[X] Close

கே.பாலசந்தரின் ‘ஃபடாஃபட்’ வசனங்கள்


  • வி.ராம்ஜி
  • Posted: 10 Jul, 2019 15:08 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

பக்கம்பக்கமான வசனங்களுக்காகவே படங்கள் ஓடிய காலம் உண்டு. நாதா, தேவி வசனங்களை விட்டொழித்து, பேச்சுவழக்கில், வசனம் பேசிய காலமும்  அடுத்து வந்தது. பிறகுதான், வசனங்களில் பளீர், சுளீர்,ஜிலீர் என நச் என்று எழுதி, பஞ்ச் வைக்கப்பட்டது. சினிமா எனும் காட்சி ஊடகத்திற்குள், வசனங்களைக் கவிதையாக்கி, புதுக்கவிதையாக்கி, ஹைக்கூவாக்கி என ஜாலங்கள் செய்த கவிதாலயாக்காரர் கே.பாலசந்தர். ஏராளப் படைப்புகளையும் கலைஞர்களையும் சிருஷ்டித்த மகா பிரம்மா.

’மூன்று முடிச்சு’ படத்தில் ஸ்ரீதேவியை அடைய ரஜினி ஆசைப்படுவார். அதற்காக நீச்சல் தெரியாத கமலை, ஏரியில் காப்பாற்றாமலேயே விட்டுவிடுவார். அதன் பிறகு, ஒருகட்டத்தில், ரஜினியின் தந்தையான கல்கத்தா விஸ்வநாதனை திருமணம் செய்துகொள்வார் ஸ்ரீதேவி.

அப்போது ரஜினி, ‘நீ என்னை பழி வாங்கணும்னு நெனைச்சா, அது உன்னால முடியாது’ என்பார்.

அதற்கு ஸ்ரீதேவி, ‘நான் உன்னை வாழவைக்க விரும்புறேன். அதுவும் நல்லவனா...’ என்று சொல்லுவார். உடனே, ரஜினி ‘டீகே’ என்று இந்தியில் சொல்வார். ஸ்ரீதேவியும் ‘டீகே’ என்பார். இருவரும் மாறிமாறி ‘டீகே’ சொல்லிக்கொள்வார்கள்.

அன்றைய ட்விட்டர் பஞ்ச்... டிரெண்டிங் ரைட்டர்... டைரக்டர் கே.பாலசந்தர்.

’அவள் ஒரு தொடர்கதை’ படத்தில், காதலனான விஜயகுமாரின் அம்மாவை சந்திப்பார் சுஜாதா. பேசிவிட்டு கிளம்பும் போது, ‘என்னப்பா இது. கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம ஏகவசனத்துல பேசறா. கல்யாணத்துக்கு முன்னாடி இவ்ளோ கர்வமா இருக்காளே’ என்பார் விஜயகுமாரின் அம்மா. அதற்கு சுஜாதா சொல்லுவார்... ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது.’

 புதுமை, புரட்சி என்பதில் நவீனங்களையும் கூர் தீட்டப்பட்ட பேனா ஆயுதங்களையும் கொண்டு, இவர் செய்த ஜாலங்களும் எழுதிய வசனங்களும் வங்காளவிரிகுடா அளவு.

 ’அரங்கேற்றம்’ திரைப்படம். லலிதா எனும் கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு சமூகத்தால் தள்ளப்படுவார் பிரமிளா. தங்கைக்குத் திருமணம். ஊருக்கு வந்தால், பார்வையில் படாமல், டிமிக்கி கொடுப்பார் அம்மா எம்.என்.ராஜம். பார்த்தால்... கர்ப்பமாக இருப்பார் அம்மா. பொண்ணுக்குக் கல்யாணம். அம்மாவோ கர்ப்பம்.

‘ஓஹோ... இதனாலதான் ஓடியோடி ஒளிஞ்சியா. இதையும் பெத்து எங்கிட்டக் கொடும்மா. அதையும் வளர்க்கிறேன்’ என்பார் பிரமிளா.

