[X] Close

இயக்குநர்களில் சிகரம்... கே.பாலசந்தர்! - இன்று கே.பி.பிறந்தநாள்


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 13:03 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி எனும் தீப்பெட்டி சைஸ் கிராமத்தில் இருந்து வந்த, மிகப்பெரிய தீப ஒளி கே.பாலசந்தர். தமிழ் சினிமாவின் புதிய வெளிச்சப் பாய்ச்சல்.

பாண்டிய தேசமான மதுரைப் பக்கத்திலிருந்து படைப்பாளிகள் பலரும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர் இப்போது. அந்தக் காலத்தில், சோழ தேசத்தில் இருந்து சென்னைக்கு வந்து, கோடம்பாக்கதை பரபரப்பு ஏரியாவாக்கினார்கள். அப்படி வந்தவர்களில் முக்கியமானவர்... இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

தமிழ் சினிமாவில் டைட்டில் போடும்போது டைரக்‌ஷன் பெயர் போடும் போது முதன்முதலாக ரசிகர்கள் கைத்தட்டியது ஸ்ரீதரின் பெயர் போடும்போதுதான் என்பார்கள். அதையடுத்து, அப்படியொரு கைத்தட்டலைப் பெற்றவர் பாலசந்தர். ஆனால் ஒரு ஆச்சரியம்... இவர் பெயர் போடும்போது தியேட்டரை கைத்தட்டி ஆர்ப்பரிக்கும். அதேநேரம், அதுவரை இருக்கிற பின்னணி இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே. பாலசந்தர் என்று டைட்டில் போடும்போது இசையேயின்றி அமைதியாகியிருக்கும். இதுவும் கூட, ‘கே.பி. டச் என்று முத்திரை காட்டி, மனதில் பதிந்தது.

எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய்க்கு வசனம் எழுதினார். ஆனால் அது எம்.ஜி.ஆர். படமாகத்தான் இருந்தது. சிவாஜியை வைத்தும் எதிரொலி பண்ணினார். அதன் எதிரொலி... கே.பி.படமாகவும் இல்லாமல், சிவாஜி படமாகவும் இல்லாமல் போனது. ஏற்கெனவே செய்த ரூட்டுதான் சரி என்று முடிவெடுத்தார்.

ஏவிஎம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்க, இவர் கதைவசனத்தில் உருவான சர்வர் சுந்தரம்... இன்று வரைக்கும் மனதில் தேவையானபோதெல்லாம் ஒவ்வொன்றாக வாழ்க்கைக்கானதை சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் நாகேஷை நாயகனாக்கி நீர்க்குமிழி எனும் முதல் படத்தை இயக்கிய போது, அட... என்று வியந்தது தமிழ் சினிமா.

பாலசந்தர் எதுமாதிரி படங்களை இயக்கியிருக்கிறார் என்ற கேள்விக்குப் பதில்... எதுமாதிரி படங்களை அவர் இயக்கவில்லை!

ஆமாம்... நீர்க்குமிழி மாதிரி ஆஸ்பத்திரிக்குள் நடக்கிற கதை, அடுத்ததாக நான்கு கெட்டவர்கள் சிறையில் இருந்து தப்பிவந்து ஒரு வீட்டுக்குள் மிரட்டி தங்குகிற, டார்ச்சர் கொடுக்கிற நாணல், பார்வையற்றவருக்கும் நாயகனுக்கும் நடக்கிற மேஜர் சந்திரகாந்த், மாமியாருக்கும் சின்னமாப்பிள்ளைக்கும் நடக்கிற நீயாநானாவைச் சொன்ன பூவாதலையா... இப்படியாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்!

சமூகத்தின் தேவையாக தண்ணீர் தண்ணீரும் எடுப்பார். அரசியல் அழுக்கைச் சொல்ல அச்சமில்லை அச்சமில்லை என்றும் சொல்லுவார். வேலையில்லாத் திண்டாட்டத்தை வறுமையின் நிறம் சிகப்பில் வெளிச்சமிட்டுக் காட்டினார். எடுபிடி மாடிப்படி மாதுவையும் இருமல் தாத்தாவையும் மனசுக்குள் வீடு கட்டி, உட்கார்த்திவைத்திருக்கிறோம்.

அவள் ஒருதொடர்கதை கவிதாக்களை பேருந்து, ரயில் நிலையங்களில் தேடினோம். அவர்கள் அனுவுக்காக அவளின் ராமநாதனை நாலு அறை பொளேர்பொளேர் என அறையவேண்டும் என பல் கடித்தோம். அபூர்வ ராகங்கள் பைரவிக்காக சோக ராகம் பாடினோம். சிந்துபைரவியின் சிந்து, ஜே.கே.பி.யை விட மிகச்சிறந்த ஆலாபனையை இன்னும் உள்ளுக்குள் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறாள்.

