[X] Close

டிஜிட்டல் மேடை 34: டிகாப்ரியோ காட்டும் பாதை


34

  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 11:10 am
  • அ+ அ-

-எஸ்.எஸ்.லெனின்

பல்லாவரம் ஈஸ்வரி நகர் பொதுக் கிணற்றின் படத்துடன், சென்னையின் வரளும் நீராதாரங்கள் குறித்த கவலையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் பகிர்ந்திருந்தார் ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ.

அவரது தயாரிப்பு, பின்னணிக் குரலுடன் வெளியாகி இருக்கும் ‘ஐஸ் ஆன் ஃபயர்’ என்ற ஆவணப் படம், ஆர்க்டிக் துருவத்தில் பனிப்பாறைகள் உருகுவதற்கும் சென்னை போன்ற பகுதிகளின் கடும் வறட்சிக்கும் தொடர்புண்டு என்கிறது. ஹெச்.பி.ஓ வெளியிட்டிருக்கும் இந்த ஆவணப் படத்தை இந்தியாவில் ‘ஹாட் ஸ்டார்' மூலம் பார்க்கலாம்.

‘ஸீ ஆஃப் ஷேடோஸ்', ‘பிஃபோர் தி ஃபிளட்’ என டிகாப்ரியோவின் இதற்கு முந்தைய சூழலியல் ஆவணப்படப் பதிவுகள் அனைத்தும் வரவேற்புப் பெற்றவை. இந்த வரிசையில் அவரது தயாரிப்பு, பின்னணிக் குரலுடன் கடந்த மாதம் வெளியான ‘ஐஸ் ஆன் ஃபயர்’ ஆவணப் படத்தை லெய்லா கான்னர்ஸ் இயக்கி உள்ளார்.

தொழிற்புரட்சியைத் தொடர்ந்து சுமார் 1.4 ட்ரில்லியன் டன் கார்பனை எரித்து, சுற்றுச்சூழலுக்குக் கொடும் கொடையாகச் சூட்டினைத் தந்துள்ளோம். பதில் வினையாகப் பூமி மீதான சூழலியல் பாதிப்புகள் ஆர்க்டிக் துருவத்தின் மூலம் தலைகாட்டத் தொடங்கிவிட்டன.

அங்கிருக்கும் பனிப்பாறைகள் உருகி கடலின் பரப்பை உயர்த்துவதை ‘டைம் லாப்ஸ்’ முறையில் ஆவணப் படம் பதிவுசெய்திருக்கிறது. இதைத் தவிர்த்து பெரும்பாலான காட்சிகள் ட்ரோன்கள் உதவியுடன் பருந்துப் பார்வையில் விரிகின்கிறன.

எங்கோ ஒரு துருவ முனையில் பனிப்பாறைகள் உருகுவது தொடர்பான சூழலியல் பிரச்சினையாக இவற்றைக் கடந்துசெல்ல முடியாது. அவை, உலகின் மற்றொரு மூலையில் ஆறுகள் வறண்டு போகவும், மழை பொய்க்கவும், குடிநீருக்காக நாம் அல்லாடுவதற்கும் காரணமாவதைப் புரிந்துகொண்டாக வேண்டும். இதுவே உலகின் இன்னொரு மூலையில் கடும் சூறாவளியாகவும் வேறொரு முனையில் காட்டுத் தீயாகவும், மற்றுமொரு நாட்டில் ஊழி வெள்ளமாகவும் கோரமுகம் காட்டும் என்கிறார் டிகாப்ரியோ.

கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பது, பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிம எரிபொருட் கள் மிதமிஞ்சி பயன்படுத்தப்படுவது, காடழிப்பு, வரைமுறையற்ற மீன் பிடிப்பு எனச் சூழலியல் நாசத்துக்கான பல சுவடுகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். கார்பன் டை ஆக்ஸைடை விடப் பல மடங்கு ஆற்றல் அதிகப் பாதிப்பை உண்டாக்கும் மீத்தேன் பசுங்குடில் வாயு குறித்த அறிமுகமும் ஆழமான அலசலும் இதில் இடம்பெற்றுள்ளன.

7.jpg 

சூழலியல் சீரழிவுகளைச் சுட்டிக் காட்டி பார்வையாளர்களைக் குற்ற மனப்பான்மையில் தள்ளுவதும் சூழலியல் மீதான அவர்களின் அக்கறைக்கு இடையே பள்ளத்தை உருவாக்குவதுமான வழக்கமான பயமுறுத்தல் கள் ஆவணப்படத்தில் உள்ளன.

அவற்றுக்கு அப்பால், சூழலியல் சீரழிவுகளிலிருந்து மீள்வதற்கான நம் அனை வரின் கைகளிலும் எஞ்சியிருக்கும் வாய்ப்புகள், உலகம் முழுவதிலும் அவை தொடர்பாக அரை நூற்றாண்டுக் காலமாக நடந்து வரும் அறிவியல் ஆராய்ச்சிகள், மற்றும் இதர முன்னெடுப்புகளைச் சாமானியருக்கும் புரியும் வகையில் விளக்குகிறார்கள்.

நிரந்தரமாக, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைப் பூமிக்கு அடியில் சேகரித்து, பாறைப் படிவுகளை உருவாக்குவது, கார்பன் டை ஆக்ஸைடு  வாயுவைக் கொண்டு செயற்கையாக ஒளிச்சேர்க்கை நடத்தி அவசியமான உணவு மற்றும் உரப் பொருட்களைத் தயாரிப்பது, பசுமைப் பொருளாதாரம் வாயிலாகப் பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளுடன் பூமியைக் காப்பாற்றும் முயற்சி, மரபுசாரா ஆற்றல்களுக்கான முக்கியத்துவமாய்க் கடல் அலை, சூரிய மின்சக்தி, காற்றாலை உள்ளிட்டவற்றில் புதிய தலைமுறை தொழில் நுட்பங்களையும் விளக்கு கிறார்கள். இதுவரை சூழலில் நாம் சேர்த்துள்ள கார்பனின் அளவு, இனியும் சேர்க்க வாய்ப்புள்ள கார்பன் என ஒட்டுமொத்த கார்பன் தொகுப்பிலிருந்து அகற்றப்பட வாய்ப்புள்ள கார்பனின் பங்கு உள்ளிட்டவை அடங்கிய கார்பன் பட்ஜெட் விளக்கங்கள் சுவாரசியமானவை.

வெறும் அறிவியல் விளக்கங்கள், புள்ளிவிவரங்களின் தொகுப்பு களாக அல்லாது, சூழல் குறித்த தனிமனிதர்களின் ஆர்வம், முந்தைய அறிவுத் தெளிவைப் பொறுத்துக் கூடுதலாகப் புரிந்துகொள்ளவும் புதிதாகக் கற்றுக் கொள்ளவும் இந்த ஆவணப் படம் உதவும். ஓர் அறிவியல் ஆசிரியரின் அக்கறையான குரலுடன் ஆவணப் படம் நெடுக டிகாப்ரியோவின் குரல் நம்மை வழிநடத்துகிறது.

ஆவணப் படத்தின் புவிச் சூழல், ஆராய்ச்சிகள், அறிவியலாளர் பேட்டிகள் எனப் பலவும் அமெரிக் காவை மையமாகக் கொண்டே வருகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க கழன்றுகொண்டது தொடர்பான விமர்சனங்களைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள்.

ஆவணப் படத்தின் முன்னோட்டத்தைக் காண:

Ice on Fire (2019) 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close