பிறகு அவரே தொடருவார்... ‘’ஒரேயொரு கேள்வி கேட்டுக்கறேம்மா. இத்தனை வருஷமா, இந்த வாசல்ல தெளிச்சு, கூட்டி, பெருக்கி, மெழுகி, துடைச்சிட்டிருக்கியே. இதை ஒரு தடவை கூட நீ பாக்கவே இல்லியாம்மா’என்பார். எதிரில் உள்ள சுவரில், குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம்.

தேசப்பற்றைச் சொல்லுவார். நமக்குள் நாட்டுப்பாசமும் கே.பி.மீதான மரியாதையும் உயர்ந்துகொண்டே போகும்.

’அபூர்வ ராகங்கள்’ திரைப்படம். படத்தில், ‘ஜனகனமண’ காட்சி. கமல் உட்பட எல்லோரும் அசையாமல் நின்று கொண்டிருக்க, கமலுக்கு அருகில் இருப்பவர், பாப்கார்னோ எதையோ கொறித்துக்கொண்டிருப்பார். அதுமட்டுமல்லாமல், பாடல் முடிவதற்கு முன்பே, கிளம்ப யத்தனிப்பார். அவரைப் பிடித்து நிறுத்துவார் கமல். பாடல் முடியும். அவனின் சட்டையைக் கோர்த்து, ‘பாடினது ஜனகனமண. ஜாலிலோ ஜிம்கானா இல்ல’ என்று வெளுத்தெடுப்பார். தியேட்டரில் விசில் பறக்கும்.

சமூக அவலத்தை சாட்டையால் விளாசித் தள்ளுவார்.  அவை, நம் முகத்தில் அறைந்து சொல்லிக்கொடுக்கும்.

‘வறுமையின் நிறம் சிகப்பு’ திரைப்படம். டெல்லியில் வேலை தேடி அலையும் கமலுக்கு ஒரு வேலை கிடைக்கும். ஆனால் தமிழ் தெரியக்கூடாது என்பது கண்டீஷன். தெரியாது என்று சொல்லிவிடுவார்.

கார் ஓணர் கணவரும் மனைவியும் காரில் வருவார்கள். மனைவியை ஒரு வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, கணவரும் காரும் சென்றுவிடும். கமல் ஓட்டிச்செல்வார். சிலமணி நேரம் கழித்து, மீண்டும் அந்த வீட்டு வாசலுக்கு கார் வரும். அந்த மனைவி காரில் ஏறிக்கொள்வார்.

அப்போது கணவன், ‘போன காரியம் என்னாச்சு? காயா பழமா?’ என்று கேட்பார் மனைவியிடம்.

அதற்கு மனைவி, ‘நான் போனா பழம் இல்லாம எப்படி?’ என்பார்.

‘அப்படீன்னா, காண்ட்ராக்ட் நமக்கு கிடைச்ச மாதிரிதானா?’ என்று கணவன் கேட்க, ’என் முன்னாடியே கையெழுத்து போட்டானே. ஆனா... மிருகம்’ என்பாள். ‘பத்துலட்சம் காண்ட்ராக்ட்டுங்கறதால பொறுத்துக்கிட்டேன்’ என்பாள். அப்போது ஆங்கிலத்தில் கணவன் சொல்ல, ‘தமிழ்லயே இருக்கட்டும்’ என்பாள் மனைவி.

‘தேங்க்யூ செல்லக்குட்டி. நான் செஞ்ச புண்ணியம்தான் இப்படியொரு மனைவி கிடைச்சது. என் மூலதனமே நீதானடி ராஜாத்தி’’ என்பார்.

இதையெல்லாம் கேட்ட கமல், காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு இறங்குவார். அந்த ஆள் என்ன என்ன என்று இந்தியில் கேட்பான். ‘ஏன் நிறுத்தினேன்னு கேக்கறியா? உன்னை மாதிரி மானங்கெட்டவன்கிட்ட வேலை பாக்கமுடியாது’ என்பார் கமல். ‘ஏய் தமிழ் தெரியுமா உனக்கு? பொய்யா சொன்னே. இப்படி நடுவழில நிறுத்திட்டுப் போறே. எனக்கு காரோட்டத் தெரியாதுடா’’ என்பான் அவன். ‘சாவுங்கடா’ என்று சொல்லிச் சொல்லுவார் கமல். மறக்க முடியாத காட்சி.

