[X] Close

யூ-டியூப் விமர்சனங்களை எதிர்க்கிறதா தயாரிப்பாளர் சங்கம்? - ஒரு அலசல்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 16:37 pm
  • அ+ அ-

கடந்த திங்கட்கிழமை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியான அறிக்கை ஒன்று பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு கோபத்தையும் வரவழைத்தது.

இந்த அறிக்கையில் மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்களுக்கு பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக திரையிடல்கள் மற்றும் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் ஏற்படும் செலவு பற்றி முதல் இரண்டு விஷயங்கள்.

மூன்றாவதாக சொல்லப்பட்ட விஷயம், "படம் விமர்சனம் என்ற பெயரில் படத்தை, நடிகர்களை, இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை தாக்கி, எல்லை மீறுபவர்கள் சட்டரீதியான நடவடிக்கையை சந்திப்பார்கள். சினிமா சம்பந்தமான எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட மாட்டார்கள்" என்பதே அது.

சினிமா விமர்சனங்களுக்கு எதிராக இப்படியொரு அறிக்கை வர காரணம் என்ன? துறையில் மூத்த மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு தெளிவுபடுத்துகிறார். "இது அச்சு ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளருக்கு எதிரானதல்ல. இன்று யார் யாரோ திரை விமர்சனம் எழுதுகிறார்கள். அவர்கள் கருத்தினால் மற்றவர்களை புண்படுத்துகிறார்கள். திரைப்படம் எடுப்பதென்றால் என்னவென்றே தெரியவில்லை போன்ற கருத்துகளை சொல்கிறார்கள். சினிமா விமர்சனம் தானே அது. அதில் தனி நபர்களை அவமதிக்கக் கூடாது" என்றார்.

ஒப்புக்கொள்ள சிறிது நேரம் பிடித்தாலும், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு யூடியூப் விமர்சகர்களால் தான் பிரச்சினை என்கிறார் பாபு. அச்சில் வரும் விமர்சனங்கள் காட்டமாக இருப்பதில்லை. யூடியூபில் விமர்சனம் செய்பவர்கள் அதே போல விமர்சனம் சொல்வதில்லை என்பது பாபுவின் கருத்தாக இருக்கிறது.

padam.jpg

இது தயாரிப்பாளர்களின் பிரச்சினை மட்டுமே. ஏனென்றால் யூடியூப் விமர்சகர்களின் வீச்சு அதிகம். அதை புறக்கணிக்க முடியாது. உதாரணத்துக்கு, சர்சைக்குரிய யூடியூப் பிரபலம் ப்ளூசட்டை மாறன், தமிழ் டாக்கீஸ் என்ற சேனலில் விமர்சனம் சொல்கிறார். இந்த வீடியோவை க்ளிக் செய்து பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு படம் குறித்த அவரது அபிப்ராயத்தை கேட்கத்தான் க்ளிக் செய்கிறார்கள். நாளிதழ் வாசகர்களை அப்படிச் சொல்ல முடியாது. மாறனின் சேனல் 10 லட்சம் சந்தாதார்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது, இந்த அறிக்கை, மாறனுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதுகுறித்து மாறனை தொடர்புகொள்ள முடியவில்லை.

பெயர் வெளியிட விரும்பாத யூடியூப் விமர்சகர் ஒருவரிடம் பேசும்போது, இந்தப் பிரச்சினைக்கு சரியான உதாரணத்தைக் கொடுக்கிறார். "சந்தையிலிருந்து ஒரு பொருளை வாங்கும்போது அது எனக்குப் பிடித்திருந்தால் அது நன்றாக இருக்கிறது என்பேன். இல்லையென்றால் நன்றாக இல்லையென்று சொல்வேன். அதே போல அந்த குறிப்பிட்ட படத்தின் வாடிக்கையாளர் நான். பிரச்சினை மிகவும் எளிதானது. இணையதள ஊடகங்களின் வளர்ச்சி தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை.

