[X] Close

அந்த கேள்வியைத் தவிர்க்க நானும் அண்ணனும் தப்பித்து ஓடுவோம்: கார்த்தி ருசிகரம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 17:21 pm
  • அ+ அ-

அந்தக் கேள்வியைத் தவிர்க்க நானும் அண்ணனும் தப்பித்து ஓடுவோம் என்று அகரம் அறக்கட்டளையின் பரிசளிப்பு விழாவில் கார்த்தி தெரிவித்துள்ளார்.

அகரம் அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் கார்த்தி, ''சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 40-வது ஆண்டு பரிசளிப்பு விழா இது. 1979-ல் அப்பாவின் 100-வது படத்தின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை இது. அவரின் 100 தயாரிப்பாளர்களுக்கும் கேடயம் வழங்கி, எம்ஜிஆர் இதைத் தொடங்கி வைத்தார். 100-வது படத்தின் சம்பளத்தை மொத்தமாக இருப்பு வைத்து அதில் கிடைக்கிற வட்டியை வைத்து பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

சினிமா உலகமும் மக்களும் அப்பாவின் (சிவகுமார்) பரிசளிப்பு விழாவை ஞாபகம் வைத்திருப்பார்கள். எந்தச் சின்ன ஊருக்குச் சென்றாலும்கூட அப்போதே சிவகுமார் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பரிசளிப்பாரே என்பார்கள். சின்னச் சின்ன ஊர்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் வருவார்கள்.

முதல் 25 ஆண்டுகளுக்கு பரிசளிப்பு விழா, எங்கள் வீட்டிலேயே குடும்ப நிகழ்ச்சியாக நடந்தது. அப்போது விழாவுக்கு வருபவர்கள் எல்லோரும், ’அடுத்த ஆண்டு நீங்க பரிசு வாங்கிவிடுவீர்கள் அல்லவா?’ என்று என்னிடம் கேட்பார்கள். அந்தக் கேள்வியைத் தவிர்க்கவே நானும் அண்ணனும் தப்பித்து ஓடுவோம். ஆனாலும் 10-ம் வகுப்பில் மாட்டிக் கொண்டேன்.

25-வது ஆண்டில், பரிசுத்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. பிறகு அகரம் ஃபவுண்டேஷன் இதைத் தத்தெடுத்துக் கொண்டது.

அதற்குப் பிறகு பாட ரீதியாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். பார்வையற்றோருடன், அகதிகளின் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போது 5.5 லட்சம் ரூபாயாக பரிசுத்தொகை உயர்ந்திருக்கிறது. தொகை என்பதைவிட கல்விக்கான ஊக்கம் என்பதாக இதைப் பார்க்கிறேன்.

கல்வி வியாபாரமாகிவிட்ட இந்த சூழலிலும், நல்லாசிரியர்களாலும் நல்ல மாணவர்கள், பெற்றோர்களாலுமே இந்த சமூகம் அமைதியான சமுதாயமாக இருக்கிறது. கல்வியை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்த நிகழ்ச்சி'' என்றார் கார்த்தி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close