[X] Close

முதல் பார்வை: போதை ஏறி புத்தி மாறி


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 11:15 am
  • அ+ அ-

-உதிரன்

நாளை திருமணம் நடக்க இருக்கும் நிலையில், இன்று நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டியைக் கொண்டாடும் இளைஞன் போதையில் தடுமாறி ஆபத்தில் சிக்கினால் அதுவே 'போதை ஏறி புத்தி மாறி'.

தன் உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார் தீரஜ். நலங்கு முடிந்து, கையில் காப்பு கட்டிய கையுடன் தன் பேராசிரியருக்கு திருமணப் பத்திரிகையைக் கொடுக்க வெளியே செல்கிறார். நண்பன் இறந்துவிட்டதாக இன்னொரு நண்பன் போனில் தகவல் சொல்ல, அலறியடித்துக் கொண்டு நண்பன் வீட்டுக்கு வருகிறார். ஆனால், அதெல்லாம் பொய் என்று தெரிந்து கடுப்பாகிறார். பேச்சிலர் பார்ட்டி இனிதே ஆரம்பமாகிறது. மது அருந்தும் பழக்கமே இல்லாத தீரஜ் திடீரென்று போதை மருந்தைப் பயன்படுத்துவது போல பாவ்லா காட்ட நினைக்க, உண்மையிலேயே போதை மருந்து அவர் மூக்கு வழியாக உடலுக்குள் புகுந்து ஆட்டுவிக்கிறது.

நண்பர்களுக்கிடையே நிகழும் சண்டை, போதை மருந்து கும்பலுக்கு உதவும் கமிஷனர், பத்திரிகையாளர்களுக்கு போதை மருந்து கும்பலால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஏன ஏகப்பட்ட பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க போதையின் பாதையில் சென்ற தீரஜ் வாழ்வில் நடந்த மாற்றங்களையும் திருப்பங்களையும் விவரிக்கிறது திரைக்கதை.

போதையின் ஆபத்தை அதனால் ஏற்படும் பிரச்சினைகளை வீரியம் குறையாமல் சொல்லியிருக்கும் விதத்தில் இயக்குநர் சந்துரு கவனம் ஈர்க்கிறார். படம் முழுக்கப் பதற்றத்தை ஏற்படுத்தி அதனூடே ரசிகர்களையும் பயணிக்க வைத்ததில் வெற்றி பெற்றுள்ளார்.

b2.jfif 

கதாபாத்திரங்கள் தேர்வில் மட்டும் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தீரஜ் சிரிப்போ, நடிப்போ பெரிதாகக் கை கொடுக்கவில்லை. துஷாரா அளவாக நடித்துள்ளார். ஓங்குதாங்கான உயரத்தில் எதிர்நாயகனுக்கான கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்க்கிறார் அஜய். அவரை கமிஷ்னராகத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மைம் கோபி, ராதாரவி, சார்லி, மீரா மிதுன் ஆகியோர் உறுதுணைக் கதாபாத்திரங்களில் மிளிர்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெமும், இசையமைப்பாளர் கே.பி.யும் படத்தின் மிகப்பெரிய தூண்கள். இரண்டு வீடுகளில் நடக்கும் பெரும்பாலான காட்சிகளை தனித்துவப்படுத்தும் ஃபிரேம்களில் பாலசுப்பிரமணியெம் மேஜிக் நிகழ்த்தியுள்ளார். வித்தியாசமான பின்னணி இசையில் கே.பி. முத்திரை பதிக்கிறார். சாபு ஜோசப் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். சில காட்சிகள் இழுவையாய் நீள்கின்றன.

''நீ பார்க்குற மர்மத்தைப் புரிஞ்சுக்கணும்னு நினைச்சா அது இன்னும் குழப்பத்தைதான் ஏற்படுத்தும்'', ''கோபப்படுறதுக்கு ஒரு இடம் இருக்கு, எதிரிகிட்ட பார்த்துதான் கோபப்படணும், இல்லைன்னா படுவ படாத பாடுபடுவ'' போன்ற கதிர் நடராசனின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

போதையின் தீமையைப் படம் முழுக்கச் சொன்ன இயக்குநரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. அந்த டென்ஷனை சரியாகக் கடத்தியுள்ளார். ஆனால், தீரஜ் போதையிலிருந்து மீண்டு வந்ததை முதலிலேயே சொல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பரபரப்பு கூடியிருக்கும். மீரா மிதுனின் நிலை என்ன என்பது குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை.

வாழ்க்கையின் ஏதோ ஒரு சூழ்நிலையில் விளையாட்டுத்தனமாக செய்யும் செயல் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும் என்பதை அழுத்தமாகச் சொன்ன விதத்தில் 'போதை ஏறி புத்தி மாறி' படத்தை தாராளமாக வரவேற்கலாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close