பாமா விஜயம் மாதிரி ஃபுல்மீல்ஸ் காமெடி கொடுப்பார். தப்புத்தாளங்கள் மாதிரி நம்மை நெஞ்சுகனக்க அழச் செய்வார். நிழல் நிஜமாகிறது ஷோபாவையும் சுமித்ராவையும் பெண்ணீயத்தின் கண்களாகப் பார்த்தனர் ரசிகர்கள்.

புன்னகையையும் புன்னகையில் நடித்த காதல்மன்னனையும் மறக்க முடியாதது போலவே, புன்னகை மன்னனில் நடித்த காதல் இளவரசனையும் மறக்கவே முடியாது!

நாகேஷ், ஜெமினிகணேசன், ஜெயந்தி, கமலஹாசன், ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தர்ராஜன் என்பவர்களையெல்லாம் இவரைப் போல் பயன்படுத்தி ஒளிரச் செய்தவர்கள், மிளிரச் செய்தவர்கள் இல்லை. கமலுக்கு ரீ என்ட்ரியும் ரஜினிக்கு எண்ட்ரியும் தந்தார். ஸ்ரீப்ரியா, எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி.மகேந்திரன், நாசர், பிரகாஷ்ராஜ் என பாலசந்தரின் வெளிச்சம் பட்டு வெளிச்சமானார்கள். சினிமாவுக்கு வெளிச்சம் பாய்ச்சினார்கள்.

எம்.எஸ்.வி.யுடனும் கண்ணதாசனுடனும் இணைந்து கலக்குவார்.  வாலியை வைத்துக்கொண்டு வாலிபால் விளையாடுவார். வைரமுத்துவுடன் தங்கம்தங்கமாய்ப் பாடல்களை வழங்குவார். முதல் படத்திலேயே வி.குமாரை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி, அவரிடம் இருந்த நல்ல நல்ல பாடல்களைப் பெற்றுத்தந்தார். தடக்கென்று வி.எஸ்.நரசிம்மனை அழைத்து, அவரின் ஆர்மோனியக் கைதூக்கி, அடையாளம் காட்டினார். ‘வாங்க... வாங்க..’ என்று கீரவாணியை மரகதமணியாய் அறிமுகப்படுத்திக் கொண்டாடினார்.

சிந்துபைரவிக்கும் புதுப்புது அர்த்தங்களுக்கும் புன்னகைமன்னனுக்கும் உன்னால் முடியும் தம்பிக்கும் இளையராஜாதான் பெஸ்ட் சாய்ஸ் என்று எல்லோரும் கொண்டாடும் வகையில், அவரிடம் சென்று, ஆல்டைம் ஹிட்டுகளை அள்ளியெடுத்துத் தந்தார்.

சினிமா பாஷையில் டைரக்‌ஷன் டச் என்றொரு வார்த்தை மிகப்பிரபலம். ரொம்பவே முக்கியம். அப்படியொரு டைரக்‌ஷன் டச் என்பதை காட்சிக்குக் காட்சி வசனத்தாலும் காமிரா நகர்வுகளாலும் பின்னணி இசையாலும் பாடலாலும் மெளனத்தாலும் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

ஒரு கதை, அதற்கான ஸ்கிரிப்ட், கதாபாத்திரத் தன்மையுடன் வசனங்கள், தேவையான பாடல்கள், அளவெடுத்த நடிப்பு என நூல்பிடித்துச் சென்று சினிமாவுக்கு புதுப்பாதை போட்ட புதுமைவிரும்பி பாலசந்தர் என்று கொண்டாடுகிறார்கள், திரையுலகத்தாரும் ரசிகர்களும்!

 

சினிமா சொல்லும் பாணி மாறியிருக்கலாம். பாஷைகள் கலந்திருக்கலாம். படத்தின் நீள அகலங்கள், லேசுப்பட்ட கதைகள் எனக் கொண்டிருக்கலாம். ஆனால் எல்லாக்காலத்துக்கும், இனி வரக்கூடிய எல்லாருக்கும் கே.பி. என்கிற கே.பாலசந்தர் எளிமையான வாத்தியார். அவரின் படங்கள் எல்லாமே, எப்படி படம் பண்ணுவது, சொல்லுவது என்பதற்கான பாடங்கள்!

 

புதுசுபுதுசாய் மாணவர்கள் வரும் வரைக்கும் பாலசந்தர் எனும் வாத்தியாரின் புகழும் மங்காது ஒளிவீசிக்கொண்டே இருக்கும்!

 

இன்று 9.7.19ம் தேதி கே.பாலசந்தரின் 89வது பிறந்தநாள். இந்தநாளில், சிகரத்தைப் போற்றுவோம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close