உறவுச் சிக்கல்களை சிடுக்கெடுப்பதில் வீரர்; அந்தச் சிக்கல்களுக்கும் தீர்வு சொல்லுவதில் சூரர்... கே.பாலசந்தர்.

’எதிர்நீச்சல்’ திரைப்படம். மாடிப்படி மாதுவான நாகேஷ்தான், பல பொருட்களைத் திருடினான் என்று நினைக்கும் போது, தேங்காய் சீனிவாசன் மாட்டிக்கொள்வார். அடி வெளுத்துவிடுவார்கள். கீழே விழுந்து கிடப்பார் தேங்காய் சீனிவாசன். போலீஸில் பிடித்துக்கொடுக்கலாம் என்று சொல்லும்போது, ’வேணாங்க. அவரு விழுந்துட்டாரு. எந்திரிக்கும் போது, நல்லவனாத்தாங்க நிப்பாரு’ என்பார் நாகேஷ். கலங்கடித்துவிடும் காட்சி இது.

’அபூர்வ ராகங்கள்’ திரைப்படம். மேஜரின் மகன் கமல். ஸ்ரீவித்யாவின் மகள் ஜெயசுதா. அப்பாவைக் கல்யாணம் செய்துகொள்ள ஜெயசுதாவும் அம்மாவை கல்யாணம் பண்ணிக்கொள்ள கமலும் நினைக்க... மேஜர் சொல்லுவார்... ‘நாம போகும்போது ஒரு அம்மா இல்லியே. இப்போ புதுசா அம்மா வந்திருக்காங்களேன்னு பாக்கறியா. நான் தான் ஸேம் ஓல்டு ஃபாதர். ஆனா அம்மா புதுசு. நாங்க ரெண்டுபேரும் சேந்து நிக்கிறோம். நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கிக்கங்க’ என்று சொல்லுவார். மொத்த தியேட்டரும் வெடித்துச் சிரிக்கும்.

கலாச்சாரச் சீரழிவை, பொட்டிலடித்தாற் போல் சொல்லுவார். அங்கே நாயகனின் குரலில், கே.பி.யின் கோபக்குரலே எதிரொலிக்கும்.

காதல். இதை பாலசந்தர் அளவுக்கு காதலித்தவர்கள் எவருமில்லை. காதலின் அகல, ஆழங்களைச் சொல்லும் போது, கே.பி.யின் பேனா, கவிதையாய் வாரியிறைக்கும்.

’மூன்று முடிச்சு’ கமலும் ரஜினியும் நடித்த திரைப்படம். பக்கத்துப் பக்கத்து வீட்டிலிருந்துகொண்டு காதலிக்கும் கமலும் ஸ்ரீதேவியும் துணி துவைக்கும் சத்தத்தைக் கொண்டே காதலாகிப் பேசிக் கொள்வார்கள். துவைக்கும் சத்தம் கொண்டு அழகுறக் காட்சி படுத்தியிருப்பார் இயக்குநர் பாலசந்தர்.

இவையெல்லாம்தான் பார்த்து, ’கே.பி. டச்’ என்று சொல்லிக் கொண்டாடிச் சிலிர்த்தார்கள், ரசிகர்கள்.

இருகோடுகள் தத்துவமெல்லாம் இன்றைக்கும் தேவை.

