[X] Close

நான் சென்னைப் பையன்! - வசந்த் ரவி பேட்டி


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 11:53 am
  • அ+ அ-

-ஜெயந்தன்

‘தரமணி’ படத்தில் தோல்விகள் துரத்தும் கதாநாயனாக அறிமுகமாகி ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்துக்கொண்டவர் வசந்த் ரவி. தற்போது ‘ராக்கி’ என்ற தனது இரண்டாம் படத்தில் நடித்துமுடித்துவிட்டார்.

பாரதிராஜா வில்லன், கதாநாயகி இல்லாத கதை எனக் கவரும் அம்சங்களுடன் உருவாகியிருக்கும் ‘ராக்கி’ படத்துக்கு ‘டப்பிங்’ பேசிக்கொண்டிருந்தவரை ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து… 

தலைநிறைய முடி, ‘தாடி, மீசையுடன் கூடிய உங்கள் தோற்றம் ‘ராக்கி’ படத்திலும் தொடர்கிறதே? வசந்த் ரவியின் நிரந்தர ‘கெட்-அப்’ இனி இதுதானா?

‘தரமணி’யில் நடிப்பதற்கு முன் வேறு தோற்றத்தில்தான் இருந்தேன். எனது கதாபாத்திரத்துக்குத் தலைமுடி, தாடி, மீசை எல்லாமே கன்னாபின்னாவென்று தேவை, ஒரு ஒழுங்கின்மையைக் காட்டும்விதமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் ராம் சொன்னார். இப்போது ‘ராக்கி’ படத்தின் இயக்குநரும் தாடி மீசை கண்டிப்பாகத் தேவை என்றார்.

எனது மூன்றாவது படத்துக்கு இவை தேவையில்லை என்றால் இயல்பான தோற்றத்துக்கு மாறிவிடுவேன். கதைக்காக, கதாபாத்திரத்துக்காக எப்படி வேண்டுமானாலும் என்னை மாற்றிக்கொள்ளத் தயார்.

நடிகர் என்பவர் கதாபாத்திரத்துக்காகத்தானே தவிர, நடிகருக்காக எழுதப்படுவதாகக் கதாபாத்திரம் இருக்கக் கூடாது என்கிறேன். இந்த அடிப்படையை, அனுபம் கெரும் இயக்குநர் ராமும் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராம் சரி; அனுபம் கெருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

அவர் நடத்திவரும் ‘ஆக்டர்ஸ் பிரிப்பேர்’ நடிப்புப் பள்ளியின் முன்னாள் மாணவன் நான்.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் நீங்கள். ஆனால் ‘தரமணி’யில் அதற்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் எப்படிப் பொருந்த முடிந்தது?

நடிப்பு என வந்துவிட்டால், நாம் எப்படி வளர்ந்தோம், நமது பின்னணி என்ன என்பதைப் பார்க்க முடியாது. தரமணியில் சொந்த வாழ்க்கையை மறந்துவிட்டு, கதாபாத்திரத்துக்கான வாழ்க்கைக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அதற்கான பயிற்சி எனக்கு இருந்தாலும், தெரு முனைகளுக்கும் அங்கிருக்கும் சின்னச் சின்ன டீக்கடை, பங்க் கடைகளுக்கும் என்னைக் கால்நடையாகவும் பைக்கிலும் அழைத்து சென்றவர் இயக்குநர் ராம் அண்ணாதான்.

17.jpg 

அங்கே மொய்க்கும் ஈக்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கையைப் பார்க்க முடியாது என்ற நிதர்னத்தை அவர் வழியாகக் கற்றுக்கொண்டேன். அதேபோல் சினிமா உலகில் நாம் பழகும் படைப்பாளிகள், தொழிலாளர்கள் பெரும்பாலும் சாமானியக் குடும்பப் பின்னணிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் ஒருவனாக நான் கரைய விரும்பினேன். இப்போது அவர்களோடு கரைந்தும்போய்விட்டேன்.

உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் எப்படிபட்ட பிள்ளை?

குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் நான் இனிமையானவன். அம்மாவுக்கு நான் முதல் பிள்ளை என்பதால் பொத்திப்பொத்தி வளர்த்து வந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே எம்.பி.பி.எஸ் முடித்தேன்.

பின்னர் முதுகலையில் மருத்துவ நிர்வாகவியல் பயின்று அப்பல்லோ மருத்துவமனையில் ஒருவருடம் வேலை செய்ததும் அவருக்காகத்தான். ஒருகட்டத்தில் சினிமா எனது ரகசியக் காதலி என்று தெரிந்ததும் நடிக்க அனுமதி கொடுத்தார்கள். என்னை பலரும் வட இந்தியன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சென்னைப் பையன். சென்னையில் பிறந்து வளர்ந்த தாமிரபரணிக்காரன்.

இரண்டாவது படத்தை முடிவு செய்ய ஏன் இத்தனை தாமதம்?

‘தரமணி’ தந்த புகழும் வெற்றியும்தான் காரணம். என் மீது ரசிகர்களுக்கு உருவாகியிருந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக, எந்தப் பிம்பத்துக்குள்ளும் என்னைச் சிக்க வைத்துவிடாத கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஆனால், நிறையக் காதல் கதைகள்தான் என்னைத் தேடி வந்தன. ‘ராக்கி’ படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்கூட எனக்குக் காதல் கதை சொல்லத்தான் வந்தார். அவரது இயக்கத்தில் முன்னணி நாயகன் ஒருவர் நடிப்பதாக இருந்த ‘ராக்கி’ கதையைக் கேள்விப்பட்டு, அதை அவரிடம் கேட்டு வியந்துபோனேன்.

இதுதான் எனது இரண்டாவது படம் என்று முடிவுசெய்தபோது, அதற்குள் பாரதிராஜா எனும் இமயம் வந்தது எனக்குப் பெருமை. சிறு வயதிலிருந்தே குடும்ப நண்பராக இருக்கும் பாரதிராஜா சார், இதில் வில்லனாக நடித்திருக்கும் விதத்தைப் பார்த்து மிரண்டுபோவீர்கள். கதாநாயகி கிடையாது.

‘இதுவொரு கேங்ஸ்டரின் வாழ்க்கைக் கதை. ஆக் ஷன் திரில்லர் வகைப் படம். தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய திரைக்கதை. ஒரு நடிகனாக இது எனக்கு அடுத்த கட்டம் என்று தைரியமாகக் கூற முடியும்.

ஆண்ட்ரியாவுடனான நட்பு தொடர்கிறதா?

ஆண்ட்ரியா, அஞ்சலி இரண்டு பேருமே சிறந்த தோழிகள்தான். ‘சிந்துபாத்’ படம் பார்த்துவிட்டு அஞ்சலியின் நடிப்பைப் பாராட்டினேன். நன்றி தெரிவித்தார். இருவருமே திறமையான கலைஞர்கள். அவர்களுடனான நட்பை மதிக்கிறேன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close