prabhu.jpg

பிரச்சினைக்கு என்னை பொறுப்பாக்க வேண்டும் என்று நினைத்தால் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்ன சொல்கிறேனோ அதற்கு மட்டும் தான் பொறுப்பாக முடியும், மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு நான் பொறுப்பாக முடியாது. எனது சந்தாதாரர்களுக்கும் நான் உண்மையாக நடந்து கொள்ளவேண்டும் இல்லையா. இது தொழில் தர்மம் சம்பந்தப்பட்டதும் கூட" என்கிறார் அந்த விமர்சகர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், "விமர்சனம் எழுதுவதென்பது வியாபாரமாகிவிட்டது. அதை நியாயமாக செய்ய வேண்டும். எனது பொருளை பயன்படுத்தி, அதை விமர்சித்து அதன் மூலம் சம்பாதிப்பதை ஒரு தயாரிப்பாளராக நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கை என்பது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானதா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளட்டும்" என்கிறார்

இன்னொரு பிரபல யூடியூப் விமர்சகர் பிரஷாந்த் ரங்கசுவாமி பேசுகையில், "சட்ட ரீதியான நடவடிக்கை அதிகபட்சம் என நினைக்கிறேன். ஒரு படம் பொதுமக்களுக்கான பொருள். தனியார் சொத்தல்ல. ஒரு படத்தைப் பார்க்க எனது பணத்தைக் கொடுத்து டிக்கெட் வாங்குகிறேன். அவர்களின் இந்த அறிக்கைக்கு காரணம் புரியவில்லை. ஒரு பக்கம் யூடியூப் விமர்சனங்களுக்கு எதிராக ஒரு தரப்பு தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். இன்னொரு பக்கம் அந்த விமர்சனங்களில் விளம்பரம் தரும் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். இந்தப் பிரச்சினை குழப்பமாக இருக்கிறது. அவர்கள் விளம்பரம் தருகிறார்கள் என்றால் அந்த தயாரிப்பாளர்கள், அந்த வகையான விமர்சனத்தை ஒப்புக்கொள்கிறார்கள் என்று தானே அர்த்தம்" என்கிறார்.

siva.jpg

ஆனால் தயாரிப்பாளர் டி சிவா இன்னொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். "எங்களை மிரட்டுபவர்களும் உள்ளனர். அவர்களுக்குப் பணம் தரவில்லை என்றால் எங்கள் படத்தை மோசமாக விமர்சிப்போம் என்பார்கள். இந்த பணம் விளம்பரங்கள் என்ற போர்வையில் அவர்களுக்குத் தர வேண்டும். இந்த யூடியூப் விமர்சகர்களை கண்டுகொள்ள வேண்டாம், அவர்களால் துறைக்கு எந்த ஆதாயமும் இல்லை என்று சக தயாரிப்பாளர்களிடம் சொல்லி வருகிறேன்.

படத்தை விமர்சிப்பதைப் போல ஒரு சோப்பு, ஷாம்பூவை விமர்சனம் செய்யச் சொல்லுங்கள். அந்த நிறுவனத்துக்கு நீங்கள் களங்கம் விளைவிப்பதைப் பார்த்துக் கொண்டு அவர்கள் அமைதியாக இருப்பார்களா?. விமர்சனம் செய்யும்போது அடிப்படை தர்மம் வேண்டும். அவன் இவன் போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் இந்த அறிக்கை பற்றி பேசும்போது சிரிக்கிறார். "ஒருவர் எப்படிப் பேசுகிறார் என்பது அந்தந்த நபரின் தனிப்பட்ட கண்ணியத்தைப் பொருத்தது. இதையெல்லாம் நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏதாவது பேசினால் மட்டுமே அதை வைத்து வழக்கு தொடுக்க முடியும். அத்தகைய விஷயத்தில் சொல்லப்பட்ட விஷயம் உண்மையாக மட்டுமே இருக்க வேண்டும்" என்று விளக்குகிறார்.

"ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு படத்துக்கு எந்த மாதிரியான விமர்சனம் கிடைத்தாலும், முதல் மூன்று நாட்கள் அது திரையரங்கில் ஓடுவதை வைத்துதான் அதன் தலையெழுத்து முடிவாகும்" என்கிறார் டைமண்ட் பாபு.

- பிரதீப் குமார், தி இந்து ஆங்கிலம் | தமிழில்: கா.கி

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close