அந்தப் படத்தில் ஜெயந்தி சொல்லுவார்... ‘எட்டாவது படிக்கும் போது எங்க அம்மா படிப்பை நிறுத்திட்டாங்க. அதை நினைச்சு நினைச்சு அழுதுக்கிட்டே இருந்தேன். அப்புறம், ஒரு மாசத்துல, எங்க அம்மாவே செத்துப்போயிட்டாங்க. அந்தப் பெரிய துக்கம் வந்ததுமே, நான் படிக்கலியேங்கற துக்கம் ரொம்ப சின்னதாப் போச்சு. அதை நினைச்சுப் பாத்தேன். இதுக்கு பதில் சொல்லிட்டேன்’ என்பார். ’கரெக்ட் ஜெயா. ரெண்டு கோடுகளை வைச்சிக்கிட்டு, பெரிய தத்துவத்தையே சொல்லிட்டே’ என்பார் ஜெமினி கணேசன். 

ஜாலியாய் எழுதுவார்;

கேலி செய்து எழுதுவார்;

ரசனையும் ரகளையும் கலந்து ரவுசு பண்ணுவார்.

ஹீரோ என்றில்லை... படத்தின் கதை மாந்தர்கள் எவர் வேண்டுமானாலும் எவரிடம் இருந்து வேண்டுமானாலும் பளீர் பஞ்ச் வந்துவிழும். மொத்த தியேட்டரும் விசிலால் பறக்கும்.

காட்சிக்குத்தான் முக்கியத்துவம். அதேசமயம், ‘மெளன’ டயலாக்கிலும் கூட அப்ளாஸ் வாங்கிவிடும் பாலசந்தரின் பேனா. அதுதான் பாலசந்தர்.

’நினைத்தாலே இனிக்கும்’ படத்தில், இல்லையென்றும் பிறகு ஆமாம் என்றும் தலையாட்டுகிற காட்சி மறக்கவே முடியாதது.

‘சர்வர் சுந்தரம்’ படம். ‘உங்க வாழ்க்கைல எதுனா கஷ்டம் அனுபவிச்சிருக்கீங்களா?’ என்று நிருபர் கேட்பார். அதற்கு நாகேஷ்... ‘கஷ்டங்கறது சின்னக் கல்லு மாதிரிங்க. அதை கண்ணுக்குக் கிட்ட வைச்சி பாத்தோம்னா, அது உலகத்தையே மறைச்சிரும். அதையே தள்ளி வைச்சு பாத்தோம்னா,  அது என்னன்னு நமக்குத் தெரிஞ்சிரும். அதைத் தூக்கி காலுக்குக் கீழே எறிஞ்சிட்டோம்னா, அப்படியொண்ணு இருக்கறதா நாம நினைக்கவே போறதில்ல’ என்பார். அப்ளாஸ் அள்ளும் வசனம்.

‘அரங்கேற்றம்’. விபச்சாரப் பெண் பிரமிளா. அவளிடம் ‘நீ பிராமணப் பெண்ணா?’ என்று கேட்பார் சசி. ஆமாம் என்றதும் பளாரென அறைவார். ‘வெக்கமா இல்ல’ என்பார். உடனே பிரமிளா, ‘ஒருநிமிஷம்’ என்பார். சசியின் பனியனுக்குள்ளிருந்து பூணூலை வெளியே எடுத்துக்காட்டுவார். ‘நீ பிராமணன்தானே. உனக்கு வெக்கமா இல்ல’ என்று சொல்லிவிட்டு பொளேரென அறைவார். கிடுகிடுத்து, வெலவெலத்துக்  கைத்தட்டினார்கள் ரசிகர்கள்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மிகப்பிரமாண்ட தேன்மலை. இயக்குநர் சிகரத்தின் தேன் மலையில் இருந்து சின்னச் சின்னத் துளிகள்தான்... துகள்கள்தான் இங்கே! இவை... மைக்ரோ சாம்பிள் அவ்வளவே!

செஞ்சுரிக்கும் மேலான படங்கள் தந்த கே.பி. சாரின் படங்களும் வசனங்களும்... இன்றைய திரையுலகினருக்கும் நாளைய படைப்பாளிகளுக்கும்  ‘ஓபன் யுனிவர்சிட்டி!’

ஒரு சூரியன்...

ஒரு சந்திரன்...

ஒரேயொரு கே.பாலசந்தர்.

இந்த வீடியோவைக் காண...

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close