடிக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ்.

கொஞ்சம் காதல், சமூகத்தின் அவலம், அந்த அவலத்தின் மீது ஏற்படுகிற கோபம், அதற்கான தீர்வைத்தேடும் படலம்... சமூகம் சார்ந்த, அரசியல் கலப்புடன், அதேசமயம் தைரியத்துடனும் துணிச்சலுடனும் கதை சொல்லும் முருகதாஸ்.. ஏழாம் அறிவில் இன்னொரு இடம் தேடிப் பயணித்திருப்பார். இதன் பிறகுதான், போதிதருமன் என்ற சொல்லே தமிழகத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்டது.

மன்னிப்பு... தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை என்பதை, விஜயகாந்த் மூலமாகச் சொல்லியிருந்தார் முருகதாஸ். மிகக்குறைவான படங்கள்தான் பண்ணியிருக்கிறார். ஒரு படத்தை எடுப்பதற்கும் இன்னொரு படத்தை தொடங்குவதற்குமான காலங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வார். ஆனால் அவரின் படங்கள், காலம் கடந்தும் நிற்பதற்கும் பேசப்படுவதற்கும் அதுவும் முக்கியக்காரணமாக அமைந்திருக்கும்.

இந்த நடிகர் அடுத்து என்ன படம் பண்ணுவார் என்று பரபரப்புடன் விவாதித்த காலமெல்லாம் தாண்டி, இந்த டைரக்டர் அடுத்து என்ன படம் பண்ணப்போறார் என்று ரசிகர்களை நகம் கடித்து, காக்கவைத்துக்க்கொண்டிருக்கிற மிகக் குறைவான இயக்குநர்களில் முருகதாஸும் ஒருவர்.

இன்னொரு ஸ்பெஷல். பொதுவாகவே பிறந்த ஊரை யாருமே மறக்கமாட்டார்கள். முருகதாஸ் தன் படங்களில், அவரின் சொந்த ஊரின் பெயரை எங்கேயாவது நுழைத்திருப்பார். அவரின் ஊரான கள்ளக்குறிச்சியை வசனத்தில் செருகி, ஊருக்கு கிரிடம் சூட்டியிருக்கிற முருகதாஸ்க்கு இன்று பிறந்தநாள் (25.9.18).

வாழ்த்துகள் முருகதாஸ்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close